
எனது உறவினப் பெண் மிகவும் அழகாக வரைவாள். அவள் வரைய அமரும் நேரத்தை பார்த்தால் நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். காரணம் வீட்டில் நிறைய வேலைகள் காத்துக்கொண்டிருக்கும். ஆபீசிலிருந்து சோர்ந்து வந்த அந்த நேரத்தில் வரைகிறாயே ஏன்? இப்படி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு இந்த வேலையை செய்தால் என்ன? என்று கேட்டால், எனக்கு ஆசுவாசம் என்பது இப்பொழுது நான் செய்யும் பிடித்தமான இந்த வேலை நேரம்தான். இதை வரைவதினால் எனக்கு ஒரு சுறுசுறுப்பு வந்துவிடும்.
பிறகு வேலையை ஆரம்பித்தால் மிகவும் எளிதாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட முடியும். ஆசுவாசமாக செய்வதை விட நெருக்கடியான நேரத்தில் சில வேலைகளை செய்வதுதான் சிறப்பாக கூட அமைந்துவிடும். அதற்காகத்தான் இந்த பயிற்சி என்று கூறினார்.
ஆமாம் நாமும் ஆசுவாசமாக மிகவும் நன்றாக சமைக்க வேண்டும். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு ஆஹா… ஓஹோ என்று பாராட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்று சமைப்போம். அன்று சாப்பாடே சரியில்லை என்பதுபோல் கூறுவார்கள். நமக்கு சப்பென்று ஆகிவிடும்.
எங்கேயாவது வெளியில் சென்றுவிட்டு வந்து அவசர அவசரமாக சமைப்போம். அன்று சமையலும் சூப்பராக இருக்கும். வேலையும் சீக்கிரமாக முடிந்துவிடும். எப்படி இவ்வளவு குறைந்த நேரத்தில் அருமையாக சமைத்துவிட்டாய்! சமையல்ல கில்லாடி நீ! என்று பாராட்டுவதை பார்க்க வேண்டுமே! இது எல்லோர் வாழ்விலும் கட்டாயம் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது நடந்திருக்கும்.
காரணம் அந்த நெருக்கடி நேரத்தில் நம்மை நாமே கவனம் சிதறாமல் மனதை ஒருமுகப்படுத்தி அதற்குள் மாத்திரமே விழித்திருக்க வைக்கும் செயல்தான் அது. மேலும் அந்த நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் பசியுடன் நாம் செய்யும் வேலையை கவனித்துக்கொண்டிருப்பார்கள். அந்த உணர்வுடனே செய்வோம். அதனால் அது எச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் செய்ய வைத்து விடும்.
ஒரு நெருக்கடியான நேரத்தில் குழந்தையின் அருகில் ஏதோ ஒரு பறவையோ விளங்கினமோ வருகிறது என்றால் அந்தத் தாய் காம்பவுண்ட் சுவரின் மீது குதித்தாவது அந்தக் குழந்தையை காப்பாற்றிவிடுவாள். அப்படியொரு துணிச்சலும் தைரியமும் அந்த நேரத்தில் வந்துவிடும். இதையே சாதாரணமாக செய்யச் சொன்னால் கட்டாயமாக எந்த தாயும் செய்யமாட்டார்கள். தேவையும் இருக்காது.
எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைவிட எப்பொழுதும் ஏதாவது ஒரு கைத்தொழிலை அல்லது பிடித்தமான ஏதோ ஒரு வேலையை சுமாராக வேணும் செய்துகொண்டே இருந்தால் அது நாளடைவில் நன்கு பழகிவிடும். அப்பொழுது நாம் முன்பு இருந்ததை விட சிறப்பான நிலையில் இன்று இருக்கிறோம் என்று நினைக்க வைப்பதும் நல்ல வளர்ச்சிதானே. பிறகு இக்கட்டான நேரத்தில் அதை செய்து தரும்படி யாராவது கூறினால் நமக்கு செய்வது சுமையாகத் தெரியாது. சுலபமாக இருக்கும். ஏனென்றால் தினமும் பழகி வந்திருக்கிறோமே.
ஆதலால் நெருக்கடியில் எதையும் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த நெருக்கடியான நேரங்கள்தான் நமக்கான கற்றல் பண்பை அதிகமாக வளர்க்கிறது. தெரியாத விஷயங்களையும் தெரிந்து கொள்ள வைப்பது நெருக்கடி நேரங்கள்தான். நீ இதை கற்றுக்கொண்டால்தான் மேலும் வளரமுடியும் என்ற சூழ்நிலையை உண்டாக்குவது நெருக்கடிதான். ஆதலால் நெருக்கடியையும் நேசிப்போம். அதையும் தாண்டி வெற்றிபெற முயற்சிப்போம்!
நாம் எதிர்நோக்கும்
பிரச்னைகள்
எல்லாவற்றையும் மாற்ற முடியாது.
எதையும்
எதிர் நோக்காவிடில்
மாற்றங்களே இருக்காது!