
ஒரு நல்ல ஐடியா நமக்கு இருக்கும். ஆனால் அதை எங்கே தொடங்கி, யாரை அணுகி, எவ்வாறு உள்ளே நுழைவது என்பது மட்டும் பிடிபடாமல் இருக்கும். அப்படிப்பட்ட வேளையில், அது குறித்த செய்திகளைத் தேடித்தேடி சேகரித்து தெரிந்துகொண்டால் விரைவில் வெற்றி பெறமுடியும்.
* வறுமையில் வருகின்ற அவமானங்கள் பின்னாளில் வாழ்க்கையில் பெருமையையே கொண்டுவந்து சேர்க்கும்.
* சங்கடங்களை பொருட்படுத்தாது எப்போதும் என் கடன் பணிசெய்வதே என இடைவிடாது இயங்குவோருக்கு, வெற்றி காத்துக்கொண்டு இருக்கிறது.
* வறுமை நிலையில் புலமை வெளிப்படும்போது எதிர்ப்புகள் எல்லாத் திசையில் இருந்தும் கிளம்பும். அதை எதிர்கொண்டு இதயம் தளராது, எதிர்நீச்சல் போடும் தைரியம் மட்டும் இருந்தால் போதும் வெற்றி நிச்சயம்.
* பட்டங்கள் வாங்கிவிடுவதால் மட்டும் பெரும்பலன் இன்று இருப்பதாகத் தோன்றவில்லை. சுயஉந்துதல் உள்ள மனிதர்களால்தான் பல சுயமுன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
* சில நேரங்களில் இதுவரை சந்திக்காதவரைச் சந்திக்கின்றபோது, அதுவரை இருந்த நிலையில் இருந்து நாம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு முன்னேறுவோம்.
* இருக்கின்ற நேரத்தை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதை உழைப்பாக மாற்றிக்கொண்டே இருந்தோமானால், தம்மைப் பார்த்து எல்லோரும் வியப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
* காலத்தின் தேவை கருதி கனகச்சிதமாக இயங்குகின்றவர்களே வெற்றியாளர்களாக என்றைக்கும் உள்ளனர்.
* உலக அதிசயமாய் உயர்ந்து நிற்கவேண்டும் என்றால் அதற்கே உரிய ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும். அதை கண்மூடித் தனமாக செய்யாது, ரொம்ப கால்குலேட்டிவாக முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி காண முடியும்.
* நாம் செய்வது எந்தத் தொழில் என்றாலும் சரி, அந்தத் தொழில் குறித்த, தெளிவும், எதிர்கால நோக்கமும், சமயோசிதமான முடிவும் எடுக்கத் தெரித்து இருக்க வேண்டும். நாம் என்ன வேலை செய்கின்றோம் என்பது முக்கியமல்ல. அந்த வேலையை எப்படி வித்தியாசமாக சிறப்பாக செய்கின்றோம் என்பதுதான் முக்கியம்.
* தோல்வி என்பது ஒரு பின்னடைவுதான். அதுவே முடிவாகி விடாது. தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து, அதை எப்படிச் சரிசெய்ய முடியும் என்று திட்டமிட்டு முயன்றால் முடியாதது என்பது ஒன்றும் இல்லை.
* நம் கண்முன்னே தெரியும் வெற்றியாளனின் பாதையிலேயே பயணிக்க நினைக்காதீர்கள். தனித்துவம் மிக்க உங்களுக்கான பாதையிலே பயணித்துப் பாருங்கள். உங்களாலும் எல்லோராலும் விரும்பக்கூடிய வெற்றியை அடைய முடியும்.
* ஒருவனது சூழ்நிலையே அவனை, எவனாக வேண்டும் என நிர்ணயிக்கிறது. ஆகவே பெரிதாக சிந்தியுங்கள். பிரம்மாண்டமாக முயற்சியுங்கள். பிரமிப்பான வெற்றியை வெளிப்படுத்துவீர்கள்.
* சாஸ்திர, சம்பிரதாயத்தின் மீது பழிபோட்டு, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். விடாமல்திட்டமிட்டு செயல்படுங்கள். இன்றில்லை என்றாலும் நாளை நீங்கள்தான் வெற்றியாளர்.
* உங்கள் நம்பிக்கை சில நேரங்களில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்தாலும், சட்டென்று மாற்றுப்பாதையை விரும்பாதீர்கள். தொடர்ந்து முழுமனதோடு அதே பாதையில் பயணியுங்கள். விரைவில் உங்களுக்கான வெற்றி கிடைக்கும்.
* தம் சிறு வயதின்போது மனதில் எழும் சிந்தனைகளே, நமது பெரிய வயதிலும் எதிர்காலமாக தென்படுகிறது.
* தனக்கு முன்னே செல்பவனை, பின்னுக்குத் தள்ளுகின்ற வேகமும், விவேகமும் இருக்கின்றவன்தான் உண்மையான வெற்றியாளன்.
* நம்மால் முடியுமா? என்றால் அது முடியாது! நம்மாலும் முடியும் என்றால் அது முடியும். இந்த நம்பிக்கைதான் நாளும் நம்மை தகர்த்தும் நெம்புகோல்.