
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை அடைய மிகுந்த அர்ப்பணிப்புடன் கஷ்டப்பட்டு, கடின உழைப்பைத் தந்து கொண்டிருந்தால் நிச்சயம் அந்த இலக்கை அடைந்து, வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம். இதில் எதையுமே செய்யாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டு, "எனக்கு எதுவுமே சரியா நடக்கிறதில்ல" ன்னு புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 8 அறிகுறிகள் உங்களிடமிருந்தால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டு, பாதையை மாற்றுங்கள்... பயணம் வெற்றி தரும்.
1.பொறுப்புகளைப் புறந்தள்ளுதல்: உங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை மனமுவந்து ஏற்று செய்து முடிக்காமல், அவற்றை ஏற்க மறுப்பது, உங்கள் வளர்ச்சிக்கு தடை கல்லாக மாறி உங்களை நின்ற இடத்திலேயே நிற்கச் செய்யும்.
2.விமர்சனங்களைக் கண்டு அஞ்சுதல்: உங்களைப் பற்றி பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைக்கும்போது, அதைக்கேட்டு பயந்து, எந்த சவாலையும் ஏற்க மறுப்பது வளர்ச்சிக்கு உதவாது. தோல்வியையும் சவாலாக ஏற்பது வெற்றிக்கு முதல்படி.
3.தனிப்பட்ட வசதிகளுக்கு முன்னுரிமை அளித்தல்:
வெற்றிக்குத் தேவை கடின உழைப்பு. சிரமமான வேலையை ஏற்று செய்வது உங்கள் திறமைகளையும், தைரியத்தையும் வளர்க்க உதவும். அதை விடுத்து, உங்களின் தனிப்பட்ட வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சுலபமான வேலைகளை எடுத்து செய்வது, உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிட்டு, தோல்வியை நோக்கியே நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றே அர்த்தம் தரும்.
4.வேலைகளைத் தள்ளிப்போடுதல்: நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் இலக்கை அடைய உதவும் முக்கியமான வேலைகளை பிறகு செய்யலாம் என தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பது உங்களின் அழிவிற்கே வழி வகுக்கும்.
5.அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வது: ஒரு நோக்கமுமின்றி 'விட்டேத்தி' (purposeless life) யான வாழ்க்கை வாழ்வது இறுதியில் உங்களை ஊக்கமில்லாத, உணர்ச்சியற்ற, திருப்தியின்மை கொண்ட வாழ்க்கை வாழவே வழி வகுக்கும்.
6.அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்தல்: வாழ்க்கையில் வெற்றி பெறுவது, தோல்வியடைவது எல்லாம் விதிப்படி நடப்பவை என்று நீங்கள் நம்புபவராயிருந்தால், செயலாற்ற முன்வர மாட்டீர்கள். செயல் ஒன்றுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்குமென்று திடமாய் நம்பினால் மட்டுமே வெற்றி வசப்படும்.
7. கருத்துக்களை வரவேற்க மறுப்பது: உங்களைப் பற்றி பிறர் கூறும் கருத்துக்களை, தன் மீதுஏவப்படும் தாக்குதல் கணை என்றும் அதனால் தனக்கு எந்தவிதமான பிரயோஜனமும் கிடையாது என்றும் கூறி அதை ஏற்க மறுப்பது கண்மூடித்தனமாகும். உண்மையில் சரி செய்யப்பட வேண்டிய விஷயம் இது.
8.செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பவராகவே வாழ்வது: வாழ்வின் பெரும் பகுதியை உங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவிப்பவராகவே நீங்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அது வலியைத்தான் தரும். முன்னேற்றம் தராது.