
சிலருக்கு நிறைய திறமைகள் இருக்கும் அவை எல்லாம் மண்ணுக்குள் வைரம்போல் மறைந்து கிடக்குமே தவிர பட்டை தீட்டிய வைரமாய் மிளிராது. அதற்கு காரணம் ஆர்வம் இல்லாததால்தான்.
இன்னும் பலரிடம் திறமைகள் வெளிப்படாததற்கு காரணம் உற்சாகமின்றி இருப்பதுதான். யாரிடமும் உற்சாகம் வரும் போது அவர்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் தங்களிடம் ஒளிந்து இருப்பதை கண்டுகொள்ள முடியும். அவற்றைக் கண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ள இயலும்.
சோம்பல் யாரிடம் குடிகொண்டிருந்தாலும் ஒரு செயலை செய்ய அவர்கள் துணியும்போது அனைத்து செயல்களும் அவர்களுக்கு கடினமானதாகவே அமையும். காரணம் இதை நாம் எப்படி செய்யப் போகிறோம்? செய்துதான் ஆகவேண்டுமா? அப்புறம் செய்தால் என்ன? என்ற அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு அதை ஒத்தி போடுவதற்கான காரணத்தை தேடுவதால்தான்.
ஆனால் சுறுசுறுப்புடன் எந்த ஒரு செயலையும் செய்ய இறங்கினால் அனைத்து செயல்களும் செய்வதற்கு எளிமையாக அமைந்துவிடும். இது நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். அந்த தன்னம்பிக்கையே ஆற்றலை தேடித்தரும். இந்த ஆற்றலானது சுறுசுறுப்புடன் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அழைத்து வந்துவிடும். ஆற்றலுடன் கூடிய ஆர்வமும், உற்சாகமுமே எந்த ஒரு வெற்றிக்கும் அடிப்படை காரணமாகும்.
படம் வரைவதில், பயணம் செய்வதில், பாடம் படிப்பதில் என்று எந்த ஒரு செயலிலும் உற்சாகம் ஏற்படும் பொழுது தேங்கி கிடந்த திறமைகள் அனைத்தும் நாம் நினைத்தே பார்த்திடாத அளவுக்கு வெளிப்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வழிவகுக்க முடியும். அதனால்தான் உற்சாகத்தை ஒரு ஊற்று என்று கூறுகிறார்கள்.
கண் ஆபரேஷன் செய்து மூன்று மாதமான ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் படியேறி வீட்டுக்குள் வர பயந்தார். காரணம் எனக்கு கண் ஆபரேஷன் நடந்திருக்கிறது. ஆதலால் நான் இதுவரை எந்த மாடிப்படியும் ஏறியது இல்லை. என்னால் வர இயலாது என்று காரணம் கூறினார். இப்படி மாடிப்படி ஏறுவதற்கு பலரும் பல காரணங்களை கூறுவதால், "எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லா படிகளும் கடக்க கூடியவையே" என்று ஒரு சிறிய போர்டில் எழுதி அங்கே மாட்டப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவுடன் அவர் எந்த காரணத்தையும் சொல்லாமல் கட கடவென்று மேலே ஏறி வந்தார். மற்றும் ஒரு பெண்மணிக்கு ஸ்கேன் செய்து கொள்வதற்கு பயம். அந்த மெஷினை இரண்டு முறை பார்த்துவிட்டு ஸ்கேன் செய்யாமல் திரும்பிவிட்டார். பின் அங்கு வந்த ஒரு முதியவர் உற்சாகமுடன் ஸ்கேன் செய்து கொள்ள வந்ததைப் பார்த்ததும் இவரும் அவரைப்போல் உற்சாகமுடன் ஸ்கேன் செய்து கொண்டார். உற்சாகம் சில நேரம் தொற்றாக பரவுவதும் உண்டு. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு ஒரு துணிவை ஏற்படுத்துவதும் உற்சாகம்தான்.
இப்படி சோம்பி கிடந்தவர்கள் உற்சாகத்துள்ளலுடன் வெற்றி அடைந்ததை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அவரவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மூலம் திரும்பி பார்க்க முடியும். அதனால் நாமும் வெற்றி அடைந்ததாக மகிழ்ச்சி கொள்ளலாம். ஏனெனில் நாமும் உற்சாகமாகத்தானே இது போன்ற அட்வைஸ்களையும் செய்கிறோம். ஆதலால் உற்சாகத்தை விதைப்போம். அதையே அறுவடை செய்வோம்.
மனிதனின் மனதில் உற்சாகம் மிகவும் வலிமையானது. அதைப் பூக்களைப்போல தூவினால் நமக்கு மாலையாகக் கிடைக்கும்.
கற்களைப்போல எரிந்தால் அது நமக்கு காயங்களாகக் கிடைக்கும்.