
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை அதிகப்படியாக சிந்தனை செய்வதுதான். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அது இப்படியாகிவிடுமோ, அப்படி முடிந்து விடுமோ என்று அதைப்பற்றி மிகையாக சிந்தித்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். பகவத் கீதை அதிகப்படியான சிந்தனையை வெல்ல சில வாழ்க்கைப் பாடங்களை சொல்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஓவர் திங்கிங் எனப்படும் அதிக சிந்தனையின் விளைவுகள்.
அதிகமாக சிந்திப்பது பெரும்பாலும் மனப் பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனசோர்வில் முடிகிறது. இதனால் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனம் குறைகிறது. சிலர் மனம் தடுமாறி, அந்த வேலையை ஏனோ தானோவென்று அரைகுறையாய் செய்வார்கள். மண் அழுத்தம் அதிகமாகி நிம்மதி தொலையும். மகிழ்ச்சி விடைபெற்று விடும்.இதிலிருந்து விடுபட்டு தெளிவாக யோசித்து மன அமைதியுடன் திகழ பகவத் கீதை சொல்லும் ஐந்து பாடங்கள் பற்றிப் பார்ப்போம்.
1. செயலில் கவனம் செலுத்துங்கள் விளைவுகளைப் பற்றி அல்ல:
கடமையைச் செய்; பயனை எதிர்பாராதே என்பது கீதையின் முக்கியப் பாடமாகும். எந்த ஒரு வேலையையும் முழுமனதோடு ஈடுபட்ட செய்ய வேண்டும். இந்த செயலை செய்தால் இந்த விதமான பலன்கள் கிடைக்கும் என்று எண்ணி அதை பற்றி அதிகமாக யோசித்து கவலைப்படாமல் செயலை செம்மையாக செய்யவேண்டும். பலன்களில் அதிக பற்றுக்கொள்ளாமல் கடமையை சரியாக செய்ய வேண்டும். நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விளைவுகளை பற்றி கவலைப்படுவதுதான் அதீத சிந்தனை. அதற்கு பதிலாக முயற்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் செயலை சிறப்பாக செய்து மனக்குழப்பத்தை தவிர்க்கலாம்.
2. கட்டுப்படுத்த முடியாததை எண்ணி கவலைப்படாதீர்கள்; விட்டுவிடுங்கள்:
ஒரு செயலின் முடிவு எப்படி இருக்குமோ என்று எண்ணி கவலைப்படுவதை விட வேண்டும். அது பாசிட்டிவ் ஆக இருக்குமோ அல்லது நெகட்டிவ் ஆக இருக்குமோ என்று எண்ணி கவலைப்படும் போது செய்யும் செயல் சிறப்பாக அமையாது. வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படும் போது அங்கே பயமும் சந்தேகமும் எழுகின்றன. அதிகப்படியான சிந்தனை ஆக்கிரமித்துக்கொள்ளும். எனவே நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை பற்றி சிந்தனை செய்வதை விட வேண்டும்.
3. நிலையான மனது;
வெற்றி, தோல்வி, உயர்வு, தாழ்வு போன்றவற்றால் பாதிக்கப்படாத அமைதியான மற்றும் நிலையான மனதை வளர்த்துக் கொள்வதை பகவத் கீதை ஊக்குவிக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்கும் போது உணர்ச்சிக் கொந்தளிப்பில் முடிகிறது. ஆனால் நிலையான மனம் சவால்களை கருணை மற்றும் அமைதியுடன் எதிர்கொள்ள உதவுகிறது. யாராவது உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசும்போது உடனே எதிர்வினையாற்றாமல் அமைதியாக அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டும். மனதை எப்போதும் நிதானமாக அமைதியாக வைத்துக்கொண்டால் வெற்றி தோல்வியை பற்றி மனம் கவலைப்படாது.
4. தெய்வீக சக்தியிடம் சரணடைதல்;
தெய்வத்திடம் அல்லது உயர்ந்த சக்தியிடம் சரணடைவது நம்பிக்கையை வளர்க்கிறது. முடிவெடுக்கும் மனச்சுமையை குறைக்கிறது. அதிகமாக சிந்திப்பது பெரும்பாலும் தனிப் பொறுப்பு என்கிற மாயையில் இருந்து உருவாகிறது. பிரபஞ்சத்தை அல்லது கடவுளை நம்பி கவலைகளை ஒப்படைப்பது மகத்தான நிவாரணத்தை அளிக்கும்.
5. எல்லாம் தற்காலிகமானது;
வாழ்வில் இன்பம், துன்பம், சவால்கள், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி போன்ற எல்லாமே நிலையற்றது. அதிகமாக சிந்திப்பது பிரச்னைகளை இன்னும் பெரிதாக்குகிறது இது ஒரு தற்காலிகமான ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ளும்போது அதிக சிந்தனையில் இருந்து மனம் விடுபடுகிறது. இதுவும் கடந்துபோகும் என்கிற கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஓவர் திங்கிங் எனப்படும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு இந்த ஐந்து பாடங்களும் மிகவும் உதவியாக இருக்கும்.