
வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி பெறவேண்டும். அதனால் மகிழ்ச்சியுற வேண்டும் என்றால், அதற்கு நாம் செய்ய வேண்டியவை இந்த ஆறு விஷயங்கள்தான். இதில் விழிப்பாய் இருந்தால் போதும். அவை என்னென்ன?
அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கத்தை தினமும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நேர்மறையான சிந்தனையுடன் அன்றன்று வேலைகளை தொடங்கினால் மனஆரோக்கியம் சிறப்பாக அமையும். இதனால் சிந்தனை திறனும் மேம்படும். திட்டமிட்டு செயல்படுவதற்கான நேரத்தையும் அவை கொடுக்கும். இதனால் "டென்ஷனுக்கு தடா" போடலாம்.
மருத்துவர் என்றால் அன்றன்று மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் மருந்து வகைகளை தெரிந்து கொள்வதற்காகவாவது படிப்பதை தினசரி மேற்கொள்ள வேண்டும் என்பார்கள். அதுபோல புதிய சிந்தனைகள் வித்திட, திறம்பட செயல்படும் ஆற்றலை வளர்த்தெடுக்க, உலகத்தைப் பற்றிய புரிதலை விரிவாக்க, படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்த வாசிப்பு பழக்கத்தை தினசரி கடைபிடிக்க வேண்டும்.
எந்த ஒரு சூழலிலும் கற்றுக்கொள்ளும் வழக்கத்தை ஊக்குவித்துக் கொள்ளவேண்டும். தோல்வியிலிருந்து அனுபவத்தையும், வெற்றியில் இருந்து அணுகு முறையையும் கற்றுக் கொள்வதை மேற்கொள்ள வேண்டும்.
பழைய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் நமக்கு பரிச்சயம் இல்லாத புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அது மன அழுத்தத்தை குறைக்கும். தொடர் வெற்றிக்கு வழிவகுக்கும். அதுவே மனமகிழ்ச்சிக்கு காரணமாகும்.
மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்த ஆரோக்கியமான சமச்சீர் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது உடல், மன ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அதுவே முயற்சியும் பயிற்சியும் செய்வதற்கான ஆற்றலை வழங்கி வெற்றி வாகைக்கு அழைத்துச் செல்லும். அதனால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
எதையும் வெல்வதற்கு இலக்கை நிர்ணயித்துவிட்டால் அதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கக் கூடாது. "செய் அல்லது செத்துமடி" என்பதில் குறியாக இருக்க வேண்டும். அது தான் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் தொழிலுக்கும் நன்மை சேர்க்கும்.
குறிப்பாக தன்னால் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது உற்சாகத்துடன் செயல்பட்டு சாதனையை சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எளிமையாக்கும். இதனால் வெற்றி அடைய முடியும். இது மன மகிழ்ச்சிக்கு வித்திடும்.
இலட்சியம் இருந்தால் முயற்சி வரும்…
முயற்சி செய்தால் நேரம் வரும்...
நேரம் வந்தால் வாய்ப்பு வரும்…
வாய்ப்பை பிடித்தால்
வெற்றிகள் வரும்.!