
நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படக்கூடாது. எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் கடமையைச் செய்யவேண்டும்.
காலம் உணர்ந்து கடமையைச் செய்து பாருங்கள். அதற்குண்டான பலன் உரிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும். நமது கடமையை நாம் செய்கிறோம் என எண்ணவேண்டும் அதையும் உரிய நேரத்தில் ஒழுங்காகச் செய்கிறோமா என்றும் பார்க்க வேண்டும்.
நாடு என்றாலும், வீடு என்றாலும் அவரவர் கடமையை முறையாகச் செய்யவேண்டும். பெற்ற பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தும், அவர்களுக்கு நல்ல பண்புகளைக் கற்பித்தும், சிறந்த மனிதராக்குவது பெற்றோரின் கடமை.
பெரியவர்களின் நடத்தையைப் பார்த்துதான். சிறியவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். நல்லதை மட்டும் எடுத்துரைப்போம். நல்ல செயல்களையே செய்வோம்.
ஒரு காலத்தில் மன்னர் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் வருவார். இரவு, பகல் பாராது எந்த நேரத்திலும் மாறுவேடத்துடன் வந்து நிற்பார். அப்படி மன்னர் வரும்போது, நாட்டு மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளமுடியாது. எனவே, அவரும் மக்களில் ஒருவராகப் பழக ஆரம்பித்து விடுவார். அப்பொழுதுதான் தம்மைப்பற்றியும், தம் ஆட்சியின் குறைகள் பற்றியும் மன்னர் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்
ஒரு மன்னர் மாறுவேடத்தில், பகல் நேரத்தில், சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலை ஓரத்தில் வயதான பெரியவர் ஒருவர் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாப்பு வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்.
மன்னர், அவர் அருகில் சென்றார். அய்யா. பெரியவரே இந்தத் தள்ளாத வயதிலும், வேகாத வெயிலிலும் இந்த வேலையைத் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே" என்றார்.
பெரியவர் மெதுவாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தார். அவர் வேலையில் கண்ணும் கருத்துமாகவே இருந்தார். மன்னர் ஏனய்யா நான் சொல்வது தங்கள் காதில் கேட்கிறதா மீண்டும் சிரித்தார். ம்ம்." அதற்கு மேல் அவர் பேசவில்லை.
அங்கு நடப்பட்டு இருந்த செடிக்கு, பாதுகாப்பாக பக்குவமாக முள்வேலி அமைத்துக் கொண்டிருந்தார். மன்னரும் விடுவதாக இல்லை ஏனய்யா, மன்னரின் தர்ம சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு அழகாக படுத்து ஓய்வெடுக்கலாமே. என்றதும் பெரியவர் அமைதியாக அய்யா மன்னரின் தயவால் மூன்று நேரமும், வயிறார சாப்பாடு கிடைக்கிறது. அதற்காக சாப்பிட்டு விட்டுசோம்பேறியாய் காலம் கழிக்க விரும்பவில்லை. என்னால் முடிந்தவரை நம் நாட்டுக்காக சேவை செய்ய விரும்புகிறேன் என்றார் அழுத்தம் திருத்தமாக.
மன்னரும் சரி அய்யா, நீங்கள் வைக்கும் இந்தச் செடி பெரிதாகி பலன் தரும்வரை நாம் இருவரும்தான் இருந்து பார்க்க முடியுமா?
பெரியவர் வாய்விட்டு சிரித்தார் அய்யா. இப்பொழுது நாம் சாப்பிடும் காய், கனிகளைத் தந்து கொண்டிருக்கும் மரங்கள். நம் முன்னோர் வைத்ததுதானே அவர்களும் அப்படி நினைத்து மரங்கள் வைக்காமல் இருந்திருந்தால் நமக்கு இன்று பலன் கிடைத்திருக்குமா?
நம் கடமையை மட்டும் ஒழுங்காகச் செய்வோம். பலனை உடனே எதிர் பார்க்கக்கூடாது. அது கிடைக்கும்போது கிடைக்கும் என்றபடி வேலையைத் தொடர்ந்தார் மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இதுபோல்தான் நாம் அனைவருமே. பிரதி பலன் எதிர்பாராமல் கடமையாற்ற வேண்டும். பிரபஞ்ச சக்தி அதன் வேலையைத் தொடர்ந்து செய்வது போல், நாமும் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
நம் கடன் பணி செய்து இருப்பதே. நாம் எதைச் செய்கின்றோமோ, அதன் பலன் உரிய நேரத்தில் நிச்சயம் கிடைத்துவிடும்.
இதை இன்று மனதில் பதிய வையுங்கள். நல்லதே செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!