
பழைய, பழகிய இடத்திலேயே தொடர்ந்து இருந்தால் யாருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம், வெற்றி கிடைக்காது. கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியே வந்தால்தான் புதிய வாய்ப்புகள் கிடைத்து வெற்றி அடைய முடியும்.
வழிகள்;
1. புதிய இடம் அல்லது புதிய வேலை கடினமாக இருக்கும், நிலைமை மோசமானதாக இருக்கும் என்று நினைத்து அச்சப்படக்கூடாது. அதற்கு பதிலாக அங்கே சுலபமான வேலையாக இருக்கும். புதிய வேலை, திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்ததாக இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு அசத்தலாம் என்று தைரியமாக நினைப்பது தன் கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியே வர உதவும் முதல் வழியாகும்.
2. கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியே வந்தால்தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் இப்போது இருக்கும் நிலைமை மாறி வளர்ச்சிகிட்டும். முன்னேற்றம் அடையலாம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
3. எதிலும் நல்லது, கெட்டது என் இரண்டு பக்கங்கள் உண்டு. ஏதும் தவறாக நடந்து விடுமோ என்று எதிர்மறையாக நினைப்பதற்கு பதிலாக சரியாகத்தான் நடக்கும் என்கிற நேர்மறையான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
4. சரியான குறிக்கோளை அமைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லை என்றால் யாரும் ரிஸ்க் எடுக்கவே மாட்டார்கள். ஆனால் ஒரு குறிக்கோளை அமைத்துக்கொண்டால் அதற்காக செயல்பட நினைப்பார்கள். அப்போது கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியே வருவதில் கஷ்டம் எதுவும் இருக்காது.
5. புதிய வேலை அல்லது புதிய இடத்திற்கு செல்லும்போது இப்போது இருப்பதைவிட மிக நல்ல வேலை, பதவி, அதிகாரம், நல்ல வருமானம் அந்தஸ்து, அங்கீகாரம் போன்றவை கிடைக்கும் என்ற நன்மைகளை நினைத்துப் பார்க்கும்போது வழக்கமான இடத்தை விட்டு வெளியே வர எண்ணம் உண்டாகும்.
6. புதிய வேலையில் நல்ல அனுபவங்கள், நன்மைகள் கிடைக்கும் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும். அது வாழ்க்கையை மிகவும் உற்சாகமாக வைக்கும். உதாரணமாக கணவனின் வருமானம் போதவில்லை. ஆனால் வேலைக்குச் சென்றால் வீட்டு வேலையும் செய்து கொண்டு அலுவலக வேலை செய்யவேண்டி இருக்கும் என்று எண்ணி தயங்கக்கூடாது. புதிய வேலைக்குச் சென்றால் பிடித்த உடைகள் வாங்கலாம், இன்னும் சௌகரியமான வாழ்க்கையை வாழலாம் என்று நினைக்கும் போது கம்போர்ட் ஸோனை விட்டு வெளியே வர தயக்கம் இருக்காது.
7. என்னென்ன விஷயங்கள் புதிய வேலையில் இருக்கும் என்று எண்ணி அதை ஒரு பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டும். அது சம்பந்தமான தகவல்களைத் தேடி திரட்டிக் கொண்டால் புது இடத்திற்கு செல்வதற்கு முன்னர் தைரியமும் ஊக்கமும் உண்டாகும்.
8. குடும்பத்தில் நட்பு வட்டத்தில், அல்லது உறவினர்களில் யாராவது புதிய விஷயங்களில் ஈடுபட்டு, அதனால் அடைந்திருக்கும் நன்மைகளை நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களிடம் யோசனை கேட்டு அதன்படி நடந்து கொள்ளலாம். இந்த எட்டு வழிகளும் ஒருவருக்கு கம்போர்ட் ஸோனை விட்டு வெளியேவர உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.