
தைரியத்துடன் கூடிய விடாமுயற்சி என்பது தடைகள் மற்றும் தோல்விகள் இருந்த போதிலும் இலக்குகளை அடைய கடினமாக உழைத்து, தொடர்ந்து முயற்சி செய்வதாகும். தயங்குபவர்களுக்கும், எதைக் கண்டாலும் பயப்படுபவர்களுக்கும், தேவையில்லாமல் அதிகமாக யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில் எதுவுமே சாத்தியம் இல்லை. துணிவும் முயற்சியும்தான் வெற்றியின் முதல்படி. எதையும் துணிந்து இறங்கி செயல்படுவதுதான் சிறந்தது. வெறும் துணிவு மட்டும் பயனற்றது. துணிவுடன் எடுக்கும் முயற்சியும் சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும்.
தைரியம் என்பது பயம், ஆபத்து அல்லது சிரமத்தை எதிர்கொள்ளும் மனவலிமையாகும். விடாமுயற்சி என்பது எந்த விதமான கடினமான சூழ்நிலையிலும் நம் இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்வது. இந்த இரண்டுமே சேர்ந்து ஒரு இலக்கை அடைய தேவையான மன வலிமை மற்றும் தொடர் முயற்சியை வழங்கும். உதாரணத்திற்கு ஒரு விளையாட்டு வீரர் கலந்து கொண்ட போட்டியில் தோல்வியடைந்தால் மன வலிமையுடன் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள, மீண்டும் வெற்றி பெற முடியும். எந்த ஒரு செயலிலும் தோல்வி அடைந்தால் விடா முயற்சி மற்றும் மன வலிமைகொண்டு மீண்டும் ஒரு புதிய திட்டத்துடன் போராடி வெற்றிபெற முடியும்.
சவால்கள் மற்றும் பின்னடைவுகளை சமாளிக்கும் திறனை தைரியமும் விடாமுயற்சியும் வழங்குகிறது. மன தைரியம் அதிகரிக்க எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும். தவறுகள் தவிர்க்க முடியாதவை என்பதை புரிந்துகொண்டு அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள பழக வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் நம்மை ஊக்குவிக்கும் நேர்மறையான வாக்கியங்களை மனதிற்குள் சொல்லிக்கொள்ளலாம்.
சவால்களை எதிர்கொள்ளும் பொழுது இதை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் மனதிற்குள் சொல்லிக்கொண்டு தைரியமாக களத்தில் இறங்க வேண்டும். சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடப் பழக வேண்டும். இவையெல்லாம் நம்மை தைரியம் மிக்கவர்களாக ஆக்கும். மன தைரியம் என்பது ஒரு நாளில் வளர்ந்து விடக் கூடிய விஷயம் அல்ல. அதற்கு தொடர்ச்சியான முயற்சியும் தேவை.
தைரியத்துடன் கூடிய விடாமுயற்சி மிகவும் தீவிரமான உணர்வைத் தரும். சவால்களை எதிர்கொள்ளும்போது கைக்கொள்ள வேண்டிய உறுதியான மனநிலையை தரும். விடாமுயற்சி என்பது தொடர்ந்து முயற்சி செய்தல். ஒரு செயலை மீண்டும் மீண்டும் முன்னேற்றம் காண வேண்டி முயற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, கடினமான வாழ்க்கை சூழலில் வளர்ந்து, விடா முயற்சியால் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகள் புரிந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாம் அவர்கள் பலருக்கும் இன்றும் சிறந்த ரோல் மாடலாக இருக்கிறார். இவரை விட விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு யாரேனும் உண்டா?
வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் எந்த ஒரு மகத்தான விஷயத்திற்கும் விடாமுயற்சி மிகவும் அவசியம். படிப்பாக இருக்கட்டும், வேலையாக இருக்கட்டும், நல்ல நிலைக்கு உயர்வதாக இருக்கட்டும், எதற்கும் விடாம முயற்சி என்பது மிகவும் அவசியம். தைரியத்துடன் கூடிய விடாமுயற்சி வாழ்க்கையில் எந்தப் பகுதியிலும் வெற்றிக்கு தேவையான ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.
என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!