
ஜுலியஸ் சீஸர் தம் சேனையிலுள்ள ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் பெயர்களை நினைவில் வைத்திருந்தார்.
ஆஷாகிரே என்னும் பிரபல அமெரிக்கத் தாவர நிபுணர் 25 ஆயிரம் தாவரங்களின் பெயர்களை மனப்பாடமாகச் சொல்வார்.
லார்டு பைரனுக்குத் தம் கவிதைகள் எல்லாம் தலைகீழ்ப் பாடம். பிரபல சரித்திர ஆசிரியர் மெக்காலே தான் ஒரு புத்தகத்தைப் படித்தால். ஒவ்வொரு பக்கமும் அவரது மனதில் புகைப்படம் போல் பதிந்துவிடும்.
எப்படி இவர்கள் எல்லாம் இப்படி மிகையாக இருக்க முடிந்தது?
அவர்கள் அதில் கொண்ட தீவிர ஆசைதான். எப்படியும் இதை நம் மனதில் கொள்ளவேண்டும் என்று உறுதி கொண்டார்கள். அவ்வுறுதியோடு உழைத்தார்கள்; வெற்றி பெற்றார்கள். அவர்களது ஒவ்வொரு செயலிலும் திறன் பளிச்சிட்டு காட்டியது
அந்த நிலை நமக்கும் வேண்டும். எடுத்த காரியத்தில் தீவிர நோக்கு கொண்டு உழைத்தால், அதாவது செயல் புரிந்தால், நாமும் அந்தப்பேற்றை அடையலாம்.
ஹடயோகி ஒருவன், ஒரு மகானிடம் சென்று தனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறதென்றும், பூமியின் கீழ் அநேக காலம் கிடக்கும் திறன் உண்டென்றும், இதுபோன்ற சித்து வித்தைகள் பல தெரியுமென்றும், பெருமை பாராட்டினான்.
அப்போது அந்த மகான், 'அப்பா! பட்சிகள் ஆகாயத்தில் பறக்கின்றன; புழுக்கள் பூமியின்கீழ் அதிக காலம் மறைந்து கிடக்கின்றன. மீன்கள் தண்ணீரில் வசிக்கின்றன. இம்மாதிரி தாழ்ந்த ஐந்துக்களைப்போல் நடப்பதனால் என்ன பயன்? மனிதனைப்போல் நடக்க, கருணை முதலிய நற்குணங்களை விருத்தி செய்; கர்வத்தையும் கோபத்தையும் அடக்கிவிடு' என்று மறுமொழி கூறினார்.
அதனால் உங்களால் முடிந்த உங்கள் சக்திக்கேற்ற வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக்கூடிய லட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள். அப்பொழுதுதான் அதில் நீங்கள் மிகுந்த சுறுசுறுப்புக் கொள்ள முடியும். செயல்திறன் என்பது கடையில் வாங்கும் சரக்கு அல்லவே, அதை நாம்தானே பயிர் செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன் ஏற்பட்ட தோல்விகளையும் வெறுக்க முடியாது; வெறுக்கவும் கூடாது. அந்தத் தோல்விகளிலிருந்து நமக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா என்றே நாம் பார்க்க வேண்டும். எத்தனையோ வரலாற்றுப் புருஷர்கள் தாங்கள் அடுத்து அடுத்து அடைந்த தோல்விகளைக் கண்டு வீறுகொண்டு எழுந்துள்ளார்கள்.
நண்பரிடம் மட்டுமின்றிப் பகைவனிடமும் நேசங்கொள்ள வேண்டும். நீ நடக்கும் வழியில் முள்ளைப் போடுபவன் முன்பு நீ பூவைப் பரப்பு' என்கிறார், இயேசுகிறிஸ்து.
"தாழ்ந்த லட்சியத்தில் வெற்றி பெறுவதைவிட உயர்ந்த லட்சியத்தில் தோல்வியுறுவதே சிறந்தது' என்கிறார் ராபர்ட்பிரௌனிஸ், அதனால் தோல்வியைத் தோல்வியடையச் செய்வது உங்கள் வெற்றியாக இருக்கட்டும்.
விழுவதே மீண்டும் எழுவதற்குத்தானே' என்கிறார் சுவாமி விவேகானந்தர் 'ஐயோ இப்படி விழுந்து விட்டோமே' என்று எண்ணி மனம் சோர்ந்து போதல் கூடாது. இனிமேல் விழவேமாட்டேன்' என்று வீறு கொண்டு எழுந்து செயல்புரிய வேண்டும். அந்தச் செயலில் அவசியம் திறன் அதிகமாகவே இருக்கும்.