
வாழ்க்கையின் ரகசியம் என்பது பலருக்கு பல்வேறு வகையான அர்த்தங்களைக் கொண்ட ஒரு பொதுவான சொல்லாடலாகும். சிலருக்கு அது வாழ்க்கையின் நோக்கத்தை கண்டறிவதாகவும், சிலருக்கு மகிழ்ச்சி மற்றும் திருப்தியை தருவதாகவும், வேறு சிலருக்கோ அது தத்துவார்த்தமான புரிதலை அடைவதாகவும் இருக்கலாம். வாழ்க்கை என்பது தன்னைப் பற்றிய புரிதலை பெற்றிருப்பது. அதாவது தன்னுடைய பலம், பலவீனங்கள், தேவைகள், ஆசைகள், குறைகளை அறிந்து வைத்திருப்பது.
வாழ்க்கையின் ரகசியம் என்பது ஒரு குறிக்கோளை கொண்டிருப்பதுடன் அந்த குறிக்கோளை அடைவதற்காக கடினமாக உழைப்பதும்தான். வாழ்வில் தன்னைச் சுற்றி உள்ள சூழல்களுடன் நல்லுறவை பேணுவதும், வளர்ப்பதும், நேர்மறையான சிந்தனைகளை பெருக்குவதுமாகும்.
வாழ்க்கை என்றால் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். குடும்பத்திற்குள் விட்டுக் கொடுத்தலும், வெளியே பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும்தான் வாழ்வின் ரகசியம். குடும்பத்தில் அன்பு என்பது கோபம் கொள்ளாது. அமைதியும் தயவும் கொண்டதாக இருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை திட்டமிடுதலும் ஆரோக்கியமான வழக்கங்களும்தான்.
வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் நோக்கத்தை பற்றிய புரிதலைப் பெற ஆன்மீகப் புத்தகங்களையும், தத்துவ நூல்களையும் படிப்பதும், பிறருடன் பழகி அவர்களது அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்வதும் புதிய பார்வைகளைப்பெற உதவும்.
வாழ்க்கையின் ரகசியம் என்பது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் மாறுபடும். அதைப் பற்றி அறிய தொடர்ந்து வாழ்க்கை முறையை கற்றுக் கொள்வதும், தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை உற்று நோக்கவும், சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பதிலும்தான் உள்ளது.
வாழ்க்கையே ஒரு ஆழமான ரகசியம்தான். நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்பது கூட தெரியாமல் ரகசியமாக இருப்பதால் தான் நம்மால் நிம்மதியாக ஓடிக்கொண்டே இருக்க முடிகிறது. இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ்வதும், பிறரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும், மனிதத்துடன் வாழ்வதும் சிறப்பு. கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களையோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளை விட நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
வாழ்க்கையில் சிறிய விஷயங்களுக்கும் நன்றி செலுத்துவதும், மகிழ்ச்சியை கண்டறிவதும், நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதும் வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிப்பதற்கு உதவும். நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த சக்தியே உள்ளுணர்வு.
அது எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கு சரியான வழிகாட்டுதலைத்தான் தரும். வாழ்க்கையின் ரகசியம் என்பது ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வதற்கும், வளர்வதற்கும், அன்பை பரப்புவதற்கும் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சியே ஆகும்.