
நட்பு என்பது நல்ல உறவுதான், நட்புக்கு ஈடான உறவு வேறு எதுவுமில்லை என்று நண்பர்கள் வட்டத்தில் பேசிக்கொள்வது வழக்கம்தானே! நீங்கள் நிச்சயமாக சில நட்பிலிருந்து விலகத்தான் வேண்டும். (What is true friendship?) இப்படியாகப்பட்ட நட்புகள் என்ன என்று பார்க்கலாமே!
நமது சக்தியை இழக்கச் செய்பவர்கள்
சில நண்பர்களிடம் உரையாடும்பொழுது உற்சாகமாக இருக்கும். தன்னம்பிக்கை வளரும், மகிழ்ச்சி மனநிலை உருவாகும். ஆனால் சில நண்பர்களிடம் பேசும்பொழுது, நமது உரையாடல்களில் அவர்களது கவனம் இருக்காது. வேறு எங்கோ அவர்களின் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். நம்மை ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள். உங்களின் சிந்தனைகளுக்கு பேச்சுகளுக்கு எதிர் மறையாக இருப்பார்கள். உங்களிம் இனிமையாக பேசிவிட்டு உங்களுக்கு பின்னால் உங்களைப்பற்றி வதந்தி அல்லது புகார் வாசிப்பார்கள். ஆக, இந்த நட்பினை விலக்க வேண்டும்.
நட்பு என்னும் முகமூடி அணிபவர்கள்
இவர்கள் நட்பு என்னும் முகமூடியோடு திரிபவர்கள். உங்கள் முகத்தைப் பார்த்து புன்னகை செய்பவார்கள். ஆனால் உங்களுக்கு எதிராக வேலை புரிந்து உங்களை பள்ளத்தில் தள்ளுபவர்கள். உங்களின் இக்கட்டான சூழலைக்கூட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்பவர்கள். ஆகவே, இவர்களை விலக்கிவிடுவது வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மகத்தான செயலாகும்.
பொய்மை கொண்ட நட்பு
இவர்கள் சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் பொய் சொல்லி அதை நம்ப வைப்பவர்கள். இவர்களுடன் நட்பு பாராட்டுவது நம்மை பிறர் சந்தேக வலையில் சிக்கவைப்பவர்கள். ஒரு உண்மையை மறைப்பதற்கு நூறு பொய்களை சொல்லி சமாளிப்பவர்கள். என்று இருந்தாலும் இவர்களின் நட்பு போற்றத்தக்கதல்ல. ஆக, விலக்க வேண்டியதுதான.
சோகமே சொந்தமானது என வாழ்பவர்கள்
இவர்கள் உலகமே சோகமயம் காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என வேதாந்தம் பேசி வாழ்க்கையின் இன்றைய நாளை வெறுமை ஆக்குபவர்கள். ஒவ்வொரு தோல்வியும் தமக்கு மற்றவர்களால் உருவாக்கப்பட்டது என உளறுபவர்கள். ஏமாற்றங்கள் எதிராளியின் சதியென எதிர்கூச்சல் போடுபவர்கள். இவர்களின் இந்த வகையான எதிர்மறை எண்ணங்கள் உங்களின் மனதினை பாதிக்கவே செய்யும். இந்த நட்பு தேவையா என எண்ணிப் பாருங்கள்.
வேஷமிட்ட போட்டியாளர் நட்பு
இந்த வகை நட்பாளர்கள் உங்களின் ஆதரவாளர் போலவே நடிப்பார். உங்களின் தோல்விகளை உள்ளுக்குள் ரசிப்பார். ஆனால் உதட்டில் “அச்சச்சோ இப்படி ஆகிவிட்டதே” என கூறுவார். உங்களின் வெற்றியைக் கண்டு உள்ளுக்குள் குமைவார்.. இவ்வாறான போட்டியான நட்பு அலுவலகங்களில் நிறைய உண்டு.
நம்மிடம் அலுவலரைப் பற்றி ஏதாவது ஒரு குறை சொல்வது, அதற்கு நம்மிடையே ஏற்படும் முகபாவம் மற்றும் நாம் சொல்லும் சொற்களை அழகாக திரித்து உயர் அலுவலரிடம் அப்படியே போட்டு கொடுப்பது. பொதுவாக ஐந்தாம் படை வேலையை அழகாக பார்ப்பது இவர்களின் கை வந்த கலையாகும்.
உதட்டில் இனிப்பு உள்ளத்தில் கசப்பு நட்பு
இந்த வகை நட்பு நண்பர்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள். உள்ளத்தில் நம்மை பற்றி தாழ்வாகவும், மதிப்பு குறைவாகவும் எண்ணுவார்கள். நம்மிடம் “நீங்க எம்ஜியார் மாதிரியே அழகா இருக்கீங்க” என்பார்கள். பின்னால் சென்றவுடன் மற்றவர்களிடம் “அவனும் அவன் மூஞ்சியும்” சகிக்கல என்பார்கள். இந்த நட்பும் கத்தரிக்க வேண்டியதுதான்.
இந்த நட்புகளை விலக்கிவிட்டால் எந்த நட்புதான் ஏற்றுக் கொள்வது என்று நினைத்தால், இந்த மாதிரி நட்பின் இலக்கணங்களாக உள்ள நட்புகளை ஏற்றுக்கொள்ளலாம்.
துரியோதணன்… கர்ணன் இடையே உள்ள நட்பு செஞ்சோற்று கடனுக்கு காலமெல்லாம் நட்பாக வாழ்ந்தவர்கள்.
சோழ மன்னர் மற்றும் சங்க காலக் கவிஞரான பிசிராந்தையார் ஆழமான நட்பு.
அதியமானும் ஔவையாரும் கொண்டிருந்த நட்பு, நட்பிற்கு இலக்கணமாகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
இராமரின் மிகச்சிறந்த மற்றும் விசுவாசமான நண்பர், சீதையைத் தேடிச்சென்று, இராமருக்கு உதவியவர். சுக்ரீவன் இராமரும் சுக்ரீவனும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்; சுக்ரீவனின் நாட்டை மீட்க இராமன் உதவினார், அதற்குப் பதிலாக இராமனுக்கு சீதையை தேடி உதவினார்.
இந்த மாதிரி ஆழமான அன்பு நட்புகள்தான் நம்மை மகிழ்ச்சியாக வாழவைக்கும். நட்பு பாராட்டுகள் நல்லவர்களோடு!