
வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே உண்டு ஒரு சிலருக்கு அது எளிதில் வாய்த்து விடும். சிலருக்கோ அது கைக்கெட்டாத கனியாக 'சீசீ இந்த பழம் புளிக்கும்' என்ற கதையாக மாறிவிடும். இருப்பதைக்கொண்டு திருப்தியுடன் வாழ்வார்கள் அவர்கள். ஆயினும் மனதின் ஓரத்தில் தனக்கு வெற்றி கிட்ட வில்லையே எனும் ஏக்கம் அவர்கள் மறையும்வரை இருந்து கொண்டுதான் இருக்கும்.
எப்போதும் வெற்றிக்கு அடிப்படை தேவை நம்பிக்கைதான். 'தன்னிடம் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு பிறரிடமும் கடவுளிடமும் நம்பிக்கை உண்டாகாது' என்கிறார் சுவாமி விவேகானந்தர். இது எவ்வளவு உண்மையான பொன்மொழி. வெற்றிக்கு முதல் தேவை 'நம்மால் முடியும்' எனும் நமக்குள்ள தன்னம்பிக்கைதான்.
அடுத்து வெற்றிக்கு எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத தன்மை. வாழ்க்கை அனைவருக்கும் பூப்படுக்கையாக மாறாது. போகும் பாதையில் உள்ள முள் கற்களை அகற்றி செல்ல வேண்டிய இடத்தை சென்று அடைவதே நமக்கான சவால். அதேபோல்தான் வெற்றி அடைய எதிர்வரும் தடைகளையும் சங்கடங்களையும் தகர்த்து நாம் அடையவேண்டிய இலக்கை அடைய முயற்சிகள் எடுக்க வேண்டும்.
வாழ்க்கையின் நடுவே வரும் சங்கடங்களை நினைத்து மனம் வருந்தி தளர்ந்தோமானால் நம்மால் அடுத்த செயலில் ஈடுபாடு காட்டி முன்னேற முடியாது. அதற்கான சக்தியை இழந்துவிடுவோம்.
சிறு எறும்புகளைப் பாருங்கள் தங்கள் உணவுத் தேவைக்காக சுறுசுறுவென்று நிற்காமல் நடந்துகொண்டே இருக்கிறது. பெரும் சக்தி கொண்ட நம்மால் நம் வெற்றிக்குத் தேவையான உழைப்பை தர முடியாதா? உழைப்பு என்பது வெற்றிக்கு உதவும் நற்பண்பு ஆகும்.
சிலர் ஒரு திட்டத்தை தீட்டி விட்டு ஒரே ஒரு தடவை மட்டும் அதை முயற்சி செய்துவிட்டு 'இதெல்லாம் ஆகாத காரியம்' என்று தளர்ந்து போவார்கள் ஆனால் அதே திட்டத்தை மென்மேலும் முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுபவர்களும் உண்டு. நிறைய பேர் திட்டத் திலகங்களாக ஆலோசனை தந்து பெயர் பெறுவார்கள்.
ஆனால் அந்தத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுவார்கள். காரணம் அவர்களின் ஓயாத உழைப்பும், தேடலும். திட்டம் தீட்டினால் மட்டும் போதாது அதற்கான முழு முயற்சி மற்றும் ஆர்வம் இருந்தால்தான் அந்தத் திட்டம் வளர்ச்சி பெற்று முழுமை அடையும். நடுவில் வரும் தடைகளை கண்டு அஞ்சி ஒதுங்குவோமானால் எப்போதும் ஒதுங்க வேண்டிய சூழலே ஏற்படும். ஏனெனில் மனதில் துணிவு என்பது குறைந்து போய் விடும்.
அடுத்து தடைகள் என்பதே இல்லை வேண்டாம் என்றால் வெற்றி என்பதும் கிடைக்காமல் போய்விடும். எவ்வளவுதான் பணம், வசதிகள் இருந்தாலும் சிலர் போந்தக்கோழி போல் இருக்கும் இடத்திலேயே சொகுசாக இருந்து எந்த ஒரு சாதனையும் செய்யாமல் மறைந்து போவார்கள். காரணம் வெற்றி வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலும் முயற்சியும் அவர்களிடம் இல்லாததே.
அதேபோல் போதும் என்ற மனநிலையில் தங்கள் முழுத்திறமையை அறியாமல் ஒரு வட்டத்தைப் போட்டு அதிலிருந்து வெளிவராமல் மடிபவர்கள் நிறைய பேர். உண்டு. வாழ்க்கையில் வெற்றி வேண்டுமென்றால் எதிர்ப்பைககண்டு அஞ்சக்கூடாது.
நம் வீட்டுப் பிள்ளைகள் அழகான பட்டத்தை செய்து வெளியே எடுத்துச் சொல்வார்கள். நாம் நினைப்போம். வலிமையற்ற இந்த காகிதம் எப்படி பறக்கும் என்று? ஆனால் எதிர்வரும் காற்றை கிழித்துக்கொண்டு அந்த பட்டம் வானில் உயர பறக்கும். காற்று இடையில் வருகிறதே என்று அஞ்சி காற்றாடி தயங்குவதில்லை.
நாமும் எதிர்வரும் தடைகள் எனும் காற்றைக் கண்டு அஞ்சாமல் அதை உடைத்துக்கொண்டு முன்னேறும் கற்றாடிகளாக இருப்போம்.