குழந்தை வளர்ப்பு: களம் இறக்குங்கள் உங்கள் வாரிசை!
இன்றைய அவசரமான உலகில் பெரியவர்களுக்கு ஓய்வு என்பது அரிதாகிவிட்டது. அதனால் வளரும் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வாய்ப்பும், நேரமும் கம்மியாகிவிட்டது. தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என விரும்புகின்றனர். கல்வியைத்தாண்டி தனித்திறமைகளில் ஜொலிக்க வேண்டுமென மெனக்கிடுகின்றனர் சில பெற்றோர். மேலும் சில இல்லங்களில் சிறு குழந்தைகள் ஆர்வமின்றி நாட்களை கழிக்கின்றனர்.
நல்ல விஷயங்களை வளரும்போதே மனதில் பதியவைத்தால், எதிர்காலம் அவர்களுக்கு பிரகாசமாயிருக்கும். முயற்சி செய்வோமே.
நம் உறவிலோ, நட்பு வட்டத்திலோ ஒருவர் உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்தால் பார்க்க செல்வோம்தானே… நாங்க மட்டும் போனால் போதும் நீங்கள் சமர்த்தாக டி.வி பார்த்துக்கிட்டு இருங்கள் என்று சொல்லி, பிள்ளைகளை வீட்டில் விட்டு செல்லும் பெற்றோரா நீங்கள்.
பலமுறை செல்லும்போது, ஒரு சில முறையேனும் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களில் இதுவும் ஒன்று என புரிந்துகொள்வார்கள். உங்களுடைய, குடும்பத்தில் எவரேனும் நோய்வாய்ப்பட்டால், தயக்கமின்றி, மனதில் எழும் அருவருப்பை ஒதுக்கி, கவனித்துக்கொள்வார்கள். நோயாளிகளிடம் அனுசரனையாய் இருக்கவேண்டும். தேவையான மருத்துவசேவை செய்யணும் என்ற எண்ணமும் எழும். அக்கறையான கவனிப்பில் நோயுற்றவர்களும், வலி மறந்து, ஆசுவாசமாவார்கள்.
அடுத்ததாக இரக்க குணத்தை வரவழைக்க வேண்டும். வசதியற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, பிள்ளைகளையும் உடன் வைத்துக்கொள்ளுங்கள். என்ன காரணத்திற்காக அவர்களுக்கு உதவுகிறோம், எதனால் செய்கிறோம், எனப் புரியவைப்பது அவசியம். அவர்களையே, உதவும் பொருட்களை கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது எழும் மகிழ்ச்சியில், எதிர்காலத்தில் இதுபோல் தன்னுடைய சம்பாத்தியத்தில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும்.
அலைச்சலை தவிர்க்க, இன்று மின்கட்டணம், வீட்டுவரி கட்டுதல், வங்கி செயல்பாடுகள் முதலான பணபரிவர்த்தனைகள் ஆன்லைனில் என்றாகிவிட்டது. வசதியாக இருந்தாலும் வெளி உலக தொடர்பு குறுகிவிட்டதால், அனுபவங்களும் குறைந்துவிட்டது. சில முறை, உங்கள் பிள்ளைகளையும் அந்தந்த அலுவல்களுக்கு அழைத்துச்சென்று கற்றுக்கொடுங்கள். பிற மனிதர்களிடம் பேசி பழகுவது, வருங்காலத்தில் அலுவலக வேலையானாலும், சொந்தத் தொழிலானாலும் பிறரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவ்வப்போது அவர்களை மட்டும் அனுப்புங்கள். அவர்களாகவே முன் வந்தால் நீ எதுக்கு செய்யணும்னு கேட்டு, தடை போடாதீர்கள். தட்டிக் கொடுத்து அனுப்புங்கள். காத்திருக்கும்போது பொறுமை வளர்கிறது.
முக்கியமான விஷயம் பாராட்டக் கற்றுக்கொடுங்கள். பணிப்பெண் நன்றாக பாத்திரம் துலக்கியிருந்தால், அவர்கள் முன்னாடியே பாராட்டுங்கள். ஒவ்வொரு கச்சிதமான செயல்களையும் பாராட்டும்போது, உங்கள் குழந்தையும் அருகில் இருந்தால், மனதில் பதிந்துவிடும்.
அதுபோல் நன்றி சொல்லவும் பழக்கணும். தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ உதவி செய்தால் நன்றி சொல்ல பழக்க வேண்டும். சில பிள்ளைகள் கேட்கலாம், "அது அவங்க கடமைதானே..எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.?" அவர்களிடம், " கடமைதான். அதையும்தாண்டி உன் மேல் உள்ள அக்கறையில் நீ கஷ்டப்படக் கூடாதென்ற நல்லெண்ணத்தில்தானே செய்கிறார்கள். அவசியம் மறக்காமல் நன்றி சொல்லணும்ன்னு" புரியவைக்கணும்.
முக்கியமான விஷயம் ஆரோக்கியத்தை கற்றுக் கொடுக்கணும். மனசு மட்டுமல்ல உடம்பும் ஆரோக்கியமாக இருந்தால்தான் மகிழ்ச்சி நிலைக்கும். உடம்பின் வெளிப்புறத் தூய்மையை போதிக்க வேண்டும். உள் உறுப்புகள் சிரமமின்றி இயங்க, தேவையான சமயங்களில் வேண்டிய உணவுகளை, எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிடித்தமானது என்பதற்காக அளவிற்கதிகமாக ருசித்து அவதிப்படக்கூடாது என்பதையும் அடிக்கடி போதித்து, கவனிப்பது அவசியம். மூன்று வேளையும் குறிப்பிட்ட வேளையில் சாப்பிட்டு, நிறைய தண்ணீர் குடிக்க வலியுறுத்த வேண்டும்.
சின்ன வயசில், மாரல் டீச்சர் சொல்வாங்க "Early to bed. Early from bed." இரவு சீக்கிரம் தூங்கி, காலை சூரியன் உதிக்குமுன் எழுந்திருக்க வேண்டும். இதை அவசியம் கடைபிடிக்கணும்.
கடைசியாக, ஒழுக்கம். அந்த ஒழுக்கத்திலேயே சுத்தமும் இணைந்துவிடுகிறது. வீட்டில், பொருட்கள் அங்கங்கே இறைந்து கிடக்காமல் அதற்குரிய இடங்களில் வைக்கச் சொல்லிக்கொடுங்கள். மாதம் ஒருமுறை பீரோவில் உள்ள உடைகளை அடுக்கி வைக்கச்செய்யுங்கள். வெளி உலகிலும் பெரியவர்களை மதித்து மரியாதையுடன் நடக்க வலியுறுத்துங்கள். இறுதியாக, அப்பப்போ தோல்விகளை சந்திக்கப் பழக்குங்கள். வருங்காலத்தில் எதையும் தாங்கும் மனப்பக்குவம் கிடைத்துவிடும். கற்றுக்கொடுத்து களம் இறக்குங்கள் உங்கள் வாரிசை..!