
மிகச்சிறிய கவலை என்றாலும் அதை எப்போதும் மனத்தில் தூக்கிக்கொண்டே சுமந்தால் அந்த பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது.
கவலைகள் எப்போதுமே நேற்றைய துயரங்களை துடைப்பதே இல்லை மாறாக அவைகள் நமது இன்றைய பலத்தினைக் குறைத்துவிடுகின்றன. நாளையைப் பற்றிய அச்சத்தைத் தந்து விடுகின்றன.
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்று திரைப்பாடலில் எழுதுகிறார் கண்ணதாசன்.
யாருக்குத்தான் கவலை இல்லை உண்ணும் கஞ்சிக்கு உட்பில்லை என்பவருக்கும், அழகான கைத்தடிக்கு மேலும் அழகு சேர்க்கத் தங்கப் பூண் போடமுடியவில்லையே என்பவருக்கும் கவலை ஒன்றுதான் என்கிறது ஒரு பழம்பாடல்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களுக்குக் கவலையோ வருத்தங்களோ இல்லை என்று பொருள் அல்ல. அவற்றை தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதே பொருள்.
மனம் பலவீனமாக இருக்கும்போதுதான் சூழ்நிலை சிக்கலாகத் தெரியும்: மனம் இயல்பாக இருக்கும்போது, சூழ்நிலை சவாலாகத் தெரியும்: மனம் உறுதியாக இருந்தால் அதே சூழ்நிலை, தம் திறமையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாகத் தெரியும்!
மனத் தெளிவில்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள சிக்கலைப் பெரிதாக எண்ணிக் கவலை கொள்வார்கள். மனத் தெளிவுடையவர்கள், ஒவ்வொரு சிக்கலிலும் உள்ள வாய்ப்பினை எண்ணி மகிழ்ச்சி கொள்வார்கள்!
மணம் செய்து மகிழ்வுடன் வாழ்ந்திருந்த மனைவி கண்ணகியைவிட்டுப் பிரிந்து, கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியிடம் மயங்கிக்கிடந்தான் கோவலன்.
அவனுடன் குலமகளாகவே வாழ்ந்தாள் மாதவி. மணிமேகலை என்னும் குழந்தையைப் பெற்றெடுத்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள். ஆனால், கோவலனின் மனம் தெளிவில்லாத மனம். இப்போது தன்னையே நேசித்து வாழ்ந்திருந்த மாதவியைவிட்டுப் பிரிந்தான். கண்ணகியை நாடி வந்தான்.
வந்தவன், கண்ணகியிடம் மாதவியைப் பற்றிக் குறை சொல்லிப் பேசினான். 'பணத்திற்காகவே வாழும் அவளுடனே இருந்து, எல்லாப் பொருளையும் இழந்து விட்டேன்; வெட்கமாக இருக்கிறது...' என்றான்.
தனது காற்சிலம்பு தவிர எல்லாவற்றையும் இழந்து வாழ்ந்தவள் கண்ணகி. எதுவும் இல்லாமல் போயிற்று என்று புலம்பி வந்த கணவனிடம், 'ஏன் கவலைப்படுகிறீர்கள்...? எனது காற்சிலம்புகள் எடுத்துக்கொள்ளுங்கள்...' என்றாள்.
மகிழ்ச்சியாக வாழும் வாய்ப்பு இருந்தும், தனது தவறுகளால் சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு கவலைப்பட்டவன் கோவலன்.
வாழ்க்கையே சிக்கலாகிப் போனாலும், அதில் வாய்ப்பு இருந்ததை எண்ணியவள் கண்ணகி!
நம்மிடம் என்ன இருக்கிறது அல்லது இல்லை என்பன நமது மகிழ்ச்சியை நிர்ணயிப்பதே இல்லை.
நாம் எவற்றைச் செய்கிறோம் அல்லது செய்யாமல் இருக்கிறோம் - என்பதே நமது மகிழ்ச்சியை நிர்ணயிக்கிறது.
கவலைகளை மனதுக்கு வெளியே நிறுத்தி, சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சி செய்பவர்களே எந்தச் செயலையும் எளிதாக செய்து முடிக்கிறார்கள்.