
எந்த வகை செயலாக இருந்தாலும் சரிவர செயல் படுத்துவதற்கு கிட்டதட்ட அடித்தளமாக விளங்குவது கம்யூனிகேஷன் என்பது ஆகும்.
ஒரு செயலை திறம்பட செய்து முடிக்க பல உதவிகள் தேவை என்றாலும் சரிவர கூறாவிட்டால் அந்த செயல் பூரணமாக முடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.
சரிவர கூறப்பட்டாலும், செயலை செய்து முடிக்க வேண்டிய நபர் முழுமையாக புரிந்துக்கொள்ளாமல் செயலில் இறங்கினால் அந்த செயல் முடிவடையும் பொழுது சிக்கல்களையும், இன்னல்களையும் சந்திக்க நேரும்.
இவை முக்கியமாக தொடர்பு இடைவெளியின் காரணமாக இருக்கலாம். (communication gap)
உதாரணமாக ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட வேலையை இரண்டு நாட்களுக்குள் முடித்து, அந்த குறிப்பிட்ட பொருளை தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று எழுத்து மூலமும், உரையாடல் மூலமும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பொருள் ரெடி செய்தால்தான் அதை வாங்க விருப்பம் தெரிவித்தவரால் அவரது பொருளை, இந்த பொருள் உதவியுடன் மேற்கொண்டு தயார் செய்ய முடியும் என்பதையும் விவரமாக எழுத்துமற்றும் வாய்வழியாகவும் கூறப்பட்டு இருந்தது.
அவ்வாறு இருந்தும், குறிப்பிட்ட பொருளை தயார் செய்பவர் தனது கவனத்தை வேறு எங்கோ செலுத்திவிட்டும், அரை குறையாக புரிந்துக்கொண்டு அந்த பொருளை குறிப்பிட்ட நேரத்தில் சரிவர முடிக்காமல் நேரம் முடிந்து கொடுத்தார்.
அதனால் அதை வாங்க ஆர்வம், விருப்பம் காட்டியவர் வாங்க மறுத்து அந்த ஆர்டரை கேன்சல் செய்தது அல்லாமல் நஷ்டஈடு வேறு கோரினார்.
அது மட்டும் அல்லாமல் பொருள், பண, நேர நஷ்டம் இவற்றுடன் வாடிக்கையாளரையும் இழக்க வேண்டிய சூழ்நிலையையும் சந்திக்க வேண்டியிருந்தது.
இவற்றுக்கு எல்லாம் அடிப்படை காரணம் தொடர்பு இடைவெளி. (கம்யூனிகேஷன் கேப்). எல்லாம் தெரியும் என்ற மனோபாவம், அலட்சிய செயல்பாடு, பொறுமையாக கேட்டு, படித்து தேவையான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல், முழுமையாக குறிப்பிட்ட பணிக்கு தயார் செய்து கொள்ளாமல் அரக்க பறக்க செயலில் இறங்கி வேகமாக பணிபுரிவது, விவேகத்தை காற்றில் விட்டு விட்டு செயல்படுவது போன்றவை தொடர்பு இடை வெளியால் உருவாகும் இவை கட்டாயம் இன்னல்களை உருவாக்க காரணங்களாக அமையும்.
இவற்றுடன் செய்யும் பணி திட்டமிட்டப்படி நடை பெற்று சரிவர முன்னேறுகிறதா என்று அவ்வப்பொழுது சரி பார்ப்பது என்பது எல்லாம் இல்லாமல் ஏனோ தானோ என்று செயல்பட்டால் இலக்கை அடைவது கடினம்தான்.
கூறப்பட்டது என்ன, அதன் தேவைக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும் என்பதை புரிந்துக கொண்டு சிந்தித்து செயல்பட்டால் பணியில் ஈடுபாடும் ஏற்படும், உற்சாகம் பிறக்கும். அவை மன நிறைவோடு செயல்பட வழிவகுக்கும். இத்தகையவை சிறந்த தரம் மிக்க பொருட்கள் தயார் செய்ய உதவும்.
தொடர்பு இடைவெளி தவிர்க்க, கூறுபவர் மற்றும் கேட்பவர் இருவரும் முழ மனதோடும், ஈடுப்பாட்டுடனும், கவனம் சிதறாமலும் செயல்பட வேண்டியது மிக முக்கியம்.
கூறுபவர் (வாய்வழியாகவோ, எழுத்து மூலமோ) சுலபமாக புரிந்துக் கொள்ளும்படி கூறவேண்டும்.
அதை விட முக்கியமானது, அப்படி கூறப்பட்டவற்றை கேட்டுக் கொள்பவர் சரிவர புரிந்துக் கொண்டாரா என்று அவருடன் உரையாடி உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் பிறகு ஏற்படக்கூடிய தடங்கல்கள், தாமதங்கள், தவறுகள் போன்றவற்றை ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்கலாம்.
அதேபோல் கேட்டுக்கொள்பவர், அவர் சரிவர புரிந்துக் கொண்டாரா என்பதை கூறியவரிடம் ஒருமுறை விளக்கி கூறி சரி பார்த்துக்கொண்டால் பல இன்னல்களை தவிர்க்கலாம்.
கம்யூனிகேஷன் கேப் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இடைவெளியை தவிர்க்காமல் விட்டால், பிறகு அதுவே விஸ்வரூபம் எடுத்து குறிப்பிட்ட செயல் செயல்படாமல் போவதற்கும் காரணமாக அமையலாம்.
எனவே கவனம், புரிந்துக்கொள்ளும் திறன், ஒர முறைக்கு இருமுறை சரி பார்க்கும் திறமை ஆகியவை இருந்தால் தொடர்பு இடைவெளி இல்லாமல் முன்னேறி செல்லவும், செயல் படுத்துவும் பெரிதும் உதவும்.