வாழ்க்கையில் இலக்கு வெற்றிப் பயணமே!

Motivational articles
Motivational articles
Published on

வாழ்க்கையில் தவறிவிட்ட நேரங்களை, நீங்கள் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள். அதேமாதிரி நீங்கள் தவறவிட்ட நேரங்களையும் மற்றும் நாட்களையும் எண்ணி வருத்தப்படாதீர்கள். ஏனென்றால் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களைப் பற்றிய நினைவுகளை நிகழ்காலத்தில் அசைபோட்டால், அந்த காலமும் வீணாக கடந்து போகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் தவறிவிட்ட காலமும், தவறவிட்ட காலமும் உங்களை சரிசெய்ய எடுத்துக்கொண்ட அனுபவ காலமாக எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதை உணருங்கள்,

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல எண்ணங்களை விதைத்துகொண்டே இருக்க வேண்டும்.‌ அதுதான் பிறகு வரும் அடுத்த சந்ததிகளுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்கும்.

வாழ்க்கையில் படரும் கொடி போல், நீங்கள், நல் வாழ்வியல் சார்ந்த நெறிகளை பற்றி, வாழ்ந்து காட்டினால், எந்த அறமும் உங்களை விட்டு போகாது. இவற்றை எல்லாம் பற்றுதல் மாறாமல் வாழ்க்கையில் ஏற்று வாழ்ந்த காலம் பொன்னான காலம்.

உங்களுடைய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் மற்றும் எண்ணங்களை வளர்த்துக்கொண்டே இருங்கள். அப்போதுதான் என்னற்ற செயல் திறன், கடல் அலைகள் போல் உண்டாகி, பல நல்ல காரியங்களுக்கு உந்துசக்தியாக துணை நிற்கும்.

வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை சந்திக்க நேரிடும்போது, முதலில் பயத்தை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடுங்கள். பயத்தோடு அணுகும் காரியமும், பதற்றத்தோடு செய்யத்துடிக்கும் செயலும் எந்த நம்மையும் தருவது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் முன்னேற நினைக்கும்போது, பல கரங்கள் உங்களை வலு சேர்க்க வராது. மாறாக பலப் பல தடைகளை ஏற்படுத்தும் திரை மறைவு வேலைகள் நடந்து கொண்டு இருக்கும். இதற்கெல்லாம் அசராமல், அதற்கு மேலாக நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை அறிந்து களமாடுங்கள்.

இதையும் படியுங்கள்:
கோபத்தீயை கனிவான வார்த்தையால் அணைக்க முற்படுங்கள்!
Motivational articles

வாழ்க்கையில் கடந்துபோக வேண்டிய தருணங்களை, கடந்து செல்லும் பாதையில் செல்லவேண்டும். எதிர்கொள்ளும் கணைகளை, எதிர்க்கொண்டு, அதனை வீழ்த்தி காட்டும் திறமை, வலிமை வலுப்பெற்று, களத்தில் நின்று, போராடி வெற்றிக் கொடி நாட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில், ஏளனம் செய்து, உங்களை திசை திருப்பி, மடை மாற்றம் செய்ய நினைக்கும் அற்ப மனம் கொண்ட மனிதர்களை புறம் தள்ளி, உங்களை அவமானம் செய்து, உங்கள் மேல் சேற்றை வாரி இறைக்க நினைப்பவர்களை, புறம் கையில் தட்டிவிட்டு, உங்களின் இலக்குகளின் தேடலை மட்டும் கவனம் சிதராமல், வலுவான தடங்கள் பதித்து முன்னேறும் வழியில் பயணம் செய்யுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி என்னும் மைல் கல்லை அடையும் மனிதர்களின் பின்னால், தங்களுடைய உழைப்பை விடவும் பன்மடங்கு எதிர்வினை இருந்திருக்கும். அவற்றை எல்லாம் எதிர்கொள்ள வைப்பது, அவர்களின் விடாமுயற்சிதான் என்பது நிதர்சனமான உண்மை.

வாழ்க்கையில் முயற்சியை பயிற்சியாக எடுத்துக்கொண்டு, விடாமுயற்சியை வெல்லும் மந்திர சொல்லாக உள்வாங்கி, நிலைகள் பல தாண்டி எல்லாவற்றையும் கடந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு ஜெயித்து காட்டுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com