
ஒருவருடன் நமக்கான நட்பு, நம்மிடம் உள்ள பலத்தால் மலர்ந்ததா அல்லது பலவீனத்தால் உருவானதா என்பதனை நியாய உணர்வுடன் எண்ணிப் பார்த்தால், அந்த நட்பின் ஆழம் தெரிந்துவிடும்.
நமது பலவீனத்தையே கடைக்காலாகக் கொண்டு எழுப்பப்படும் எந்த உறவும் உண்மையானதாக இருப்பதே இல்லை. எந்த நேரமும் அதில் சுய நலமும் எதிர்பார்ப்பும் மறைந்தே இருக்கின்றன. அட்டைப் பெட்டிகளை வைத்துக் கட்டப்பட்ட கட்டடம்போல, சிறு அதிர்வுக்கும் அத்தகைய உறவுகள் உடைந்து நொறுங்குகின்றன .
நமது உயர் எண்ணங்கள் காரணமாக, நம்மிடம் நிறைந்திருக்கும் பலம் காரணமாக உருவாகும் உறவுகள் எளிதில் வீழ்வதில்லை.
நல்ல பிண்ணணியில் உருவாகும் நட்புகூட சில நேரங்களில் உடைந்து விழலாம். அப்படி நடக்கவும் செய்கிறது; மறுப்பதற்கில்லை.
இருவரில் எவரேனும் ஒருவரின் மனத்திலோ அல்லது இருவரின் மனத்திலேயோகூட, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆசைகள் வேர்விடத் தொடங்கியதே நட்பு வீழச்சியடையக் காரணமாயிருக்கும்.
பாறைகளுக்கு இடையே விளையும் சிறு செடியின் வேர், அந்தப் பாறைகளையே உடைத்துவிடுவதைப்போல மறைந்திருக்கும் ஆசைகளின் வேர்கள், உறவுகளைக் கலகலத்துப்போக வைத்துவிடுகின்றன.
பாரதக் கதையில் வரும் கர்ணன் துரியோதனன் நட்பினை எண்ணிப் பாருங்கள். துரியன் உயர் குணம் இல்லாதவன். கர்ணன் மிகச் சிறந்த கொடைவள்ளல் என்றாலும், அவனும் 'துஷ்டர்களில்' ஒருவனாகவே காட்டப்படுகிறான்.
ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு என்னும் உறவுக்கு ஈடு இணை இல்லை.
அதுவரை 'தாய் தந்தை தெரியாத அனாதை...' என்றே சொல்லிவைக்கப்பட்டிருந்த கர்ணனுக்கு, பாண்டவர்களின் தாய்தான் தனக்கும் தாய் என்று தெரிய வருகிறது.
அந்தத் தாயே நேரில் வந்து தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்தபோதும், நட்பு என்னும் ஒரே உணர்வு காரணமாகத் தாயன்பையே நிராகரித்தவன் கர்ணன்.
காரணம் ஒன்றுதான். துரியனுக்கும் கர்ணனுக்கும் இடையேயான நட்பு, எந்தக் கலப்புமில்லாத நட்பு மட்டுமே. அதனால்தான் தன் மனைவியின் இடுப்பு மேகலையைக் கர்ணன் பற்றி இழுக்க, அதிலிருந்து அறுந்த மணிகள் சிதறி ஓடியபோதும், 'இந்த மணிகளை எடுக்கவா அல்லது கோர்க்கவா....?' என்று கேட்டான் துரியன்.
'என் மனத்தில் எந்தக் கலக்கமுமில்லை; எனவே கைகளில் சிறு நடுக்கமுமில்லை; மணிகளைக் கோர்க்கக்கூடிய அளவுக்கு மனமும் கைகளும் சரியாகவே இருக்கின்றன....' என்பதைக் காட்டவே இந்த வரிகளை துரியன் சொன்னதாகப் பெரியவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை ஆனால் எதையும் கொடுக்கிறது என்பது காந்தியடிகளின் புகழ்பெற்ற பொன்மொழி.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மனதில் அமர்ந்திருக்கும் வரை தான் உறவு உறுதியாக இருக்கிறது.
அன்பு ஆழமாக மனத்தில் வேரூன்றி இருந்தால், உறவுகள் எவ்வளவு உயரத்தையும் எட்டும்!