
நாம் பார்க்கின்ற பார்வைதான் நமது வெற்றிக்கும், தோல்விக்கும் அடிப்படையாக அமைகிறது. எந்தக் கண்ணோட்டத்தோடு ஒரு பொருளைப் பார்க்கிறோமோ, அந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்ற பொருள் நமக்குத் தெரிகிறது.
சிவப்பு கண்ணாடி அணிந்து நாம் ஒரு பொருளைப் பார்த்தால் அது சிவப்பாகத் தெரிகிறது. மஞ்சள் நிறக் கண்ணாடியை அணிந்து பார்த்தால் அந்தப்பொருள் மஞ்சளாகவே தோன்றுகிறது. பச்சை நிற கண்ணாடிமூலம் பார்க்கும்போது அந்தப்பொருள் பச்சையாக காட்சியளிக்கிறது. பார்க்கின்ற கண்ணாடியின் தன்மைக்குஏற்ப பொருளின் நிறம் மாறுவதைப்போல, நாம் பார்க்கின்ற கண்ணோட்டத்திற்கு ஏற்ப ஒரு பொருள் அல்லது மனிதரைப் பற்றிய எண்ணம் மாறுபடுகிறது.
ஒரு ரயிலில் தனது மகனோடு பயணம் செய்து கொண்டிருந்தார் அப்பா. ஜன்னல் ஓர இருக்கையில் இருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்த அவரின் மகனுக்கு சுமார் 27 வயது இருக்கும். திடீரென அவரின் மகன் கூச்சல்போட்டான்.
"அப்பா இங்கே பாருங்கள். பச்சைப் பசேலென்ற மரங்களெல்லாம் மிகவும் வேகமாக ரயிலுக்குப்பின்னே ஓடுகின்றன”- என்று கூறிவிட்டு மகிழ்ச்சியோடு மீண்டும் அந்த மரங்களைப்பார்த்து மகிழ்ந்தான்.
எதிரே இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெரியவர் ஒருவர் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அதைப் புரிந்துகொண்டு 'அசட்டு' சிரிப்பை உதிர்த்தார் அப்பா, வேகமாக ரயில் சென்று கொண்டிருந்தது, திடீரென அந்த 27 வயது இளைஞரும் மீண்டும் மகிழ்ச்சியில் துள்ளினான்.
அப்பா இங்கே பாருங்கள். மேகக்கூட்டம் எல்லாம் நாம் செல்லும் இடத்தை நோக்கியே ஓடிவருகின்றன என்றான். அப்பாவுக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை.
எதிரே இருந்த வயதான பெரியவர் மீண்டும் ஒருமாதிரியாகப் பார்த்தார். என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.
உங்கள் யையனை ஒரு நல்ல டாக்டரிடம் கூட்டிக் கொண்டுபோனால் என்ன? என்று நேரடியாகயே கேள்வி கேட்டார்.
அவரது கேள்வி அதிர்ச்சியை உருவாக்கியது. வயதான பெரியவர் கேட்ட கேள்வியிலும் அர்த்தம் இருந்தது. "27 வயது இளைஞன் சாதாரண விஷயங்களைப் பார்த்து இப்படி ஆச்சரியப்படுகிறானே? இவன் மனநிலை பாதிக்கப்பட்டவனா?"-என்று அந்தப் பெரியவர் எண்ணி இருக்கலாம். ஆனால், அந்தப் பெரியவர் அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் நாசூக்காக வெளிப்படுத்தினார்.
"ஐயா, நீங்கள் சொல்வதைப்போல நானும் செய்து விட்டுத்தான் வருகிறேன். நாங்கள் டாக்டரைப் பார்த்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து இப்போதுதான் வருகிறோம் என்று பதில் சொன்னார். இளைஞனின் அப்பா, பதிலைக் கேட்டதும் வயதான பெரியவர் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்.
டாக்டரை பார்த்துவிட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னும் உங்கள் மகன் இப்படி நடந்துகொண்டால் எப்படி?" என்றார் பெரியவர்.
"ஐயா... என் மகன் பிறக்கும்போதே பார்வை இல்லாமல் குருடனாகப் பிறந்துவிட்டான், இப்போதுதான் அவனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை தெரிந்தது. ஆபரேஷன் முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து நேராக திருநெல்வேலியில் இருக்கும் எங்கள் வீட்டிற்குப் போகிறோம். முதன்முதலாக தனது கண்களால் இந்த உலகத்தைப் பார்க்கும் என் மகனுக்கு அவன் பார்க்கின்ற எல்லாமே ஆச்சரியமாகத் தெரிகிறது. இதனால்தான் இவன் இப்படி பேசுகிறான்" என்றார். வயதான பெரியவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இப்படித்தான் சில வேளைகளில் நாம் ஒன்றைப் பற்றி நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், உண்மை வேறுவிதமாக அமைந்துவிடுகிறது. நாம் பார்க்கும் பார்வை மற்றும் அதன் அடிப்படையின் ஏற்படுத்திக் கொள்ளும் அர்த்தம் ஆகியவை சிலநேரங்களில் தவறான தகவல்களை நமக்குத் தந்துவிடும். இந்த தவறை திருத்திக்கொள்ள விரும்பினால் நாம் பார்க்கும் பார்வையில் தெளிவான அறிவும், பகுத்தறிவும் இணைந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.