
உங்கள் கைகளில் கட்டி இருக்கும் கடிகாரமோ அல்லது வீட்டின் சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரமோ நின்று விட்டால், காலமும் நின்று விடுமா? நீங்கள் கடிகாரம் நின்று விட்டது என்று சாப்பிடாமலோ அல்லது தூங்காமலோ அல்லது எந்த வேலையையும் செய்யாமலே ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பீர்களா? உங்களுடைய கடிகாரம் நின்று விட்டால் நேரமும் காலமும் ஓடாமல்தான் இருக்குமா?
என் வீட்டு கடிகாரம் காலை பத்து மணி அளவில் நின்று விட்டது, அதில் உள்ள முட்கள் இன்னும் மதிய நேரத்திற்கு வரவில்லை என்று கூறி சாப்பிடாமலோ அல்லது அலுவலகத்திறகு செல்லாமலோ அல்லது வீட்டு வேலைகளை செய்யாமலோ இருக்க முடியுமா?
அவ்வாறு நடந்து கொண்டால் நஷ்டம் நமக்குத்தான் ஏற்படும். மேலும் நம்மை பார்த்து மற்றவர்கள் ஏளனம் செய்வார்கள்.
நம்முடைய கடிகாரம் நின்று விட்டால் பொதுவாக நாம் என்ன செய்வோம்? பேட்டரியை மாற்றி பார்ப்போம், அப்படியும் இயங்கவில்லை என்றால் கடையில் கொடுத்து சரி செய்ய பார்ப்போம், அதுவும் இல்லை என்றால புதியதாக வாங்குவோம்...இல்லையா...இதைத்தானே நாம் எல்லோருமே செய்வோம்.
அதைப் போலவே உங்க தனிபட்ட வாழ்க்கையில் பிரச்னை வந்தால், வாழ்க்கையும் நிற்காது. அது ஓடிக்கொண்டேதான் இருக்கும்.
பிரச்னை வந்து விட்டது எப்படி சமாளிப்பது என்று எதுவும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டே இருந்தால் உங்களுடைய வாழ்க்கையின் பெரும் காலம் வீணாகவே போய் விடும். பிரச்னையை நினைத்து வெறுமென உட்கார்ந்தாலோ அல்லது சிந்தித்துகொண்டே இருந்தாலோ அல்லது துக்கமாக இருந்தாலோ எல்லாம் சரி ஆகிவிடுமா?
எப்படி கடிகாரம் நின்று விட்டால் அதை சரி செய்கிறோமோ அப்படித்தான் நம் பிரச்னைகளையும் நாம்தான் சரி செய்ய வேண்டும். ஒரு வழி இல்லை இன்னொரு வழியைத்தேட வேண்டும். நமக்கு நாமே தான் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும். நம்மால் முடியவில்லை என்றால் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ நாடி உதவி கேட்கலாம். எதாவது ஒரு விதத்தில் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யவேண்டும்.
எல்லார் வீட்டு கடிகாரமும் அவ்வப்போது இடையில் நிற்கத் தான் செய்யும், அதைப் போல பிரச்னைகளும் எல்லோருக்கும் வரும். அய்யோ...எனக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்னை என்று புலம்புவர்கள் ஏராளம். ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் பள்ளமும் மேடும் இருக்கத் தான் செய்யும். அதை அவரவர்தான் தனக்கேற்றவாறு சரி செய்ய வேண்டும்.
பிரச்னைகளை கண்டு பயப்படவோ அல்லது ஓடி ஒளியவோ செய்யாதீர்கள். அவ்வாறு செய்வதால் பிரச்னைகள் ஓடாது மாறாக நம் வாழ்க்கையின் நாட்கள்தான் வீணாகும். முடிந்தவரை சமாளிக்க பழகிக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் விட எல்லோருமே ஒரு விதத்தில் கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆணித்தரமாக பதிய வைத்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களின் பிரச்னை உங்களுடைய கண்களுக்கு பெரிதாகத் தோன்றாது