

உங்கள் வாழ்க்கைக்கு உதவாத இரண்டு விஷயங்களை கட்டாயம் கைவிடுங்கள். ஒன்று தாழ்வு மனப்பான்மை மற்றொன்று தலைக்கனம்.
வாழ்க்கையில் எண்ணங்களையும் செயல்களையும் வடிவமைத்து செயல்படுத்த தடைக்கல்லாக இருக்கும் தாழ்வுமனப்பான்மையை வேரருங்கள். அதேபோல், நல்ல வாழ்க்கை அமைந்தாலும், அதனை அமைதியாகவும் நிம்மதியாகவும் வழி நடத்திச்செல்லும் பாதைக்கு குறுக்கே நிற்கும் தலைக்கனத்தைக் வெட்டி எறியுங்கள்.
உங்களிடம் இருக்கும் ஆற்றலை முதலில் நீங்கள் அறியவேண்டும் என்பதை உங்களுக்கு தருவதே தன்னம்பிக்கைதான். அந்த தன்னம்பிக்கை உங்களுடன் இரத்தத்தோடும் சதையோடும் இரண்டற கலந்துவிட்டால், உங்கள் மனதில் இருந்து தாழ்வுமனப்பான்மை தானாக வெளியேறிவிடும்.
வாழ்க்கையில் சிந்திக்கும் திறமையை வளர்த்துக் கொண்டால், உங்களுடைய எண்ணங்களில் நல்ல மாற்றங்களை உருவாக்கும். அந்த நிகழ்வு உங்களிடம் நடக்கும் போதெல்லாம், உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கி, முன்னேற்றம் அடையும் சூழ்நிலை தானாக தடம் பதியும்.
வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில், எதோ ஒரு காரணத்திற்காக உங்கள் மனம் சோர்வாக இருக்கலாம். எதிலும் உங்களால் திறமையோடு செயலாற்ற முடியாது போகலாம். எதுவும் சரியாக போகாதது போலவும் தோன்றலாம். அதற்கு காரணம் தேடாதீர்கள்.
அந்த நேரத்தில், நீங்கள் எந்த நிலையிலும் தாழ்வுமனப்பான்மை என்ற பூதத்திற்கு உங்கள் மனதில் இடம் கொடுத்து விடாதீர்கள். சில நேரம், புரியாத காலங்கள் கூட பாடம்தான். அனைத்திற்கும் நல்ல நேரம் வரும். அன்றைய தினம் அமைதியாக கடந்து போங்கள்.நாளைய நிலை உங்களுக்கு நல்ல நாளாக விடியும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னை நம்பினால் அதுவே போதும். எந்த சூழ்நிலையிலும் வென்று வரும் மனப்பான்மை உங்கள் கண்முன்னே தெரியும். எடுத்துச்செல்லும் செயலுக்கு உந்துசக்தியாக துணை நிற்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தலைக்கனம் எங்கிருந்து அல்லது எதிலிருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தான் எனும் அகந்தை கொண்ட மனதில் தலைக்கனம் கோலோச்சி நிற்கும். தன்னை மிஞ்சிய மனிதன் எவரும் இல்லை என்ற ஆணவத்தின் உச்சத்தில் இருக்கும்போது, நின்று வினை செய்யும்.
ஆகவே வாழ்வில் தான் என்பதை தவிர்த்து, நாம் என்ற சொல்லுக்கு உயிரும், உயர்வும் தருவோம். உலகில் அன்புக்கு அடுத்து பணிவை விட ஆகச் சிறந்த சொல் வேறொன்றும் அகராதியில் இல்லை. வளைந்து கொடுக்கும் நாணலின் வேர்கள், எந்த புயலுக்கும் சாய்ந்ததில்லை. அசையாமல் நிற்கும மரங்கள் கூட, வேரோடு சாய்ந்து விடுகின்றன.
வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நிற்பது, உங்கள் வாழ்க்கையில் கடினமான உழைப்பினால் வந்த உயர்வான நிலை. அது எவராலும் போற்றப்படும். தலை வணங்கி நிற்பது, அது உங்களின் உளமார்ந்த பணிவின் வெளிப்பாடு. அது உங்களை சிகரம் தொட வைக்கும்.
வாழ்க்கையில் தாழ்வுமனப்பான்மை ஒருவருக்கு ஏற்படின், பல விடியல் பொழுதுகளைக் கூட, இரவு நேரங்களாக மாற்றிவிடும். ஆகவே மனதின் தாழ்நிலை வேரறுத்து, வாழ்நிலைக்கு நம்பிக்கை விதைத்திடுங்கள்.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தலைக்கனம் சூடிக் கொள்ளாதீர்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு சுருக்குக் கயிறாக மாறும் சூழ்நிலை ஏற்படுத்தும். மனதின் தாழ்வுத்தளம் நீக்கி வாழுங்கள். உயர்ந்த வாழ்வில், உயர் தளம் தலைக்கனம் இன்றி வாழப்பழகுங்கள்!