
ஒரு பேராசிரியர், தனது மாணவர்கள் ஒவ்வொருவரையும் தான் பெற்ற பிள்ளையைப் பேணும் அக்கறையுடன் பேணினார். தேர்வுக்கான பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதுடன், வாழ்க்கைக்கான பாடங்களையும் சொல்லிக்கொடுத்தார்.
படிப்பு முடிந்து, பல்வேறு இடங்களில் பணியாற்றப் பிரிந்தாலும், மாணவர்கள் அந்த ஆசிரியரை மறக்காமல் தொடர்புகொண்டிருந்தனர். காலம் செல்லச் செல்ல, மாணவர்களிடம் ஒரு மாறுதலைப் பேராசிரியர் உணர்ந்தார்.
அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் அனைவருமே ஏதேதோ வலைகளால் சூழப்பட்டுக்கொண்டிருந்தனர். தொலைபேசியில் பேசும்போதும், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும்போதும், எதையோ இழந்த கவலை அவர்களிடமிருந்து வெளிப்படுவதனை அறிந்து எல்லோரும் ஒரு நாள் சந்திக்கலாமா....?' என்று, தன்னுடன் தொடர்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினார் பேராசிரியர்.
மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட மாணவர்கள், குறிப்பிட்ட நாளில் அவரது இல்லத்தில் கூடி பழைய நினைவுகளைப் பேசிச் சிரித்தபடி பொழுது போனது.
நானே இன்று உங்களுக்குத் தேனீர் தயாரித்துத் தரப்போகிறேன் என்று கூறிய பேராசிரியர் தயாரித்தத் தேனீரை அதற்கான பாத்திரத்தில் ஊற்றி ஒரு மேசை மீது வைத்தார்.
பேராசிரியர் வித்தியாசமாகச் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த குவளைகள் சில; பொன்னிறத்தில் மினுக்கும் குவளைகள் சில; வெள்ளிக் குவளைகள் சில; பீங்கான் குவளைகள் சில: சாதாரணப் பயன்பாட்டுக் குவளைகள் சில; அலுமினியம் குவளைகள் சில என தேநீர் ஊற்றி மேசையில் பரப்பினார்.
மிகக் குறிப்பாக, மாணவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் குவளைகளை மேசையில் பரப்பி வைத்தார்.
அனைத்துக் குவளைகளிலும் ஒரே அளவு தேனீரை ஊற்றிய பேராசிரியர், 'வந்து தேனீர் எடுத்துக்கொள்ளுங்கள்.என்று தனது முன்னாள் மாணவர்களிடம் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
தேனீர் எடுக்க வந்தவர்கள், விதவிதமான குவளைகளைப் பார்த்தனர். எல்லோருமே பழைய நண்பர்கள்தானே. எனவே ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு, இருப்பதிலேயே அழகான விலையுயர்ந்த குவளைகளையே எல்லோரும் எடுத்துக்கொண்டனர்.
அலுமினியக் குவளைகளிலும் சாதாரணக் குவளைகளிலும் இருந்த தேனீரைச் சீண்டுவாரில்லை.
கைகளில் தேனீர் எடுத்துகொண்டு வந்தமர்ந்த தனது மாணவர்களிடம் பேராசிரியர் கேட்டார். ஏன் எவருமே அந்தக் குவளைகளை எடுக்கவில்லை..?"
அவை மீந்துவிட்டன சார்... நாங்கள் எல்லோருமே எடுத்துக்கொண்டோம்...' என்றனர் மாணவர்கள்.
எண்ணிக்கை தெரியாமல் அதிகமான குவளைகளில் தேனீரை நான் ஊற்றிவிட்டதாக நீங்கள் எல்லோருமே நம்புகிறீர்களா? என்றார் அவர்.
வந்திருந்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் 'சுரீர் என்றது.
எல்லாக் குவளைகளில் இருப்பதும் ஒரே சுவையுள்ள தேனீர்தான் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் எல்லோருமே புறத்தோற்றம் அழகாக இருந்த குவளைகளையே எடுத்தீர்களே, ஏன்.? தேனீர் முக்கியமா அல்லது குவளை முக்கியமா..?" என்று கேட்டார் பேராசிரியர்.
மாணவர்கள் அனைவரும் ஒருவித சங்கடத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து பதிவை எதிர்பார்க்காமல், பேராசிரியரே சொல்லத் தொடங்கினார்.
நம்மிடமுள்ள செல்வம், நமது பதவி, பெருமை, அதிகாரம் போன்றவை, அந்தக் குவளைகள்போல அதிலுள்ள தேனீர்தான் நமது வாழ்க்கை.
குவளையில்லாவிட்டால் தேனீரை ரசித்துக் குடிக்க முடியாது. அதேபோல் பணம், வசதிகள், செல்வாக்கு இல்லாவிட்டால் வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க முடியாது. இது மறுக்க முடியாத உண்மை.
ஆனால், முக்கியம் தேனீர்தானே தவிர குவளையல்ல. அலுமினியக் குவளையிலும் அதே சுவையுடன் தேனீரை ரசித்துக் குடிக்கலாம்.
அழகான வேலைப்பாடுகள் மிகுந்த, விலையுயர்ந்த குவளைகளே வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், தேனீர் ஆறிப்போய் சுவை குன்றி, குடிக்கவே முடியாத வண்ணம் வீணாகிவிடுவதை மறக்கலாமா...?
பணமும், வசதியும் பெருமையும்தான் முக்கியம் என்று தேடி ஓடிக்கொண்டிருப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வீணடித்துவிடலாமா...!" என்றார்.
பணம் முக்கியம்தான் என்றாலும் பணத்துக்கான தேவைகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற தெளிவு பிறந்ததால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.