
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற பாடலைக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் புத்திசாலி மனிதர்கள் தோற்ற கதைகளும் உண்டு. புத்தி இல்லாத மனிதர்கள் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. ஒரு மனிதனின் வெற்றிக்கு அவனது புத்தி மட்டுமே அடித்தளமாக அமைந்துவிட முடியாது. அதையும் தாண்டி அவன் சிந்தித்தாக வேண்டும். அப்போதுதான் அவனுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புத்தியைத் தகுந்த முறையில் பயன்படுத்தத் தெரியாவிட்டால் அவனுக்கு புத்தி இருந்தும் வெற்றிபெற முடியாமல் போய்விடும். மனித அறிவில் பலவகை உண்டு. அவற்றில் அறிவு என்பது எதைச் செய்வது என்பதை மட்டுமே தெரிவிக்கும். யுக்தி -அதை எப்படி செய்வது என்பதையும் அறிவிப்பது. குயுக்தி -நெறி தவறிய கோணல் புத்தியுடன் செயல்படுவது.
ஒருவன் அறிவுபூர்வமாக செயல்படுவதுடன், யுக்தியையும் பயன்படுத்த வேண்டும். யுக்தியைக் கைக்கொள்ளாததனால் தோற்றுப்போக வாய்ப்புகளும் உண்டு. அதே நேரத்தில் குயுக்தியின் மூலம் வெற்றி பெறுவது முறையான வழிமுறை ஆகாது. ஆதலால் அதை கைவிட்டு விடலாம்.
மராட்டிய மன்னன் சிவாஜி ஒரு சமயம் கதாப்பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டில் இருந்த இடத்தை எதிரிப்படைகள் நெருங்கி வருவது அவருக்குத் தெரிந்தது, அதைக் கண்டு அவர் கொஞ்சமேனும் அமைதி குலையவில்லை. பக்கத்தில் இருந்த ஒருவனை அழைத்து முகத்தை மூடி முக்காடிட்டுக் கொண்டு பதுங்கிப் பதுங்கி ஓடுமாறு கூறினார்.
அவன் ஓடியதுதான் தாமதம். அவன் சிவாஜி எனக் கருதி எதிரிப்படைகள் அனைத்தும் அவனை துரத்திக் கொண்டுச் சென்றனர். அதற்குள் அங்கிருந்து வேறு வழியாக தப்பிவிட்டார் சிவாஜி. இதைத்தான் சமயோசிதம், யுக்தி, ராஜதந்திரம் என்று கூறுவது.
ஒரு மனிதன் முன்னேறுவதற்கு யுக்தி மிகவும் அவசியம். அறிவாளி ஆறு மாதங்களில் ஆற்றக்கூடிய வேலையை யுக்தியுள்ளவன் ஆறு நிமிடங்களில் ஆற்றிவிடுவான். இதைத்தான் சிவாஜியின் கதை எடுத்துக் கூறியது. முன்னேற முயற்சிப்பவர்கள் யுக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நேர்மையுடன் செயலாற்றுவதே யுக்தி. யுத்தியானது தவிர்க்க முடியாததற்கு தலை சாய்த்து அதனை தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்கிறது. இது விரும்பத்தக்கது. அறிவானது தமக்கு சிலவற்றைதான் பெற்றுத் தருகிறது. ஆனால் யுத்தியானது நமக்கு எல்லாவற்றையும் பெற்று தந்து விடுவதுடன் ,அதுவே எல்லா விடுகதைகளையும் அவிழ்த்து, எல்லாத் துன்பங்களையும் வெற்றி கொண்டு, எல்லா தடங்கல் களையும் அகற்றிவிடுகிறது.
குயுத்தி என்பது குறுகிய புத்தி ஆகும். அதனால் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் சமயோசிதமாக சிந்தித்து செயல்பட்டால் அதுவே வெற்றிபெற வழி வகுக்கும் என்பது உறுதி!
துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும்
துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்!
தடைகளைத் தகர்த்தெறிந்து உன்னால் முடியும் என நம்பு!
பயத்தை உதறி நம்பிக்கை விதையை விதை
வெற்றி உனக்காக காத்திருக்கிறது!