
வாழ்க்கையில் பலர் ஒன்றுமில்லாத பிரச்னையில் வலிந்து போய் சிக்கிக்கொண்டு கவலையும், சோகமும், கோபமும் கொள்கிறார்கள்.
இதிலிருந்து விடுபட முடியும் என்று தெரிந்திருந்தாலும் விலக மறுக்கிறார்கள். நிறைவு என்ற உணர்வு இல்லாமல் போனால் வாழ்க்கையில் மாறிப்போகும். இதற்குஉதாரணம்…
குட்டிப் பையன் ஒருவன் கையில் ஒரு ஜாடியுடன் அறைக்குள் நுழைந்தான். சமைத்துக் கொண்டிருந்த அம்மா, அதை பார்த்ததும் கோபமாகிவிட்டார்.
"அது விலை உயர்ந்த ஜாடி, உடைத்து விடப்போகிறாய்...
பத்திரமாக எடுத்துப்போய் வை என கண்டிப்புடன் சொன்னாள்.
பையன் சோகமாக இருந்தான். அம்மா! "என் கை இந்த ஜாடிக்குள் மாட்டிக்கொண்டது. வெளியில் எடுக்க முடியவில்லை அதனால் தான் தூக்கிக்கொண்டு வந்தேன்" என்றான்.
அம்மா, பதறிப்போய் அடுப்பை அணைத்துவிட்டு வந்தார் .
பையனின் கை மணிக்கட்டைத்த் தாண்டி அதற்குள் மாட்டிக் கொண்டு இருந்தது. கை என்னவோ குட்டியாகத்தான் இருந்தது. ஜாடியின் குறுகிய வாய் வழியாக அது வெளியில் வரவில்லை.
அம்மா இழுத்துப் பார்த்துவிட்டு அப்பாவை அழைத்தாள்.
மகனின் கையில் தண்ணீரும், சோப்பும் தடவி நைசாக உருவி பார்த்தாள். பிறகு துடைத்துவிட்டு எண்ணெய் தடவி நைசாக உருவி இழுத்துப் பார்த்தாள். வலி தாங்க முடியாமல் பையன் கத்தினான்.
ஒன்றும் முடியவில்லை என்பதை உணர்ந்த அப்பா, "பையனிடம் அன்பாகப் பேசினார். "நீ தான் உன் முயற்சியில் எப்படியாவது கையை வெளியில் இழுக்க வேண்டும். உனக்கு ‘’சாக்லேட் வாங்கிக் கொள்ள 100 ரூபாய் தருகிறேன்" என்றார்.
அப்பா, உண்மையாகவா? என்று பையன் ஆச்சரியத்துடன் கேட்டான். அடுத்த நொடி அவன் கை வெளியில் வந்துவிட்டது. ஜாடிக்குள் ஏதோ சில்லறைகள் சிதறும் சத்தம் கேட்டது.
"என்ன அது? என்று கேட்டார் அப்பா.
"ஜாடிக்குள் கொஞ்சம் நாணயங்கள் இருந்தன. சாக்லேட் வாங்குவதற்காக அவற்றை எடுத்தேன்.
அப்போதுதான் கை சிக்கிக்கொண்டது. நீங்கள் தரும் 100 ரூபாய் அதைவிட அதிகம். அதனால் சில்லறைகளைப் போட்டு விட்டேன்" என்றான் பையன்.
கைக்குள் நாணயங்களை இறுக்கமாக வைத்து மடக்கியிருந்ததால்தான். அவனால் கையை வெளியில் எடுக்க முடியவில்லை என்பது அப்பாவுக்குப் புரிந்தது.
வாழ்க்கையில் பலரும் இப்படித்தான் செய்கிறார்கள்.
குளிர்காலத்தில் போர்வையை தேடும் இரவுகளில் இந்த வெயிலே பரவாயில்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளலாம், என்ற நினைப்பு எழும். கோடை வெயில் கொளுத்தும்போது மழைக்கு ஏங்குவார்கள். இப்படி இயற்கையின் பருவத்தை மட்டும் அல்ல தங்கள் பருவத்தையும் அதன் இயல்புகளுடன் பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. குழந்தையாக இருக்கும்போது வளர்ந்து பெரிதாகி மதிப்பும் மரியாதை பெறவேண்டும் என ஏங்குவார்கள்.
வளர்ந்த பிறகோ குழந்தையாகவே பேசுவார்கள்
20 வயதில் 'எப்போது வேலைக்கு போய் வீடு கட்டி திருமணம் செய்து வாழ்வில் செட்டிலாக போகிறோமோ' என நினைப்பார்கள்.
நடுத்தர வயது தாண்டும்போது இழந்த இளமையை நினைத்து வருந்துவார்கள்.
பலரும் வாழ்க்கையில் இப்படித்தான் நினைத்து, தங்களால் இதிலிருந்து விடுபட முடியும் என்று தெரிந்து இருந்தாலும் விலக மறுக்கிறார்கள். நிறைவு என்ற உணர்வு இல்லாமல் போனால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும்.
கிடைத்ததில் நிறைவு பெறும் உணர்வே இந்த எல்லாக் கவலைகளுக்கும் மருந்து. அதனால் கிடைத்ததில் நிறைவு பெற்றால் வாழ்க்கை நிச்சயம் நிறைவு பெறலாம்.