
சேமிப்பதால் மட்டுமே ஒருவர் முன்னேற முடியும் என்பதில்லை! எதையும் வீணடிக்காமல் சிக்கனமாக வாழ்வது கூட முன்னேற்றத்துக்கான வழிதான்! ஒரு மனிதரின் மதிப்பு வெறுமனே அவர் சேர்த்து வைக்கும் சொத்துக்களை மட்டுமே வைத்து அளக்கப்படுவதில்லை. இவர் இந்த உலகத்துக்கு என்ன கொடுக்கிறார் என்பதை வைத்தும் மதிப்பிடப்படுகிறது!
ஒரு துறவி ஆசிரமத்தில் தன் தினசரி வகுப்புகளை முடித்துவிட்டு எழுந்தார் சீடன் ஒருவன் அவர் அருகில் வந்து தயக்கத்துடன் .
"எனக்காக உங்களிடம் ஒன்று கேட்க வந்திருக்கிறேன்" என்றான்.
துறவி அவனை நிமிர்ந்து பார்த்து, "என்ன வேண்டும்? கேள்" என்றார்.
" எனது மேலாடை கிழிந்துவிட்டது. இதை அணிந்து கொண்டு கண்ணியத்துடன் நடமாட முடியவில்லை. எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் மேலும் குளிரையும் சமாளிக்க முடியவில்லை. எனக்கு புது மேலாடை வேண்டும் "என்றான் சீடன்.
உடனே அவனுக்கு புது மேலாடை கொடுத்தார் துறவி.
அவன் வணங்கிவிட்டு நகர்ந்தான் என்றாலும், இந்த சீடனுக்கு இன்னும் ஆடம்பரத்தில் நாட்டம் இருக்கிறதோ? "பொருட்களின் மதிப்பு குறித்து நாம் சரியாக அவனுக்கு உணர்த்த வில்லையோ?" என்று துறவிக்கு சந்தேகம் இருந்தது.
அடுத்த நாள் அந்த சீடனின் அறைக்கு போனார். அவன் எழுந்து வணங்கி அவரை வரவேற்றான்.
"புதிய ஆடை பொருத்தமாக இருக்கிறதா? உனக்கு வேறு எதுவும் வேண்டுமா?" என்றாார்.
"பொருத்தமாக இருக்கிறது குருவே! எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" என்றான் சீடன்.
" சரி, பழைய மேலாடையை என்ன செய்தாய்?" என்று கேட்டார் துறவி.
"என் படுக்கை விரிப்பு மோசமாக கிழிந்திருந்தது அதை அகற்றிவிட்டு பழைய மேலாடையை அங்கு போட்டிருக்கிறேன்" என்றான்.
"கிழிந்த படுக்கை விரிப்பு என்ன ஆனது? "என்றார் துறவி.
"அதை ஜன்னலில் திரைச் சீலையாக தொங்க விட்டிருக்கிறேன்"என்றான்.
"பழைய திரைச்சீலையை தூக்கி போட்டுவிட்டாயா?" என்றார் துறவி.
"இல்லை குருவே! அதை நான்கு துண்டுகளாக பிரித்து சமையலறையில் கரித்துணையாக பயன்படுத்துகிறேன். அடுப்பில் இருந்து சுடு பாத்திரங்களை எடுக்க அவைதான் உதவுகின்றன" என்றான்.
"பழைய கரித்துணிகளை என்ன செய்தாய்?" என்றார்.
"தரையை ஈரம் செய்து துடைக்க செய்து துடைக்க துணி மோசமாக இருந்தது அதற்கு பதிலாக மாற்றிவிட்டேன்" என்றான்.
"பழைய மாப் நூல் என்ன ஆனது?"
"அது மோசமாக கிழிந்து நூல் நூலாக பிரிந்துவிட்டது
அதை வைத்து விளக்கு திரிகள்தான் செய்ய முடிந்தது. உருட்டித் திரி செய்து மொத்தமாக வைத்துவிட்டேன்.
அதில் ஒன்றுதான் இப்போது உங்கள் அறையில் உள்ள எண்ணெய் விளக்கில் எரிகிறது" என்றான் சீடன்.
பயனில்லாதது. என .எதுவுமே இல்லை என்ற பாடத்தை தன் சீடன் உணர்ந்திருக்கிறான் என்ற நிறைவுடன் துறவி திரும்பி சென்றார்.
'பயனில்லை' என்று முடிவு செய்யும் எல்லா பொருட்களுக்கும் ஏதோ ஒரு பயன் இருக்கும் சரியாக அதைப் பயன்படுத்த வேண்டும். எதையும் வீண் செய்யக்கூடாது !
ஒரு மனிதரின் மதிப்பு வெறுமனே அவர் சேர்த்து வைக்கும் சொத்துக்களை மட்டுமே வைத்து அளக்கப்படுவதில்லை.
அவர் இந்த உலகத்துக்கு என்ன கொடுக்கிறார் என்பதை வைத்தும் மதிப்பிடப்படுகிறது.
பயனுள்ள வழியில் வாழ்ந்து அடுத்த தலைமுறை களுக்கும் வழிகாட்டுவோம்!