

இன்றைய அவசர உலகில், நாம் அனைவரும் ஒருவிதமான சோர்வை உணர்கிறோம். இது உடல் உழைப்பால் வரும் களைப்பு அல்ல; எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களால் வரும் மனச்சோர்வு. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவது, எதிர்காலத்தைப் பற்றிய பயம், செல்போன் நோட்டிஃபிகேஷன், முடிக்காமல் பாதியில் நின்ற வேலைகள் என நம் தலைக்குள் ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அறை அமைதியாக இருந்தாலும், நம் மனம் மட்டும் அலறிக்கொண்டே இருக்கிறது.
பௌத்த துறவியான ஷூக்கி மாட்சுமோட்டோ எழுதிய 'A Quiet Mind' என்ற புத்தகம், இந்த இரைச்சலை எப்படி கையாள்வது என்பதை மிக அழகாக விளக்குகிறது. அவர் உலகைத் துறந்து ஓடாமல் இந்த உலகத்தோடு நாம் வைத்திருக்கும் உறவை மாற்றிக்கொள்ளச் சொல்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில எளிய பாடங்கள் இதோ:
1. இரைச்சல் என்பது வெளியே இல்லை, உள்ளே இருக்கிறது:
நம் மனம் ஏன் சத்தமிடுகிறது? பணம், அந்தஸ்து, மற்றவர்களின் விமர்சனம் என எல்லாவற்றையும் நாம் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் காரணம். இவற்றின் மீதான பிடிப்பை சற்றே தளர்த்தினால், தானாகவே அமைதி துளிர்க்கும்.
2. எல்லாம் இப்போதே முடிய வேண்டிய அவசியமில்லை:
வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் உடனே தீர்வு காண வேண்டும், எல்லாவற்றையும் உடனே முடிக்கவேண்டும் என்ற பதற்றம் நமக்கு இருக்கிறது. ஆனால், சில விஷயங்கள் பாதியில் நிற்பதில் தவறில்லை. "இப்போதைக்கு இது இப்படியே இருக்கட்டும்" என்று விட்டுவிடுவது ஒரு கலை. அந்த நிதானமே உங்களுக்கு நிம்மதியைத் தரும்.
3. எண்ணங்களை விரட்டாதீர்கள்:
மனதில் தோன்றும் எண்ணங்களை அடக்க முயன்றால், அவை இன்னும் வேகமாகத் துள்ளும். ஒரு ஆற்றில் மிதக்கும் இலையைப் பார்ப்பதுபோல உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள். அவற்றை எதிர்க்கவும் வேண்டாம், அவற்றின் பின்னால் ஓடவும் வேண்டாம். வெறுமனே கவனிப்பது மட்டுமே அமைதிக்கு வழி.
4. அமைதி என்பது ஒரு பயிற்சி:
மன அமைதி என்பது ஒருமுறை கிடைத்துவிட்டால் நிரந்தரமாகத் தங்கிவிடும் ஒன்றல்ல. அது தையல் வேலை அல்லது சமையல் போல ஒரு கலை. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் எளிய பழக்கவழக்கங்கள் மூலமே அதை மீண்டும் மீண்டும் அடையமுடியும்.
5. தொழில்நுட்பத்தை கவனமாகப் பயன்படுத்துங்கள்:
செல்போன்களோ அல்லது சமூக ஊடகங்களோ நமக்கு எதிரி அல்ல. விழிப்புணர்வு இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துவதுதான் சிக்கல். தேவையில்லாத நேரங்களில் அலைபேசியைத் தள்ளி வைப்பது நம் மனதிற்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு.
6. மெதுவாகச் செயல்படுதல்:
வேகமாக ஓடுவதுதான் வெற்றி என்று உலகம் சொல்கிறது. ஆனால், மெதுவாகச் செயல்படுவது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை. சாப்பிடும்போது ரசித்துச் சாப்பிடுவது, நடக்கும்போது கால்களை அழுத்தி பூமியில் ஊன்றி நடப்பது போன்றவை தற்போதைய தருணத்தில் வாழவைக்கும்.
7. சாதாரண விஷயங்களில் பேரானந்தம்:
பெரிய சாதனைகளில்தான் அமைதி இருக்கிறது என்று நினைக்காதீர்கள். பாத்திரம் கழுவுவது, மூச்சை கவனிப்பது, ஒரு பூவைப் பார்ப்பது போன்ற மிகச் சாதாரண செயல்களிலேயே அமைதி ஒளிந்திருக்கிறது. சாந்தம் என்பது ஏதோ ஒரு மாயாஜாலம் அல்ல, அது அன்றாட வாழ்க்கையை ரசிப்பதே ஆகும்.
எண்ணங்களோடு போர் செய்வதை நிறுத்திவிட்டு, உங்களோடு நீங்கள் சமாதானமாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். அமைதி என்பது எங்கோ ஒரு மலையடிவாரத்தில் இல்லை, அது உங்கள் உள்ளேதான் இருக்கிறது. உலகமே இரைச்சலாக இருந்தாலும், உங்களால் அமைதியாக இருக்க முடியும்.