
மனிதன் பண்புள்ளவனாக நடந்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சிறப்படைந்தால் மகிழ்ச்சி பிறக்கும்.
வேதங்களாகட்டும். இதிகாசம், புராணம் இலக்கியம் எதைப் புரட்டினாலும் அறத்தைத்தான் அவை வலியுறுத்துகின்றன. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை... அறன்... பண்பு நலனுக்கு உட்பட்டதே மனித வாழ்க்கை என அழுத்தம் திருத்தமாகப் போதிக்கின்றன.
பொருள் என்பது வாழ்க்கைக்குத் தேர்ச்சக்கரம்போல. அதைத்தேடி அமைத்துக்கொண்டால்தான் வண்டி ஓடும். ஆனால் தேர்ச்சக்கரம் மட்டுமே வாழ்க்கையாகாது.
வாழ்க்கைக்குத்தான் பணம். பணமே வாழ்க்கையாகாது.
வாழ்க்கைக்குத் தேவையான பணம் தேடும்போது மனிதன் உண்மையாய் உத்தமனாய் இருக்கிறான். பணமே வாழ்க்கை என ஓடும்போது பண்பு நலன்களைப் பற்றி யோசிக்க அவகாசம் கிடைக்காது. மனைவி மக்களைப் பேணும் எண்ணம் வராது. மனைவிமக்களைப் பேணாத வாழ்க்கையை வாழ்க்கை சொல்லமுடியாது.
பணம் கொழிக்கும் பூமியாகக் கருதப்பட்ட தேசங்கள் யாவும் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிதி நெருக்கடியின்போது மூச்சுத்திணறின. வல்லரசானவர்கள் வழி கெட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் நல்லரசான நாம் நடுநிலையோடு வாழ்ந்து கொண்டிருந்தோம். அதுமட்டும் அல்ல. ஒருகாலத்தில் சிவந்த மண்ணாகக் கருதப்பட்ட இந்த தேசம் இப்போது சிறந்த மண்ணாகி இருக்கிறது பன்னாட்டுப் பார்வையில் எல்லோரும் நம்மை வியப்புடன் திரும்பிப் பார்க்கிறார்கள்.
காரணம்-
இது பண்பைப் போற்றும் பாரதப் புத்திரர்களின் நாடு. ரகுவம்ச ரத்தம் நூற்று நாற்பது கோடி இந்திய மக்களின் உடம்பிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே நல்லியல்புகள். நற்பண்புகள் என்பதை ஏதோ நாலாந்தர போதனையாகவும். கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அறிவுரையாகவும் தயவு செய்து கருதிவிடாதீர்கள்.
அன்பு என்னும் பண்புதான் உயிரானது. உயர்வானது. நம் ஒவ்வொருவரையும் உயர்த்திப் பிடிக்கும் சிகரமானது.
நம் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் நம்நாட்டுச் சாத்திரங்களைப் போலவே பிறநாட்டுச் சாத்திரங்களும் நமக்குத் தேவைப்படுகிறது.
நம் வ.உ.சி உயர் வாழ்வுக்கான ஒரு நூல் எழுதியுள்ளார்.
அகமே புறம் என்னும் அச்சிறு புத்தகம் 1914இல் எழுதப்பெற்று 1964வரை ஐந்து பதிப்புகளாக வெளிவந்துள்ளது. இதன் மூலநூல் ஜேம்ஸ் ஆலன் என்னும் ஆங்கிலேயரால் எழுதப்பெற்றது.
எவன் குற்றமற்றவனாய் இருக்கத்தகுந்த கல்வியைக் கற்கிறானோ. எவன் தூய உள்ளத்துடன் இருக்க முயல்கிறானோ, எவன் சாந்தியும், ஞானமும் கொண்டு பிறரை நல்லவராய் நோக்கும் பண்புடையவனாய் நடந்து கொள்கிறானோ அவனே மனிதர்களில் மேலானவன். அவனது வாழ்க்கையே மேலான வாழ்க்கை..' என்னும் கருத்தமைந்த அந்த நூலை மிகச்சிறப்பான தமிழில் சரளமாய் மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி.
வாழ்க்கைக்கு ஒழுக்கம் முக்கியம். வறுமையோ பெருமையோ எதுவாயினும் ஒழுக்கம் உடையவர்களே உயர்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஒழுக்கம்தான். வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. உயரவைக்கிறது. நிலையான மகிழ்ச்சியை… நிம்மதியான வாழ்க்கையைத் தருகிறது.