
அறிவியல் அறிஞர்கள், சாதனையாளர்கள், புகழ்பெற்ற பெரியவர்கள் என பல்வேறு சிறப்புப்பெற்ற அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கிய புத்தகங்களை படிப்பதன் மூலம் அவர்கள் சந்தித்த சோதனைகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. வாசிப்பதை சுவாசிப்பதுபோல நேசித்தவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். அறிவின் வளர்ச்சிக்கும், எண்ணங்களின் நேர்மையான எழுச்சிக்கும் புத்தகத்தை வாசிப்பது அடிப்படையாக அமைகிறது.
தான் தேர்ந்தெடுத்தக் குறிக்கோள் அல்லது நோக்கத்தை அடைய விரும்புபவர்கள் அந்தத் தேர்ந்தெடுத்தத் துறையோடு இணைந்த குழுக்கள் (Groups), மன்றங்கள் (Associations) இயக்கங்கள் (Movements) ஆகியவற்றோடு இணைந்து செயல்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். சரியான நேரம் வரும்போது அந்த அமைப்புகளோடு உங்களை இணைத்துக் கொண்டால் உங்கள் வாழ்வில் குறிக்கோள் சம்பந்தப்பட்ட தகவல்களை அந்த அமைப்பில் உள்ள அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக அல்லது நோக்கத்திற்காக செயல்படுபவர்கள் ஒரு பொழுதுபோக்கு (Hobby) ஒன்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் அமைத்தல், விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், இசை கேட்டல், தையல்வேலை, புத்தகம் படித்தல் போன்ற ஓய்வுநேர செயல்கள் கூட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய செயலாக மாறும்போது, அது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மேலும், மனநிறைவையும் உருவாக்கும். எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு உதவும் வகையிலும், உங்கள் உள்ளத்திற்கு உற்சாகத்தைத்தரும் வகையிலும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கை அமைத்துக்கொள்வது நல்லது.
இவை தவிர, வெவ்வேறு சூழல்கள் அமைந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பயிலும்போது நாடகங்களில் பங்குபெறுதல், ஓவியப் போட்டியில் இடம்பெறுதல், விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுதல், நடனங்களில் ஈடுபடுதல் போன்றவைகளெல்லாம் வெவ்வேறு சூழல்களை ஏற்படுத்தித்தரும். இந்த சூழல்களில் பங்குபெறும்போது பல்வேறு அனுபவங்களை இளம் வயதிலேயே பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும். இதனால், வெவ்வேறு சூழல்களில் எவ்வாறு பங்குபெறுவது? என்கின்ற மன பக்குவம் அனுபவம் வாயிலாக வந்து அமையும்.
"நோக்கம்" எனப்படும் "குறிக்கோள்" தெளிவாக இருந்தால் மட்டுமே ஒருவரால் அந்த நோக்கத்தை அடைவதற்கான பாதையில் செல்ல இயலும். இதனை உணர்ந்து கொண்டவர்களால், வெற்றிப் படிகளில் ஏறி வேகமாக முன்னேறமுடியும்.
வாழ்க்கையில் வெற்றிக்கும், நமக்கும் வெகுதூரம்" என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், "அந்த வெற்றி என்பது தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது" என்பதை உணர்ந்துகொண்டவர்கள், வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் விரைந்து செயல்படுகிறார்கள்.
செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளியின் மகனாக பிறந்த ஒருவர்தான் ஹிட்லர். தந்தையோடு இணைந்து கட்டிட வேலைகளை செய்து கொண்டிருந்தார், தலையில் செங்கல்களை சுமந்தபடி பல மாடி படிக்கட்டுகளில் ஏறிச்சென்று வேலை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மாடிப்படிகளில் படியேறுகின்ற பொழுதெல்லாம் நான் ஒருநாள் மிகச்சிறந்த பிரபலமாக மாறுவேன்"- என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு நாளும் மாடிப்படிகளில் ஏறும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தார் ஹிட்லர்.
இந்த நம்பிக்கைதான் ஹிட்லரை உலகம் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு, மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக அமைந்தது.
வெற்றியை குவிக்க விரும்புபவர்கள் வெற்றிமீது தீவிர நம்பிக்கையைக்கொண்டு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.