
அச்சம் மனிதனின் வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல் என்றே கூறலாம். அச்சமுள்ள எவரும் அரிய செயல்களை செய்யமுடியாது. அதனால்தான் மகாகவி பாரதியார் கூட "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார் -இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே" என்று ஆவேசமிக்க கவிதையை வடித்துக்காட்டினார்.
அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சத்தான் வேண்டும். பாவம், பழி, பாதகமான செயல்கள் போன்றவற்றிற்கு அஞ்சியே ஆக வேண்டும்.
திணைத் துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாகக் கொள்வர் பழி நாணுவர் என்கின்றார் வள்ளுவர்.
அதோடு தன் உடம்பில் உள்ள ஒரு முடி நீங்கினால் கவரிமான் உயிர் நீக்கும். அதுபோல் நற்குடியில் பிறந்தவர்களும் கவரிமானை போன்று மானம் பெரிது என்று நினைப்பவர்களே. அவர்களுக்கு மானக் குறைவாக ஏதாவது நடந்தால் உயிர் வாழ விரும்ப மாட்டார்கள் என்கிறார் மற்றொரு குறளில். இதெல்லாம் அஞ்ச வேண்டிய செயல்கள். அதற்கு அஞ்சியே ஆகவேண்டும் அதுதான் உயர்ந்த பண்பு.
ஆனால் நல்ல செயல்களை செய்வதற்கு அஞ்சாமையை கைவிட்டே ஆகவேண்டும். அப்படி அஞ்சாமை கைவிடாதவர்கள் வெற்றித் தேரில் பவனி வரமுடியாது. அதனால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற இளைஞர்கள் தங்கள் மனத்திலிருந்து அச்சத்தை வெளியேற்றி ஆகவேண்டும்.
எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் நள்ளிரவில் எழுந்து வீட்டை விட்டு சென்றுவிட்டான். படுக்கையில் சிறுவனைக் காணவில்லை. அவனுடைய பெற்றோர் அவனை தேடத்தொடங்கினர். ஊர் முழுவதும் காணவில்லை. இறுதியாக கண்டுபிடித்தனர். எங்கே? காட்டின் நடுவில் இருந்த குளக்கரையில். அங்கு துள்ளி விளையாடும் மீன்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சிறுவன். தாய் அவனைக் கட்டித்தழுவி மகனே உனக்கு பயம் இல்லையா? என்று கேட்டார். பயம் என்றால் என்ன அம்மா என்று பதில் கேள்வி கேட்டான் சிறுவன். மகனுடைய தன்மையை அறிந்து தாய் எந்த பதிலும் கூறாது, பயத்தைப் பற்றி பேசாது மகனை அழைத்துச் சென்றாள் வீட்டிற்கு. அச்சிறுவன்தான் மாவீரன் நெப்போலியன்.
சிறுவன் நெப்போலியன் துணிச்சல்தான் அவனது எதிர்கால வெற்றிகளுக்கு அடித்தளமிட்டு இருக்கிறது. நெப்போலியன் மற்ற சிறுவர்களை போன்று அச்சத்தை சொந்தம் கொண்டாடி இருந்தால் அவனிடம் வெற்றித் திருமகள் விலகியே இருந்திருப்பாள்.
சிறுவர்கள் உள்ளத்தில் துணிச்சலை வளர்ப்பதற்கு பதிலாக அச்சத்தை விளக்கின்ற பெற்றோர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். ஒரு குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு அதோ பூச்சாண்டி வருகிறான் என்று பயமுறுத்துவது, உணவு உண்ண மறுக்கும் குழந்தையிடம் சாமி கண்ணைக் குத்தும். பெட்டிக்காரன் வருவான்; பிடித்துக்கொண்டு போவான் என்று பயமுறுத்தி ஊட்டுவது, வேப்ப மர உச்சியிலே பேய் ஒன்று ஆடுது. அதனால் அங்கு விளையாட போகாதே, என்றெல்லாம் குழந்தைகளை அரட்டி மிரட்டி பயமுறுத்தி வைப்பதனால் அவர்கள் எதிலும் துணிச்சல்காரராக விளங்க அச்சப்படுகிறார்கள்.
அதனால்தான் "அச்சம் தவிர்" என்று மகாகவி பாரதி தமது புதிய ஆத்திச்சூடியில் புதிய தலைமுறைக்காக புதுக்குரல் கொடுத்துள்ளார். இதை இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் படித்திருக்க வேண்டும்.
அதனால்தான் சிறு வயது முதலே குழந்தைகள் மேடை ஏறுவதும், தைரியமாக பாடுவது, பேசுவது, என்று அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் இன்று பங்கேற்பதையும், பெரிய பெரிய வயதுக்கு மிஞ்சிய பரிசுகளையும் பெறுவதைக் காணமுடிகிறது. அவர்களுக்கு சபை நடுக்கம் என்று எதுவும் இல்லாததையும் நன்றாக உணரமுடிகிறது.
இருப்பினும் இன்னும் சிலர் அச்சத்திலே வாழ்ந்து வருவதையும் கண்கூடாக காணமுடிகிறது. அவர்கள் துணிச்சல் பெறவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் ஆசையும் ஆகும். அப்படி துணிச்சலாக வெளியில் வரும் பொழுதுதான், உள்ளே அடங்கிக் கிடக்கும் அத்தனை திறமையும் வெளியில் வரும். மற்றவர்களும் அதை புரிந்துகொண்டு வழி நடத்துவார்கள். வெற்றித் திருமகளும் வாசல் கதவைத் திறந்து வைப்பார்.
இவ்வுலகமாகிய மாபெரும் கடலிலே நீந்த தெரியாதவர்கள் அலைகளுக்கு இரையாக வேண்டியதுதான். ஆனால், அதற்கு மாறாக அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்து வரும் அலைகளை தம் கையால் அடக்கியும், முடக்கியும் நீந்துகின்றவர்களை தாங்கி செல்வது இல்லையா? ஆதலால் துணிச்சலுடன் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!