
பிறரை நம்பி வாழாமல் தன்னம்பிக்கையுடன் வாழப் பழகவேண்டும். பிறரை அதிகமாக நம்பும் பொழுது சில சமயம் நமக்கு மனக் காயம் உண்டாகலாம். பிறரை நம்பி வாழும்போது அவர்கள் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யாமல் போகலாம் அல்லது ஏமாற்றலாம். தன்னம்பிக்கை இல்லாமல் பிறரை சார்ந்து இருக்கும்போது நம்மால் வாழ்வில் முன்னேற முடியாது. தன்னம்பிக்கை இருந்தால் நாம் நம் திறமைகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறலாம். எனவே தன்னம்பிக்கையுடன் வாழப் பழகவேண்டும்.
சுயசார்பு என்பதை வாழ்க்கையில் கடைபிடித்தால் யாரும் நம்மை ஏமாற்ற மாட்டார்கள். அத்துடன் நம்முடைய சொந்த தவறுகளில் இருந்து வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டு முன்னேறலாம்.
எல்லாவற்றிற்கும் பிறரை எதிர்பார்த்து இருப்பது மற்றவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அதனால் நம்மை பிடிக்காமல் போகவும் வாய்ப்புகள் அதிகம். எனவே சுயசார்பாக இருப்பது ஆரோக்கியமானது.
தன்னம்பிக்கையுடன் சுயமாக பிறரை சார்ந்து இல்லாமல் செயலாற்றுவது நம்மை தைரியமாகவும், திறமையாகவும், எதையும் சமாளிக்கும் திறனையும் கொடுக்கும். வேலையை விரைவுபடுத்தி முடிக்கவும், செய்யும் காரியங்களில் சுய திருப்தி பெறவும், நம்முடைய சுயமரியாதையை பாதுகாக்கவும், அவசரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் உதவும்.
இதுவே நாம் பிறரை சார்ந்து இருக்கும்பொழுது நாம் எதிர்பார்த்தபடி சில சமயம் நடக்காமல் போகும். இதனால் மன வருத்தம் உண்டாகும். எனவே சுயசார்பு என்பது நம்முடைய கண்ணியத்தையும், சுயமரியாதையும் பராமரிக்க உதவும்.
பிறரை தொந்தரவு செய்யாமல் நம் வேலைகளை, நம் விருப்பங்களை நாமே கவனித்து செய்து கொள்வதால் பிறரிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுத்ததற்கெல்லாம் பிறரை சார்ந்திருப்பது என்பது தவறான செயலும் கூட. ஏனென்றால் பிறரை சார்ந்து இருப்பது அதிகமாகும் பொழுது நம்முடைய சுய முயற்சிகள் இல்லாமல் போகும்.
புதுப் புது விஷயங்களை கற்றுக்கொள்வதை இழக்க வேண்டி வரும். சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திகைத்து நிற்போம். இதனால் அறிவாற்றல் உணர்வு பின்தங்கி போகும். வாழ்க்கை சலிப்பானதாக மாறும். வாழ்க்கையில் எதிர்ப்படும் புதிய சவால்களை எதிர்கொள்ள பயம் கொள்வோம்.
சுயசார்பு வாழ்க்கையில் சில அற்புதமான பாடங்களை நமக்கு கற்பிக்கும். நம்மைத் திறமையாக செயல்படத் தூண்டும். அத்துடன் முக்கியமாக வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு சவால்களை எதிர்கொள்ள தயாராவோம். சுதந்திரமாக செயல்படுவோம்.
எனவே நம்மால் முடிந்த இடத்திலும், அவசியமான இடத்திலும் பிறரை சார்ந்து வாழாமல் சுயமாக இருப்பது நல்லது. நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையிலும், நம்மால் தனியாக இயங்க முடியாது என்று எண்ணும் மிக அவசியமான நேரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்க தயங்கவோ வெட்கப்படவோ வேண்டாம்.
பிறரை நம்பி வாழ்வது சில சமயங்களில் நல்லதாக இருந்தாலும், மற்றவர்கள் மீது அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு பிறகு கஷ்டப்பட நேரிடும். சொந்தமாக முடிவெடுத்து, பொறுப்பாக செயலாற்றி, தன்னம்பிக்கையுடன் வாழ்வதன் மூலம் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க முடியும். எனவே பிறரை நம்பி வாழாமல் நம்மை நம்பி வாழ்வதே நல்லது.
நான் சொல்வது சரிதானே நண்பர்களே!