
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி, பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளைச் சேருமடி!
கவிஞரின் அழகான வார்த்தைகள், வாழ்க்கையின் சூட்சுமத்தை நமக்கு விளக்குகிறது. இதனை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே வாழ்க்கையின் புதிரும் விளங்கும்.
இன்று நாம் வாழும் வாழ்க்கை. வருங்காலச் சந்ததிக்கும் பாடமாக அமையவேண்டும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என எண்ணக்கூடாது.
வாழும் வகையறிந்தும், வரை முறை தெரிந்தும் வாழ்வதும்தான் உண்மையான வாழ்க்கை ஆகும். நல்ல எண்ணங்களும், நல்ல செயல்களும் மட்டுமே நம் மனதில் இடம் பெறவேண்டும்.
ஒரு மனிதன் நியாயமாய் உழைத்து முன்னுக்கு வந்தால் மற்றொரு மனிதனுக்குப் பொறாமையும், ஒரு நாடு வளர்ச்சி அடைந்தால் அடுத்த நாட்டிற்கு வன்மமும் ஏற்படுகிறது.அவன் நன்றாக இருந்தால் இருக்கட்டுமே. அதுபோல் நாமும் நன்றாக வரவேண்டும் என்றுதான் நினைக்கவேண்டும்.
ஒருவரை ஒருவர் அழித்து ஆனந்தம் காண்பதை இறைவனும் விரும்பமாட்டான். உலகில் அனைத்து மதங்களுமே அன்பின் வழியில் சென்றால்தான் ஆண்டவனை அடையலாம் என்கின்றனர்.
ஆனால், வம்பின் வழியே செல்வதற்குத்தான் மதம் பிடித்து அலைகின்றனர். இன்னும் எத்தனை காலங்கள்தான் மதம் பிடித்து வாழப்போகின்றனரோ தெரியவில்லை.
என்றும் மனிதனாக மட்டும் வாழ்வோம்! மனிதன் செய்யும் பாவங்கள் அனைத்துமே வரவு வைக்கப்பட்டு வருகின்றன. அது அவனுக்குத் தெரியாது. உணரவும் மாட்டான். ஏனென்றால் இவன் மனதைத் தொலைத்துவிட்டு. புறத்தோற்றத்தில் மயக்கம் ஏற்பட்டு அசுரனாகி விட்டான்.
பஞ்சபூதங்களின் வாயிலாக இறைசக்தி அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. காலத்திற்கு ஏற்றாற்போல் தவறு செய்பவனுக்கும். தண்டனை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
உலகிலேயே தான்தான் வல்லரசு நாடு எனக்கூறி அராஜகம் செய்பவரையும். ஒருவழியாக இயற்கை தண்டித்து விடுகிறது. தவறு செய்பவர்கள் எவருமே இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது.
மனிதன் செய்யும் சிறிய தவறுகள் கூட இயற்கையிடம் பதிவாகிவிடுகிறது. காலத்தின் கட்டாயத்தில் அவன் இயற்கையின் நீதி மன்றத்தில் தண்டனையை ஏற்றேயாக வேண்டும்.
பிரபஞ்ச சக்திகளின் அம்சம்தான் மனிதன் உடலிலும் நிறைந்து இருக்கின்றன். அதற்கும். மனித உடலுக்கும் தொடர்பு இருந்து ஆட்டி வைத்துக் கொண்டும் இருக்கின்றது.
இதனை உணர்ந்தவர்கள் பாவம் செய்யப் பயப்படுவார். எந்த ஒரு மனிதனும், செய்யும் பாவத்தின் பலனை ஒருநாள் அனுப்பவித்தே ஆகவேண்டும்.
பாவப்பட்ட ஆத்மாக வாழவேண்டாம். பாவச்சேற்றில் விழுந்தவர்கள். அதிலேயே புதையுண்டு மடிய வேண்டியதுதான். பாவத்தின் அகராதியை அறிந்தும் தொடர்பவர்கள், சுகமாக வாழவே முடியாது.
தற்சமயம் கானலைப் பார்த்த மகிழ்ச்சிதான் ஏற்படுமே தவிர. அது உண்மையான இன்பமாக இருக்க முடியாது.
அடுத்தவரை அழித்துதான் நாம் வாழவேண்டும் என ஆசைப்பட்டக்கூடாது. மனிதநேயம் கொண்ட வாழ்வே உலகம் எங்கும் மலரவேண்டும்.