
எனக்கும் என் மனைவிக்கும் எப்போதுமே எந்தப் பிரச்னையும் வருவதில்லை; ஏனென்றால் நாங்கள் எங்களுக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டோம். சின்னச் சின்ன செயல்களுக்கெலாம் அவள்தான் முடிவெடுப்பாள்; நான் அதனை அப்படியே ஒப்புக்கொள்வேன். எதிர்த்துப்பேசவே மாட்டேன்;
அதேபோல், பெரிய பெரிய செயல்களுக்கெல்லாம் நான் எடுப்பதுதான் முடிவு. அதனை அவள் அப்படியே ஒப்புக்கொள்வாள்; ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசமாட்டாள்' என்று பெருமை பேசிக்கொண்டிருந்தான் ஒருவன்.
"அப்படியா...? நம்ப முடியாததாக இருக்கிறதே....! என்று வியந்து கேட்டுக்கொண்டிருந்தான் மற்றவன்.
'ஆமாம்! பையனை என்ன படிக்க வைப்பது; எங்கே வேலைக்கு அனுப்புவது; பெண்ணுக்கு எப்போது திருமணம் செய்வது; மாப்பிள்ளை என்ன வேலை செய்பவராக இருக்க வேண்டும். சொந்த வீடு எங்கே வாங்குவது, போன்ற சின்னச் சின்ன செயல்களில் அவள் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன்; ஒரு வார்த்தை மறுப்பு சொல்லமாட்டேன்;
எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறிக்கொண்டே போகின்றனவே, அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்.... அடுத்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியாக யார் வருவார்... ஈழத் தமிழர்களுக்குச் சரியான தீர்வு என்ன போன்ற பெரிய செயல்களில் நான் சொல்வதுதான் முடிவு! என் மனைவி ஒரு வார்த்தை எதிர்க் கருத்து சொல்லமாட்டாள்....' என்றான் அவன்!
அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குத் தந்திருக்கிற உரிமைகளையும், சொல்லியிருக்கும் கடமைகளைப் படிக்கும்போதெல்லாம், இந்தக் கதைதான் நினைவுக்கு வரும்!
இவையெல்லாம் உன் கடமைகள்...' என்று ஒரு நீண்ட பட்டியலை அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சொல்லி, 'தவறினால், இதுதான் விளைவு...' என்று தண்டனை களையும் ஒரு பட்டியலைத் தந்திருக்கலாமோ, என்றும் தோன்றும்!
விடுதலையை நமக்கு வாங்கித் தந்த தலைவர்கள், நம்மை அவ்வளவு நேசித்திருக்கிறார்கள்!
'அடிமை நாட்டில் வாழ்ந்தவர்கள் நம் மக்கள்... இப்போதுநடப்பது மக்களின் ஆட்சிதானே. நிறைய உரிமைகளை அனுபவிக்கட்டும் என்று நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் உரிமை நமக்குப் பட்டியலிட்டு வாழக் கடமைகளைப் பட்டியவிட்டு வலியுறுத்தவில்லை.
இதன் விளைவு, அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளாடுவிட்டோம் நாம்.
நெறிப்படுத்தி வளர்க்கப்படாத குழந்தையைக் கவனித்து இருக்கிறீர்களா...' 'நான் சொல்வதும் செய்வதும்தான் சரி...! என்ற எண்ணத்துடனே திரியுமே தவிர, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாது சொன்னாலும் கேட்டுக்கொள்ளாது.
'எனக்கு இது வேண்டும், அது வேண்டும். இன்னமும் வேண்டும். என்று நினைப்பது தவறேயில்லை. பிறந்து வாழும் மனிதர்களுக்குத் தேவைகளும் ஆசைகளும் தவிர்க்க இயலாதவை.
ஆனால் அதே நேரத்தில், 'நான் இதைச் செய்து முடிக்க வேண்டும். அடுத்து அதைச் செய்து முடிக்க வேண்டும்; இன்னமும் நிறைய செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டும்.
சேவை செய்யவேண்டும்...என்ற எண்ணம் தோன்றும் முன்னரே, நமது கடமைகளில் தவறக்கூடாது... என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதித்துக்கொள்ள வேண்டும்.'
கடமை தவறிய எந்தக் கால்களும் சரியான பாதையில் நடப்பதுமில்லை; போய்ச் சேர விரும்பும் இடத்துக்குப் போவதுமில்லை.
உரிமைக்காகப் போராடுபவர்களைவிட, கடமை தவறாதவர்களால் மட்டுமே காரியங்கள் கைகூடுகின்றன.