
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் எடுத்த காரியத்தை விடாமுயற்சியுடன் செய்யுங்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்த விடாமுயற்சி என்றால் என்ன? ஒரு விஷயத்திலும் அதன் இலக்கை அடைவதற்கு தொடர்ந்து முற்படுவதுதான். ஆனால் பலர் முயற்சியை நடுவில் விட்டுவிட்டு எடுத்த காரியத்தில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள்.
நடுவில் ஏன் முயற்சியை கைவிடுகிறோம்? நடுவில் ஏற்படும் தோல்வி! அந்தத் தோல்வியைக்கண்டு துவண்டு விடுகிறோம். இந்தத் தோல்வி ஒரு தற்காலிகமானது என்று நினைப்பதே இல்லை நாம், அதுவே இறுதி என்று நாமே தோல்வியை இறுகத்தழுவிக் கொண்டுவிடுகிறோம்!.
தமது தோல்வியை ஒப்புக்கொள்ளாதவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக விளக்கு கிறார்கள்! உதாரணங்கள் வேண்டுமா? 1831 ம் ஆண்டு தனது வியாபரம் தொடங்கி தோல்வி கண்டார் அவர். தொடர்ந்து அவர் தொட்டது எல்லாம் தோல்விகள். நண்பர்கள் அவரை பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வுகொள்ள வற்புறுத்தினார்கள். அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், தன் தோல்விகளை ஒத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தன் பாதையில் சென்றார். இறுதியில் 1860 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியனார் அவர்தான் ஆபிரகாம் லிங்கன்.
ஆபிரகாம் லிங்கன் மட்டும் அல்ல, வாழ்க்கையில் சாதித்த அனைவருமே தங்களது வாழ்நாளில் தோல்வி ஏற்பட்ட மாத்திரத்தில் அப்படியே தங்களது முயற்சிகளை கைவிட்டு விட்டு ஓடிப்போனவர்கள் அல்ல. உலகில் நோபல் பரிசை இரண்டு முறை பெற்ற ஒரே பெண்மணி மேரி குயூரி அம்மையார். போலந்து நாட்டில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருந்தவர்.
பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றபோது பல முறை பசி தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் பசி, வறுமை ஆகிய இன்னல்களுக்கிடையே அவர் ஆராய்ச்சிகளை மட்டும் கை விடவில்லை. இறுதியில் அதில் வெற்றி கண்டு நோபல் பரிசைப் பெற்றார்.
பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு கம்பெனியின் நிறுவனர் பிரபல தயாரிப்பான V8 என்ஜின் உருவாக்க நினைத்தார் ஆனால் அவரது நிறுவன பொறியாளர்கள் அதுவெல்லாம் சாத்தியமே இல்லை என்று கூறி விட்டார்கள். ஹென்றி ஃபோர்டு விட்டு விடவில்லை. தன் ஆவலை "எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை. ஆனால் முடியாது என்று மட்டும் என்னிடம் வராதீர்கள். முயன்று பாருங்கள்!..
வெற்றி கிடைக்கும் வரை முயன்று பாருங்கள் "என்று தன் தொழில்நுட்ப குழுவை அனுப்பி வைத்தார். இறுதியில் ஃபோர்டு கம்பெனியின் என்ஜினியர்கள் ஒரு ஆண்டிற்கு பிறகு பலவகையான முயற்சிகளுக்கு பின்னர் அதை சாதித்தார்கள்.
லாட்டரி சீட்டு வாங்கும் ஒருவன் எத்தனை முறை பரிசு விழாமல் போனாலும், எப்படியும் ஒருநாள் விழும் என்ற நம்பிக்கையில்தானே அவன் தொடர்ந்து வாங்குகிறான். இந்த உத்வேகத்தை ஏன் நாம் நம் வாழ்க்கைக்கு வெற்றி தரும் முயற்சிகளில் செயல்படுத்தக் கூடாது!
நம் வாழ்க்கையும் இதே மாதிரிதான். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும் என்பதை சிந்தியுங்கள். உலகில் முடியாதது ஏதும் இல்லை.
ஒரு வெற்றியாளன் தன்னுடைய தோல்விகளையும், இழப்புகளையும் பற்றி ஒரு போதும் உட்கார்ந்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்கமாட்டான். அந்த தோல்விகளில் இருந்து எப்படி விடுபடலாம் என்றே சிந்திப்பான்.உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அதைப் பற்றிய பயம்தான் மனதைக் கலக்கி, நம் மனதை குழப்பி நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது.
ஒரு மரத்தில் எந்த இலை பழுத்து எப்போது உதிரப்போகிறது என மரம் யோசிப்பது இல்லை. அதன் வேலை புதிய இலைகளைத் துளிர்க்கவிடுவது மட்டுமே. உங்களது எதிர்கால பொறுப்புகளை சுமந்து நீங்கள் பயணிக்கும் போது இடையில் வரும் சிறிய சிரமங்களையும் பொருட்படுத்தாது பயணியுங்கள். நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்து செல்லுங்கள். வெற்றி நீங்கள் தொடும் தூரத்தில் உள்ளது.