
மனதில் தேவையில்லாத எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும். தேவையில்லாத எண்ணங்கள் வருவதற்கான காரணங்கள் பல உள்ளன. எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் இருப்பதும், கடைசி நிமிடத்தில் குழம்பி என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பதும் ஒரு காரணமாகும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும். காரணம் இவர்கள் கடந்த காலத்தில் வருத்தம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை சந்தித்து இருக்கலாம்.
அவை மனதில் குழப்பத்தையும், பயத்தையும் உண்டு பண்ணலாம். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் என்பது அவசியம். அது இல்லாவிட்டால் கடைசி நிமிடத்தில் குழப்பங்கள் ஏற்படும். எனவே செய்ய வேண்டிய செயல்களை திட்டமிட்டு அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடிப்பது மன அழுத்தத்தை குறைப்பதுடன் தேவையற்ற எண்ணத்தையும் போக்கும்.
சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிப்பார்கள். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தேவையில்லாத எண்ணங்கள் வரலாம். இதை அகலக்கால் வைப்பது என்று கூறலாம். ஒரு வேலையை எடுத்து அதைத் திறம்பட செய்து சிறப்பாக முடிக்க வேண்டும். அதற்காக எண்ணங்களை ஒரு இடத்தில் குவித்து செயலாற்றுவது வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.
அதை விடுத்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிக்கும் பொழுது மனதில் தேவையில்லாத எண்ணங்களும், குழப்பமும் ஏற்படுவது இயற்கை. எனவே ஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்துவது அதனை சிறப்பாக முடிக்க உதவுவதுடன் தேவையற்ற குழப்பத்தையும் தவிர்க்க உதவும்.
எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும் பொழுது மனம் அழுத்தத்திற்கு உள்ளாகி தேவையில்லாத எண்ணங்கள் எழும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் புகுந்து எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போக வைக்கும். இதனால் நிம்மதி இழந்து மன அழுத்தம் தான் அதிகமாகும். இதற்கு தேவையற்ற எண்ணங்களை வளர்க்காமல் அவை மனதில் தோன்றும் போதே புறக்கணித்து விடுவது நல்லது. அத்துடன் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் செய்ய மனதை அமைதிப்படுத்தவும், தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபடவும் உதவும்.
மனதில் தேவையில்லாத எண்ணங்கள் வருவது இயல்பானது தான். ஆனால் அவற்றை எப்படி கையாள்வது என்று தெரிந்து கொண்டால் மனக்குழப்பத்தை எளிதில் போக்கிக் கொள்ளலாம். எதிர்மறை எண்ணங்களை விடுத்து எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். நம்முடைய நலம் காக்கும் நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவதும், நம்முடைய கவலைகள், அச்சங்களை பகிர்ந்து கொள்வதும் மன அமைதிக்கு உதவும்.
சில சமயங்களில் சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள், செய்திகள் போன்றவையும் நம் மனதை குழப்பும் தேவையில்லாத எண்ணங்களை உண்டாக்கலாம். தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்தலாம். இதற்கு சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்துவதும், அவற்றின் உண்மைத் தன்மை அதிகம் தெரியாததால் தேவையற்றதை மனதில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
இப்படி மனதைக் குழப்பும் தேவையில்லாத எண்ணங்கள் வருவதை தவிர்ப்பதற்கு சுவாசத்தில் கவனம் செலுத்துவதும், வேறு ஏதாவது ஆக்கபூர்வமான செயல்களில் மனதை ஈடுபடுத்துவதும் நல்லது. அதிக குழப்பம் ஏற்பட்டு நம் மனதை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு சிறந்த மனநல நிபுணரின் ஆலோசனையை நாடுவது நல்லது.