
பெரும்பாலான மக்கள் ஒருவருக்கு ஈகோ இருக்கிறது என்றால் அவர் சுயநலம் மிக்கவராகவும் தனக்கு மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டும் என்று எதிர்பார்ப்ப வராகவும் இருக்கிறார் என தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஈகோ என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒரு ஆளுமைப் பண்பு என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான ஈகோ, ஆரோக்கியமற்ற மற்றும் பலவீனமான ஈகோ என்று 3 வகையாக பிரிக்கிறார்கள்.
ஆரோக்கியமான ஈகோவின் பண்புகள்:
சுய விழிப்புணர்வு
ஆரோக்கியமான ஈகோ கொண்ட நபருக்கு தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி சரியாக தெரியும். தன்னுடைய உணர்ச்சிகளை சரியாக புரிந்து கொள்கிறார். பிறருடைய அங்கீகாரத்தை தேடுவதில்லை.
சுய மதிப்பு
பிறருடைய கருத்துக்களை பொருட்படுத்தாமல் உள்ளார்ந்த முறையில் தன்னை மதிக்கிறார். இது ஆணவம் அல்ல. தனிப்பட்ட மதிப்பின் ஆழமான உணர்வு. எதார்த்தமான இலக்குகளை நிர்ணயத்து அவற்காக பாடுபடுவார்.
மீண்டுவரும் தன்மை
ஆரோக்கியமான ஈகோ கொண்ட நபரால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியும். துன்பங்களை திறமையுடன் எதிர்கொண்டு பின்னடைவுகளில் இருந்து விரைவில் மீண்டு வருவார். சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகத்தான் பார்ப்பார். புதிய யோசனைகள் அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்களை ஏற்றுக் கொள்வார். தேவைப்படும்போது தன்னுடைய சிந்தனையையும் நடத்தையையும் சரி செய்து கொள்வார்.
உணர்ச்சிக் கட்டுப்பாடு
தீவிரமான உணர்ச்சிகளுக்கு ஆளாவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் தன் உணர்ச்சிகளை பேலன்ஸ் செய்து கொள்வார். பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவருடன் இணக்கமாக நடந்து கொள்வார். தன்னுடைய தவறுகளுக்கு பொறுப்பேற்கும் தன்மை உடையவர்.
பணிவு
ஆரோக்கியமான ஈகோ உண்மையான பணிவோடு இருக்க வைக்கிறது. உயர்ந்த பதவியில் இருந்தாலும் பணிவோடு இருப்பதும், பிறர் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் தன்மையும் இருக்கும்.
கெட்ட, ஆரோக்கியமற்ற ஈகோவின் பண்புகள்:
ஆணவம்
தன்னுடைய சாதனைகள் திறன்களைப் பற்றிய மிகவும் ஆணவமாக இருப்பார் கெட்ட ஈகோ உள்ள மனிதர். பிறரை அடக்கி ஆள வேண்டும். தான் மட்டுமே உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்.
அங்கீகாரம் தேடுதல்
தன்னுடைய சாதனைகளை மற்றவர்கள் அங்கீகரிக்கவும், பாராட்டவும் வேண்டும் என்று நினைப்பார்கள். எப்போதும் தன்னை பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். பிறருடைய கண்ணோட்டங்கள், உணர்வுகளை புரிந்து கொள்வது இவர்களுக்கு கடினமாக இருக்கும். நிறைய உறவு சிக்கல்களை அனுபவிப்பார்கள். மிகுந்த சுயநலவாதியாக இருப்பார்.
குறை சொல்லுதல்
தன்னுடைய தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் பிறரை மிக எளிதாக குறை சொல்வார்கள். தன்னுடைய பிரச்னைக்கு பிறர் மீது பழி போடுவார்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மரியாதை தரமாட்டார். பிறர் சொல்வதை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.
கட்டுப்பாடற்ற வெறி
எல்லாவற்றையும் ஒரு போட்டியாகவே பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் எல்லாரும் எல்லாமும் இருக்க வேண்டும் என்கிற வெறி உணர்வு இருக்கும்.
பலவீனமான ஈகோவின் பண்புகள்:
தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள். தன்மீதே சுய சந்தேகம் இருக்கும். தொடர்ந்து தன்னையும் தன்னுடைய முடிவுகளையும் மறுபரிசீலனை செய்வார்கள். மக்களை மகிழ்விப்பதற்காக தேவை இல்லாமல் மெனக்கிடுவார்கள். எளிதில் வேண்டாம் என்று சொல்ல இவர்களுக்கு வாய் வராது. தன்னுடைய வாழ்க்கையின் மீது தனக்கு கட்டுப்பாடு இல்லை, விதியும், வெளிப்புற சக்திகளும்தான் தன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிருக்கிறது என்று நினைப்பார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் துன்பங்கள், சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஆரோக்கியவற்றை வழிமுறைகளை (போதை பொருள், மது) போன்றவற்றை நாடுவார்கள். தன்னை பற்றி மிகவும் தாழ்வாக நினைத்துக் கொள்வார்கள். குறைபாடுகளில் கவனம் செலுத்தி தன்னுடைய நிறைவான குணங்களில் கவனம் செலுத்தாமல் விடுவார்கள். தோல்வி பயம் அதிகம் இருக்கும். எனவே ஆரோக்கியமான ஈகோ மட்டுமே நமக்கான தேவையாகும்.