
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான சொந்த வாழ்க்கை உள்ளது. எதிர்பார்த்து அது நடைபெறவில்லை என்றால் மனம் வேதனை கொள்ளும். ஏமாற்றமடையும். எனவே பிறரிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ள வேண்டாம்.
யாரிடமும் எப்போதும் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிக வலியை கொடுக்கும். வெறுப்பை வளர்க்கும். இருப்பினும் அர்த்தமுள்ள உறவுகளுடன் சமநிலைப்படுத்தப் படாவிட்டால் அது தனிமை அல்லது உறவை துண்டிக்கும் உணர்வுகளுக்கு வழி வகுக்கும்.
நேர்மறையான எதிர்பார்ப்புகள் நம்பிக்கையை வளர்த்து ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். எனவே ஆரோக்கியமான எல்லைகளை நிர்ணயிப்பதும், அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் மற்றவர்களுடன் பழகுவதும் சிறந்தது.
எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்வது என்பது சவாலானதுதான். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காக படிப்பது போல, வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து போரிடுவதுபோல, ஒருவர் நம்மை நேசிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவரை நேசிப்பது போல எல்லா சூழ்நிலைகளிலும் எதிர்பார்ப்பை நீக்கிவிட்டால் நாம் உண்மையில் குறிக்கோள் அற்றவர்கள் ஆகிவிடுவோம். வேலை செய்வதற்கான காரணத்தையும், உந்து சக்தியையும் இழந்து விடுவோம்.
என்றாலும் அவற்றை குறைக்கும் மனநிலைக்கு பாடுபடுவது அதிக உணர்வு ரீதியான மீள் தன்மைக்கும், மனஅமைதிக்கும் வழி வகுக்கும். இது தனிப்பட்ட நல்வாழ்வைப் பேணுகையில் ஆரோக்கியமான உறவுகளை அனுமதிக்கும். எதிர்பார்ப்புகளை ஒருபோதும் முற்றிலுமாக நம்மால் நிராகரிக்க முடியாது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்வது சாத்தியமும் இல்லை. ஆனால் அதை சமாளிக்க ஒரு எளிய வழி நம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதாகும். இதனால் ஏமாற்றம், விரக்தி, கோபம், அதிருப்தி போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பிறரிடம் எதையும் எதிர்பார்ப்பதை நிறுத்தினாலே ஒரு சிறிய விஷயம் கூட நமக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காமல் வாழ விரும்பினால் நம் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றவும், அதன் பலன்களை பற்றியோ அல்லது எதையும் பிரதிபலனாக என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியோ சிந்திக்காமல் இருப்பது நமக்கு திருப்தியைத் தருவதுடன் கோபம், வருத்தம் போன்ற குணங்களை தலைதூக்க விடாமல் செய்துவிடும்.
பிறரிடம் அதிகம் எதிர்பார்க்கும் நாம் அவர்களுக்காக என்ன செய்கிறோம் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். ஒருவர் நம்மை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் அந்த அன்பை, அந்த எதிர்பார்ப்பை பிறருக்கும் நாம் கொடுக்க வேண்டும் அல்லவா?.
எதுவுமே ஒரு வழி பாதையாக இருப்பது சரியாகாது தானே! ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை இருக்கிறது. அவர்களும் தங்களுக்காக உழைக்கவும், வாழவும் வேண்டும். எனவே பிறரிடம் அதிகம் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லதுதானே!
எதிர்பார்ப்புகளே எல்லா துன்பங்களுக்கும் மூல காரணம். உண்மைதானே நண்பர்களே!