
ஆண்டவனின் படைப்பில்தான் மனித மனங்களில் பலவித எண்ண ஓட்டம். பிடித்தால் ஒரு பேச்சு, பிடிக்காவிட்டால் ஒரு பேச்சு, யாரையும் யாரும் அவ்வளவு எளிதில் நம்ப முடியாத நிலை.
அந்த காலத்தில் இவ்வளவு சூதுவாதுகள் இருந்ததாக தொியவில்லை. ஆனால் தற்சமயம் அப்படி இல்லை. பலரது மனங்களில் அழுக்குபடிந்துவிட்டது. அனைத்து விதமான அனுபவ பாடங்களையும் நாம் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப நெளிவு சுளிவோடுதான் வாழவேண்டியுள்ளது.
நம்மிடம் நம்மை அறியாமலேயே சிலவகையான நோ்மறை மற்றும் எதிா்மறை குணங்களும் உள்ளன. அவற்றை சீா்தூக்கிப் பாா்த்து நமது வாழ்க்கைப் பாதையை நாம்சரிவர அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் நம்மிடம் உள்ள சில குணங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.
கவிஞர் ஒரு பாடலில் ஆசை, கோபம் களவு, கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம், அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம், என தொிவித்திருப்பாா்.
அதன்படி நமக்கு அதிக ஆசை, அதிக கோபம், பழிவாங்கும் சுபாவம், அடுத்தவர் மனது புண்படாத சொல், அடுத்தவர் வலி, போன்றவைகளை உணர்ந்து செயல்படும் தன்மை வரவேண்டும்.
அதனூடே பக்குவமும், பண்பாடுகளும் நமக்கு வரவேண்டும்!
அதை கடைபிடிக்கத்தவறவே கூடாது. அதிக ஆசை பேராசையாக மாறி நமது வாழ்வின் சந்தோஷத்தையே கெடுத்துவிடுமே!
தொட்டதெல்லாம் பொன்னாக மாறவேண்டும் என்று பேராசைப்பட்ட மைதாஸ் கதைபோல ஆகிவிடக்கூடாது.
இதுபோலவே அதிக ஆசைகளுக்கு எதிா்காலம் தேவைப்படும், ஆனால் ஆனந்தமாக வாழ நிகழ்காலம் மட்டுமே போதுமானது.
அதேபோல ஆத்திரக்காரனுக்கு புத்தி குறைவு என்ற வரிகளுக்கேற்ப அதிகமான கோபம் நமது கண்ணை மறைத்து விடுவதோடு அழிவையும் இலவச இணைப்பாய் கொடுத்துவிடும்.
அதோடு அறிவும் மழுங்கிவிடும்.
மேலும், ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலைகொடு என்ற பாடல் வரிகளுக்கேற்ப ஆத்திரம், கோபம், வஞ்சக எண்ணம் வரும்போது புத்தியை அலைபாய விடாமல், அறிவுக்கு வேலை தந்து மனதை ஒரு நிலையில் வைத்திருக்கவேண்டும். அதுவே சாலச்சிறந்தது.
யாரையும் எதற்காகவும் பழிவாங்கும் நோக்கத்தை வளா்த்துக்கொள்வதை தவிா்ப்பதே நல்லது. ஒருவர் நமக்கு தீங்கு செய்துவிட்டாா் என்றால் அதனால் அவர் மீது வெறுப்பும் கோபமும் பழிவாங்கும் மனநிலையும் கூட்டணி போட்டு வரும். அந்த நேரம் நாம் மன அமைதியோடு இறைவனிடம் மானசீகமாக சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகுவதே நல்லதாகும். இதனிடையில் அடுத்தவருக்கு அவரது வாழ்வில் ஏற்பட்ட வலிக்கு நமக்கு நியாயமென தோன்றினால் அவரது துயரத்திற்கு ஆறுதல் எனும் மருந்தைத் தரலாம்.
அதைவிடுத்து நமக்கு ஒருவரின் வலியானது வேடிக்கையாக நமது மனதிற்கு தொிந்தால் அதுவே நமக்கான முதலீடு! அதாவது நாம் படப்போகும் துன்பத்திற்கானது என்ற தத்துவம்தனை உணர்ந்தாலே நமக்கு வரும் வலியானது குறைய வாய்ப்பு அதிகம்.
ஆக, அனைத்து நபர்களிடமும் அன்பாய் பழகுவதே நமக்கு நல்லதாகும்.
நம்மால் முடிந்தவரையில் நம் சக்திக்கு உட்பட்டு கொடுத்து வாழுங்கள். கொடுக்கும் பொருளைவிட கொடுக்கும் அன்பே பொிதானது, என்பதை புாிந்துகொள்வதோடு தீயஎண்ணங்களை விலக்கி நல் எண்ணங்களை வளா்த்துக்கொண்டு வாழ்வதே அறமான, அன்பான வாழ்க்கைஆகும்!