Motivational articles
Do you believe it's free?

இலவசம்னு நம்புறீங்களா? இந்த உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Published on

லவசம் என்பது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா நண்பர்களே! தற்காலத்தில் பல வணிக நிறுவனங்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் அதற்கு மற்றொரு பொருள் இலவசம் என்று விளம்பரம் மூலம் அறிவிப்பதை நாம் காண்கிறோம். இந்த உலகில் இலவசம் என்று எதுவுமே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

“ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற வணிக நிறுவனங்கள் தரும் விளம்பரங்களையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். ஒன்றை வாங்கினால் அதே மதிப்புள்ள மற்றொரு பொருளை நாங்கள் சற்று விலை குறைத்துத் தருகிறோம் என்று விளம்பரம் செய்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒன்று வாங்கினால் அதே மதிப்புள்ள மற்றொன்றை எப்படி இலவசமாகத் தரமுடியும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது ஒரு வியாபார யுக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில பெரிய நிறுவனங்கள் ஒரு புதிய பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தும் போது விளம்பரத்திற் காகவும் நுகர்வோரை உற்சாகப்படுத்தவும் அதனுடன் கவர்ச்சிகரமான சில பரிசுப் பொருளைத் தருவார்கள். இதுவும் ஒரு வியாபார யுக்தியே.

இலவசமாகத் தரும் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பிருப்பதில்லை. உதாரணமாக ஒரு புத்தகத்தை மற்றொருவருக்கு நாம் இலவசமாகத் தந்தால் அதை அவர் திருப்பிக்கூட பார்க்க மாட்டார். ஏனென்றால் அதை அவர் விலை கொடுத்து வாங்கவில்லை. அதே புத்தகத்தை அவர் விலை கொடுத்து வாங்கினால் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோமே என்பதற்காகவாவது சில பக்கங்களைப் புரட்டுவார். படிப்பார். அல்லது முழு புத்தகத்தையுமே படிக்கக்கூடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி பெறவேண்டுமா? இந்த விஷயங்களை இப்போதே செய்யத் தொடங்குங்கள்!
Motivational articles

யோகா, மூச்சுப்பயிற்சி, மோட்டிவேஷன் முதலான வகுப்புகளை சில நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மக்கள் பயன் பெறுவதற்காக இலவசமாக நடத்துகின்றன. இத்தகைய இலவச வகுப்புகளில் ஆர்வமாகக் கலந்து கொள்ளும மக்கள் இரண்டொரு நாள் வருவார்கள். பின்னர் ஆர்வம் குறைந்து நின்று விடுவார்கள். இதே வகுப்புகளை அவர்கள் பணம் கொடுத்து கலந்து கொண்டால் ஒருநாள் கூடத் தவறாமல் வருவார்கள். ஏனென்றால் அவர்கள் பணத்தைச் செலுத்திவிட்டோமே என்பதற்காகவாவது வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்வார்கள்.

ஆழ்ந்து யோசித்தால் இந்த உலகில் இலவசம் என்று எதுவுமே இல்லை என்பது புரியும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. விலையும் இருக்கிறது. நமக்கு ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கிறது என்றால் அதற்கான தொகையை வேறு யாராவது ஒருவர் செலுத்தியிருப்பார் என்பதே நிதர்சனம். உதாரணமாக திருமணம் முதலான விழாக்களில் நாம் கலந்து கொண்டு வாழ்த்தி விடைபெறும்போது புத்தகம், சிறுசிறு பரிசுப் பொருட்களை பையில் போட்டுக் கொடுத்து மகிழ்வார்கள். அவை நமக்கு இலவசமாக்க் கிடைக்கிறது என்றாலும் அந்த விழாவை நடத்தியவர் அந்த பரிசுப் பொருளுக்கான நமக்காக பணம் செலுத்தி வாங்கியிருப்பார்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது! இதைப் படித்தால் போதும்!
Motivational articles

முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் நமக்கு ஒரு பொருளை இலவசமாகத் தருகிறார் என்றால் நம்மால் அவருக்கு ஏதாவது பலன் நிச்சயம் இருக்கக்கூடும். தற்காலத்தில் பிரதிபலன் இல்லாமல் யாரும் எதையும் செய்வதில்லை. ஆகவே நண்பர்களே! இந்த உலகில் எந்த ஒரு பொருளுக்கும் விலை இருக்கிறது என்பதையும் எதுவும் இலவசம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com