

நீங்கள் விரும்பும் செயல்களுக்கு மட்டுமே, மன உறுதியையம், தொடர்ந்து முயற்சிக்கவும் அதற்கான ஊக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அடுத்தவர்களின் விருப்பத்திற்கு, நீங்கள் நாணல் போல் வளைந்து கொடுத்தால், சுயமாக சிந்திக்கும் மனமும், திறமையும் உங்களை விட்டு, விலகி நிற்கும் என்பதை உணர்ந்து, செயலாற்றும் முடிவில் உறுதியாக இருங்கள்.
நீங்கள் செயலாற்றும் முன், பலமுறை யோசியுங்கள். நடைமுறை படுத்துவதற்கு முன், தகுந்த முறையில் பயிற்சி எடுங்கள். அதுதான், ஏற்படுத்தும் தவறுகளையும், தடைபடும் சிக்கல்களையும், தவிர்க்கவும், அதற்கான மனப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவும் உறுதுணையாக இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற துடிப்பான ஆற்றல் அவசியம் என்பது முக்கியம். ஆனால், அதற்க்காக இரவு பகலாக உழைக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இதில் சுவர் என்பது நாம் இயங்கும் உடல், சித்திரம் என்பது நாம் ஆற்றும் செயல் என்பதை உணர்ந்து, பொறுப்புடன் செயலாற்றுங்கள்.
இலக்கு என்பது, நம் கண்களுக்குள் தெரியும் வேட்கையின் நிழல் உருவம். அதன் பயணம் நெடுந்தூரம் கொண்டது. அதற்கேற்ப உங்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே, சாதனை சாத்தியம். எவ்வளவுதான் கவனமாக ரோஜாப்பூ பறிக்க நினைத்தாலும், அதனோடு இருக்கும் முட்கள் நம் கைகளை பதம் பார்ப்பது போல், இடையில் வரும் தடைகளைதாண்டி, அதனை அடைய வேண்டும் என்பதை உணர்ந்து செயல் ஆற்றுங்கள்.
செயலாற்றும்போது கடினமான சூழ்நிலை ஏற்ப்பட்டாலும், அதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்ப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆட்பட்டாலும், வீட்டிற்குள் வரும் முன், அதன் சுமையை வெளியே விட்டு விட்டு, சலனப்படாத மனதோடு உள்ளே வாருங்கள். குடும்பத்தோடு இயல்பாக இருக்குப் பழகுங்கள். உறவுகளோடு அன்பாக பேசி மகிழுங்கள். அப்போதுதான், உங்கள் குறிக்கோளின் உண்மைத் தன்மை மாறாமல், இரவில் உறக்கமும், மறுநாள் விடியலோடு, கைகோர்த்து, செயலாற்றும் திறன் வெளிச்சமிடும்.
பிரச்னைகள் ஏற்படின், எதிர்மறை எண்ணங்களை தவிருங்கள். அதனிடமிருந்து விடுபடும் நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராயிந்து, விலகி வரும் யுக்தியை கையாளுங்கள். எந்த நிலையிலும் தன்னுடைய ஸ்திரத்தன்மையை இழந்துவிட்டு, அடுத்தவரிடம் மண்டியிட்டு அமர்ந்து, அவர்களின் கைப்பாவையாக மாறி விடாதீர்கள்.
முதலீடு என்பது உங்களின் வாழ்க்கைக்கான காப்பீடு. உங்கள் உழைப்பு என்பது, உங்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான பரிணாமத்துக்குரிய குறியீடு. உங்கள் ஆற்றலில் விளையும் வாழ்க்கையின் வெற்றிக்கான காரணிகள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை சிறப்பாக, ஏற்றத்திற்கு இட்டுச்செல்லும் வழியில் பயணிக்க உங்களால்தான் முடியும் என்பதை உணர்ந்து செயலாற்றுகள்.
செயலில் இறங்கிவிட்டால், ஒருபோதும் தனக்குள், இது நம்மால் முடியுமா? என்ற அவநம்பிக்கையோ அல்லது பயமோ கேள்விகாகுறியாக வந்துவிட்டால், உங்களால் திறமையோடு செயலாற்ற, செயல்திறன் எதுவும் சாத்தியமில்லை. எனவே எஃகு கோட்டையாக மனதை வைத்திருங்கள். எடுத்தக் காரியம் நமக்கானது, அதுவே நம் வாழ்வின் வெற்றிக்கான கேடயமானது என்பதை உணர்ந்து நம்பிக்கை வையுங்கள்.
வாழ்க்கையில் ஆறு போகும் திசையில் போனால், அடித்துச்சென்று கவிழ்ந்து போவீர்கள். எதிர்திசையில் எதிர்நீச்சல் போட்டால், வாழும் காலம் உயர்ந்து வெல்வீர்கள்!