
நிதானம் என்னும் அற்புதமான ஆயுதத்தை பயன்படுத்துபவர்கள் எதையும் சாதிப்பார்கள். நிதானம் என்பது ஒருவரின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாகவும் அதே சமயம் கவனமாகவும் செயல்படுவதை குறிக்கும். எதற்கும் அவசரப்பப்படாமல் சிந்தித்து செயல்படுவது நிதானத்தின் வெளிப்பாடாகும். நிதானத்தை கடைபிடிப்பவர்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் ஒருவித கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள்.
பதறாத காரியம் சிதறாது என்பார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு காலில் சுடு கஞ்சியை ஊற்றியது போல் பரபரப்பாக செயல்படுவார்கள். அவசரப்பட்டு செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவோ, கவலைப்படவோ மாட்டார்கள். இப்படி அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் தவறுகளுக்கு வழிவகுக்கும். நின்று நிதானமாக எடுக்கும் முடிவுகள் சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவும். அவசர அவசரமாக முடிவுகளை எடுத்து பின்பு அவஸ்தைப்படுவதை தவிர்க்க முடியும்.
நிதானமாக செயல்படுவதும், பேசுவதும் நல்ல உறவுகளை வளர்க்க உதவும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த பின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் பேசுபவர்கள் நல்ல உறவுகளை இழக்க வேண்டி வரும். நிதானமற்ற பேச்சால் உறவுகளில் மனக்கசப்பு ஏற்பட்டு விரிசல்களும், பிரிவுகளும் உண்டாகும். இதனால் தேவையற்ற மன உளைச்சல்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும். எனவே பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். எதிலும் நிதானமாக செயல்படுவது மனஅமைதிக்கு வழி வகுக்கும்.
நிதானம் ஒருவரை அவர்களுடைய இலக்குகளை அடையவும், சாதனை புரியவும் உதவும். நிதானம் என்னும் சிறந்த குணம் ஒருவருடைய வாழ்க்கையில் பல அம்சங்களில் நேர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணும். நிதானம் என்பது விவேகம், தைரியம், மனிதாபிமானம், நீதி, அதீத குணம் ஆகிய வலிமைகளின் செயல் மதிப்பீட்டில் உள்ள ஆறு நல்ல பண்புகளில் ஒன்றாகும். நிதானம் தவறும்பொழுது நாம் இழப்பதற்கு நிறைய விஷயங்கள் வரிசையில் காத்திருக்கும். எனவே பிரச்னைகள் அதிகரிக்கும் பொழுது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியது கோபத்தை அல்ல; நிதானத்தை தான். இதுதான் நமக்கு நிம்மதியை பெற்றுத்தரும்.
நிதானமாக செயல்படுவதன் மூலம் சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு பதட்டப்படாமல் சரியான முடிவை எடுக்க முடியும்.
என்ன நடக்கிறது, என்ன எதிர்பார்க்கப்படுகிறது, என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஆராய்ந்து சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். ஒரு பிரச்சனையை அல்லது சிக்கலை எதிர்கொள்ளும் பொழுது உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல் பல மாற்று வழிகளைப் பற்றி யோசித்து ஒவ்வொரு வழிக்குமான சாதக, பாதகங்களை ஆராய்ந்து எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்க தோல்வி என்பது நம்மிடம் தோற்றுத்தான் போகும்!
கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கும் பொழுது நிதானத்தை இழந்துவிடாமல் யோசித்து நல்ல முடிவு எடுப்பது நல்லது. நிதானம் என்னும் சிறந்த அற்புதமான ஆயுதத்தைப் பயன்படுத்தி நம்மால் நினைத்த எதையும் சாதிக்க முடியும்.
உண்மைதானே நண்பர்களே!