
நாம் வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும்போது நமக்கு இரக்கம் காட்டுவது அல்லது கேலி செய்வது என யாரேனும் இருந்தால் அவர்களிடம் என் வறுமையை போக்க ஏதாவது வழி இருந்தால் காட்டுங்களேன் என்று சொல்லிப் பாருங்கள் உண்மையில் அவர்கள் தூரப்போய் விடுவார்கள். ஏனென்றால் உங்கள் வறுமையை அவர் பழிக்கிறார் என்று அர்த்தம்.
நாம் வறுமையில் இருந்தாலும் தன் மதிப்பை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தால் அந்த வறுமை நம்மை விட்டு நீங்கும் முன்னேற்றம் காணலாம் அப்படித்தான் செய்தார் ஒரு அறிஞர் அவர் யார் தெரியுமா இப்பதிவில் படியுங்கள்.
இவர் நாகரிக ஆடைகளோ, காலணிகளோ அணிந்து கொள்வதில்லை, அவ்வளவு வறுமை, பார்த்தவர்கள் பலர் இவரைக் கேலி செய்தனர். சிலர் இரக்கம் காட்டினர். இவரோ, கேலியை வெறுத்ததுபோல இரக்கத்தையும் வெறுத்தார்.
ஒருநாள் இவர், அழுக்கான உடைகளையும், கிழிந்த காலணிகளையும் அணிந்துகொண்டு வெளியே சென்றிருந்தார். இந்தக் கோலத்தில் இவரைக் கண்டான் நண்பன் ஒருவன். அவன், இவர் திரும்பி வீடு வந்து சேர்வதற்குள் இவர் வீட்டிற்கு வந்தான். இவருக்குத் தெரியாமல், ஒரு ஜோடி மூடுகாலணிகளை சன்னல் வழியாக இவரது அறைக்குள் போட்டான்.
நேரில் கொடுத்தால், அது அந்த மனிதரின் தன்மதிப்பைப் புண்படுத்துவதாகும் என்று அஞ்சிதான் அவன் இப்படிச் செய்தான். இப்படித் தெரியாமல் போட்டுவிட்டு வந்தால், இவர் ஏற்றுக்கொள்வார் என்றும் நம்பினான்.
வெளியே சென்றிருந்தவர், தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்தார். பூட்டைத் திறந்து அறைக்குள் நுழைந்ததும், அங்கே புதிய மூடுகாலணிகள் கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு உடனடியாகக் கோபம் பொங்கிவிட்டது. 'என் வறுமையைப் பழிப்பதற்கு இதுவும் ஒரு வழியா?' என்று கொதித்தெழுந்தார். அந்த மூடுகாலணிகளைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டார்.
எவ்வளவு வறுமை இருந்ததோ, அதைவிடப் பன்மடங்கு அதிகமான தன்மதிப்பும் இவரிடம் இருந்தது. ''இந்தக் காலணிகளை இங்கே போட்டவனுக்கு பொருட்செல்வம் அதிகமாக இருக்கலாம்; ஆனால், என் அறிவுச்செல்வம் அதைவிடவும் மிகவும் உயர்ந்தது!" என்று பெருமித உணர்ச்சியும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்த அவர் யார் தெரியுமா?
அவர்தான் டாக்டர் சாமுவேல் ஜான்சன். ஆங்கில மொழிக்கு முதன் முதலில் ஒரு அகராதியை உருவாக்கிக் கொடுத்து அதை வளமிக்க மொழியாக மாற்றியவர். வறுமையில் வாழ்ந்தாலும் இவர், ஆங்கில மொழிக்கே ஆசானாக மாறிவிட்டார்.
தன் மதிப்பில் விட்டுக்கொடுக்காமல் வாழுங்கள் அப்பொழுதுதான் உங்கள் வளர்ச்சி மேன்மை அடையும்.