
பணம் மட்டும் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம். சாதித்துவிடலாம் என சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி நினைப்பது அவர்களின் அறியாமை ஆகும்.
இன்று பெரும் பணம் படைத்தவர்கள் நிம்மதியைத் தொலைத்துவிட்டுத் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா?
பணம் மட்டும்தான் வாழ்க்கை என பணத்தை மட்டுமே தேடி அலைந்தார். பணத்தின் மீது மட்டும். கண் வைத்திருந்த அவருக்கு. தனக்காகச் சொந்த, பந்தம் இருப்பதை மறந்துவிட்டார். இன்று அவரிடம் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது. அவருக்கு அருகில் இருந்து, நிம்மதி தர உறவுகள் இல்லை.
சிலர் பணத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டார்கள். அவர்களைக்கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?
நாய் விற்ற காசு குரைக்குமா! கருவாடு விற்ற காசு வீசுமா! என்பார்கள். இவையெல்லாம் பேச்சுக்குக் கூறலாம். கேட்கவும் வேடிக்கையாக இருக்கும். நாயை விற்றும் சம்பாதிக்கலாம். கருவாடு விற்றும் சம்பாதிக்கலாம் அது தவறல்ல.
ஆனால், பணத்திற்காகப் பாவத்தொழிலை மட்டும் செய்யக்கூடாது. பணத்திற்காகப் பிறருக்குத் துரோகம் செய்வதும், மற்றவர் வாழ்க்கையைக் கெடுப்பதும், தேசத்துரோகம் செய்வதும் போன்ற பாவச் செயல்களைச் செய்யக்கூடாது.
பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கிவிடலாம் என கர்வம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி விலைக்கு வாங்குவதும் பொய்களை மட்டுமாகத்தான் இருக்கும். உண்மையை அவர்களால் என்றுமே விலைக்கு வாங்க முடியாது. அந்த உண்மையையும் காலம் கடந்துதான் புரிந்துகொள்ள முடியும்.
அன்பு உள்ளங்களுக்கு ஈடாக எதையும் நாம் கூறமுடியாது. அன்பு உள்ளங்களை எப்பொழுதும் அரவணைத்துச் செல்லவேண்டும். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையில் நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும். அது நம்பகமாகவும் இருக்கும். அப்படி சாதிப்பதனால் என்ன நன்மை விளைந்துவிடும். தனி மரம் தோப்பாக மாறமுடியாது. அதேபோல்தான் இரண்டு கைகளும் தட்டினால் ஓசையைக் கேட்க முடியும்.
தனி ஒரு ஆளாக இருந்து பணம் மட்டுமே போதும் என்று நினைக்க வேண்டாம். வாழ்க்கைக்கு பணம் அவசியத் தேவைதான், அதேபோல உறவுக்கும் அவசியம் உணரவேண்டும்.
நம்மைக் காப்பாற்றும் அளவிற்குத் தகுந்த பணத்தை மட்டும் சம்பாதித்தால் போதும் .அளவுக்கு அதிகமாக பணத்தைச் சம்பாதித்தும், பதுக்கி வைப்பதிலும் அதைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம். அதற்காகப் வாழ்நாள் முழுவதும் பயந்து கொண்டிருக்க வேண்டாம்.குறுக்கு வழியில் தேடிய பணம் நிலைக்காது. எப்படி வந்ததோ அப்படியே சென்றுவிடும்.
இன்று எத்தனையோ பேர் ஊழல் செய்து மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். இவர்கள் எப்படித்தான் திறமையாக ஊழல் செய்தாலும், சட்டத்தின் முன் மக்கள் மன்றத்தில் குற்றவாளிகளாகத்தான் நிற்க வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளை மக்கள் மிகவும் கேவலமாகத்தான் நினைப்பார்கள். மக்களுக்காக உழைப்பதாக ஓட்டு வாங்கி, பதவியில் அமர்கிறார்கள் .பதவியில் இருக்கும் போது, முடிந்தவரை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டுகிறார்கள். இவர்களைத் திருத்தவேண்டும்.
இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காமல் தோற்கடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தம்மை உணர்வார்கள். பணம் மட்டுமே பெரிதெனவும் நினைக்கமாட்டார்கள்.