
பயிற்சி மனிதனை பரிபூரணமாக்குகிறது என்பது பழமொழி, அன்றாட வாழ்க்கையை அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் நிலைநிறுத்துவது நல்ல பயிற்சிகள்தான். நம் வாழ்க்கையின் முற்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட நல்ல நடைமுறைகள், இன்றைய முதுமையின் அன்றாடப் பிரச்னைகளை எதிர்த்துப் போராட நிச்சயமாக உதவுகின்றன. வசதிகளுக்காகவும் அன்றாட வேலைகளுக்காகவும் நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கத் தொடங்கினால் முதுமைக் காலத்தை நிர்வகிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். முதுமையை அஞ்சாமல் எதிர்கொண்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை இப்பதிவில் பார்ப்போம்.
நேரத்தை சரியானபடி திட்டமிட்டு நிர்வகிப்பது
நேர மேலாண்மையை பயிற்சி செய்யத் தொடங்கும்போது நமக்கு எளிதாகவும், அர்த்தமுள்ளதாகவும், சரியான மனநிலையுடனும் வாழ உதவும்.. குழந்தை பருவத்திலிருந்தே சிறு சிறு வேலைகளையும் அந்தந்த நேரத்தில் செய்து பழகியிருந்தால், அன்றாட வாழ்க்கையில் நேர மேலாண்மையைக் கடைபிடிப்பதால் ஏற்படும் பலன்களை அறியலாம். உதாரணமாக, இளம் பருவத்தில் அன்றாடம் காலை சீக்கிரமாக. எழும் பழக்கம் முதுமையிலும் தொடர்ந்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
உணவுக் கட்டுப்பாடு, ஆரோக்கியத்திற்கு கேடு தரும் உணவுகளுக்கு தடா
50 வயதுக்கு மேல், உடல் ஆரோக்கியம் அதிக உடல் செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. உணவை ஒரே நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் அதையே இடைவெளி விட்டு சிறிய அளவுகளில் உண்ணப் பழகவேண்டும். உண்ணும் உணவு சமச்சீரான உணவாக இருக்கிறதா என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும் எப்போதும் நாற்காலி அல்லது மேஜையைப் பயன்படுத்தாமல் தரையில் உட்கார்ந்து சாப்பிடலாம் இது சரியான செரிமானம் போன்றவற்றை பராமரிக்க உதவுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை முழு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.
நடைப் பயிற்சி, யோகா, தியானம் செய்வது
தினமும் வழக்கமான வேலைகளுடன் சில உடல் பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பு சீக்கிரமே எழுந்து சுறுசுறுப்பான நடைப்பயிற்சிக்கு வெளியே செல்வதை நடைமுறையாக்கிக்கொள்ள வேண்டும். ஓன்றிய மனதுடன் பயிற்சி செய்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கை முறையை மாற்றி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். முதுமையின் முதல் எதிரி தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே இருப்பது. இது உடலை பலவீனப்படுத்தி வாழ்நாளைக் குறைக்கும்
முதுமையில் தனிமை
முதுமையில் தனிமை மிகவும் கொடியது., பணி ஓய்வு என்பது மூளைக்கு ஒய்வு கொடுப்பதல்ல. சரியான நட்பு வட்டம் அமையாவிட்டால் அருகிலுள்ள பள்ளிக்கோ அல்லது ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கோ சென்று சேவைகள் செய்யலாம். அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இது இளம் தலைமுறையினருடன் தொடர்பு கொள்ளவும், நமது அனுபவங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் லட்சியங்களை அடைய அவர்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்களைப் பற்றிய அறிவையும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
பயணங்களால் உற்சாகப்படுத்திக் கொள்ளுதல்
பயணங்கள் என்பது ஒரு அற்புதமான அனுபவம். பயணம் செய்யும்போது, புதியவர்களுடன் பழகுவதற்கும், நட்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் பயணத்திற்கு முன், தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றை திட்டமிடுவது நல்லது. பயணத்தின் போது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதும் அவசியம்
தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கை முறை.
வயதாகிவிட்டதே என்று முடங்காமல் தன்னம்பிக்கையுடன் நமக்குத் தெரிந்த ஒரு புதிய தொழிலைக்கூடத் தொடங்கலாம். பலர் அவ்வாறு முயற்சித்து வெற்றி கண்டுள்ளனர். இது முதுமையில் நம் வயதை மறக்க செய்து உற்சாகத்தைத் தரும்.
முடிவாக குறைந்த பட்சமாலது ஒழுக்கத்தை நம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். எப்போதுமே நேர்மறை எண்ணங்களுடன் இருப்பது. பிறரின் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுதல் போன்றவை நம் மன நலத்தை மேம்படுத்தும்.
எளிமையாகவும், மற்றவர்களுக்கு உதவுபவராகவும், சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பங்காற்றுபவராகவும், இருந்தால் எப்போதும், எந்த வயதிலும் தரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும்.