
ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுவது என்பது தற்போது இருக்கும் சமுதாயத்தில் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. மிக முக்கிய காரணம் வாழ்வியல் சூழ்நிலைகள் என்று கூட சொல்லலாம் பணி அழுத்தம் பொருளாதாரம் அழுத்தம் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அன்பு காட்டுவது மட்டுமே வாழ்க்கையில் நம்மை உயர செய்யும் பல வழிகளிலும் நமக்கு உதவியாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டாலே போதும். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட உச்சத்தையும் நாம் அடைந்துவிடலாம்.
மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவது குறைந்து, மனிதனை மனிதனே அழித்து வாழும் சமுதாயமாக நம் மனித இனம் மாறிக் கொண்டு இருக்கிறது. பணம், புகழ், போதை, மண் மீது மோகம் கொண்ட சமுதாயமாக மாறிக்கொண்டு போகிறது நம் சமுதாயம்.
நிலையில்லாதவற்றின் மீது கொண்ட மோகம் ஏன் நிலையான அன்பின் மீது வைக்க நம்மால் முடியவில்லை?
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாதிச்சண்டை மதச்சண்டை, அரசியல் சண்டை இவற்றை இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?
அண்ணல் காந்தி பிறந்த மண்ணில் அகிம்சை இன்று இல்லை. அன்னை தெரசா வாழ்ந்த இந்த மண்ணில் இன்று இரக்கம் அழிந்து வருகிறது. புத்தன் பிறந்த மண்ணில் இன்று அன்பு குறைந்து வருகிறது.
அடிபட்டு கிடக்கும் ஒருவனை வேடிக்கை பார்க்கிறோமே தவிர அவனைக் காப்பாற்ற யாரும் முயற்சி எடுப்பதில்லை.
நம்மிடம் தோன்றும் பாசமும், அன்பும், இரக்க குணமும் இன்று தேய்ந்து கரைந்துகொண்டு இருக்கிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதை விடுத்து மண்ணுக்காகவும், பொருளுக்காகவும், சண்டை இடுகிறோம். அரசியல் நடத்த மதத்தைக் காரணம் கூறியும், சாதியை காரணம் கூறியும் சண்டை இட்டுக் கொள்கிறோம். பணத்திற்காகவா? மதத்திற்காகவா சாதிக்காகவா? வாழ்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இதையெல்லாம் விட, அன்பிற்காக வாழ மறந்து விட்டோம். நம்மிடம் தோன்றும் பாசமும், அன்பும், இரக்க குணமும் இன்று தேய்ந்து கரைந்து கொண்டு இருக்கிறது. குழந்தைகளிடம் கூட அன்பிற்கான அர்த்தம் மறைந்துபோகும் நிலையை நாம் உருவாக்கி விட்டோம்.
அது நீடித்தால் அன்பு என்ற வார்த்தை மறந்து போய் எதிர்காலத்தில் அதனை ஏட்டில் படிக்கும் நிலைமை உருவாகக்கூடும் எனவே., மனிதநேயம் வளர, அன்பெனும் நீர் ஊற்ற நாம் முயலவேண்டும்.
அன்பு காட்டுங்கள். அடுத்தவரிடம் அன்பாயிருப்பது உண்மையில் உங்களுக்கே நன்மை பயக்கும். உங்களை உயர்நிலைக்கு எடுத்துக் கொண்டுபோய் சேர்க்கும்.