
நேற்று என்பது உடைந்த பானை. இன்று என்பது நம் கையிலிருக்கும் வீணை. நாளை என்பது மதில் மேல் பூனை. இது ஒரு புகழ் பெற்ற வாக்கியம். நேற்று என்பது இறந்த காலம். இறந்துபோன ஒரு விஷயத்தை நாம் எதற்காக ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் எங்க காலம் மாதிரி வராது என்று சொல்லிக்கொண்டே இருப்பர். எல்லா காலமும் நல்ல காலம்தான். நாம் அதை அனுபவித்து வாழ்வதில் இருக்கிறது வெற்றியும் மகிழ்ச்சியும்.
நம்மில் பலர் எப்போதும் தன் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்களை நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். இதனால் ஏதாவது நன்மை இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லவேண்டும். தினம் தினம் நொடிக்கு நொடி நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நேற்றைய வாழ்வைப் பற்றியோ நாளைய வாழ்வைப் பற்றியோ கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது.
ஒவ்வொரு நொடியும் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்வில் முக்கியமான நிமிடங்களே. இதை உணர்ந்து செயல் படுபவர்கள் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம். நல்ல நேரம் வரவில்லை என்று யோசித்துக்கொண்டே இருப்பவர்கள் தோல்வியாளர் களாக மிகச் சுலபத்தில் மாறுகிறார்கள்.
சிலர் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள். நாளை என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து நினைத்தே இன்றைய நல்ல நாளினை கோட்டைவிடுபவர்களாக மாறிவிடுகிறார்கள். நாளை நமக்கு விடியுமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் இன்று விடிந்து விட்டது. நமக்கான நாள் உருவாகிவிட்டது. அதை நாம் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிதர்சனம் நம் முன்னே இருக்க தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய கவலை எதற்கு ?.
இன்று நம்மால் என்னென்ன நல்ல விஷயங்கள் செய்யமுடியும் என்பதையும் நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை எவ்வாறு நேர்மையான முறையில் சம்பாதிப்பது என்பதையும் திட்டமிட வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் இன்றைய தினம் நமக்கானது. இன்று நாம் செய்யும் திட்டமிட்ட செயல்கள் நமக்கு நல்லதொரு வாழ்க்கையை உருவாக்கும் என்று திடமாக நம்பவேண்டும்.
நேற்று என்பது இறந்தகாலம். இறந்துபோன எதுவுமே நமக்கு இன்பத்தைத் தராது. அது நமக்குத் துன்பத்தையே தரும். நம் வாழ்வில் எப்போதோ நடந்து போன கசப்பான விஷயங்களை இன்னும் ஏன் நம் மனதில் பதித்து அதை அவ்வப்போது நினைத்துத் துன்பப்பட வேண்டும்.
“பத்து வருஷத்துக்கு முன்னாலே அங்கே ஒரு கிரவுண்டு நிலம் அம்பதாயிரம் ரூபாய்தான். என் நண்பர் ஒருத்தர் அப்பவே ரெண்டு கிரவுண்டு வாங்கிப் போட்டுட்டாரு. இன்னைக்கு அவரு கோட்டீஸ்வரன். அப்ப நான் வாங்காம விட்டது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா ?” என்று கோட்டைவிட்ட பழைய விஷயத்தைப் பேசியே தங்களை கஷ்டப்படுத்திப் கொள்ளுபவர்களைப் பார்க்கிறோம். இதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?. போனது போயிற்று. அது திரும்பக் கிடைக்கப் போவதில்லை. இன்று நாம் சரியாக திட்டமிடப் பழகிக்கொள்ள வேண்டும்.
நண்பர்களே! இன்று நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவெடுத்து சரியாக செயல்படுத்துவோம். நேற்று என்பதை மறந்துவிடுங்கள். நாளையும் நம்மிடம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இன்று நம் கண்முன்னே இருக்கையில் இறந்து போன நேற்று எதற்கு பிறக்காத நாளையும் எதற்கு? இந்த நொடியிலிருந்து யோசித்து சரியாக திட்டமிட்டு செயல்படுங்கள். எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழுங்கள்.