
குறிக்கோளும் இலக்கும் இல்லாத வாழ்வு போலியான வாழ்வு. வாழ்வதை விட விரைவாக மண்ணுக்குச் சுமையாக இல்லாது உதிர்ந்துபோவது மேல்.
இலட்சியங்களை நமது எஜமானர்களாக்கிக்கொள்ள வேண்டும். நாம் எதை நோக்கிச் சென்று வெற்றிபெற எண்ணுகின்றோமோ; அதனை நமது இலக்காக வைத்துச் செயல்பட்டால் கிடைக்கின்ற பலன் சுகமாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. இலக்கு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம். தாய்க்கும் தந்தைக்கும் தன் குழந்தை அவையத்து முந்தி இருக்கச் செய்வது அவர்களது இலக்காக இருக்க வேண்டும்.
நமது இலக்கு தன்னலம் காத்து பொதுநலம் சார்ந்தும் செயல்பட வேண்டும். நம்மில் சில பேர் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கித்தான் போகின்றார்கள். ஆனால் இலக்கினை அடையத் தவறான வழியிலே பலர் சென்று விட்டு விதியையும் மதியையும் நொந்து தன்னையே வருத்திக் கொள்கின்றனர்.
இலக்கு இலட்சியத்தினைக் கொண்ட குறிக்கோளை நோக்கிச் செல்கின்றபோது தடைகள் சறுக்கல் அச்சுறுத்தல்கள் வரத்தான் செய்யும். அச்சப்படத் தேவை இல்லை 'அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வான் இடிந்து வீழ்ந்த போதும் அச்சமில்லை அச்சமில்லை ‘ எட்டையபுரத்தான் பாடியதை கற்றுக்கொள்ளுங்கள்.
மேற்கண்ட தவறுகளை தடைக்கற்களை புரிந்து கொண்டு விட்டால் திருத்தம் தேவை என்பதை உணர்ந்து கொண்டால் செயல்கள் எளிதாகி விடும். இல்லாவிட்டால் உங்கள் தவறுகள் திருத்தப்படாமலேயே எங்கோ போய்க்கொண்டே இருக்கும். இறுதியில் இலக்கு தொலைந்து போகும்.
தவறுகளைத் தெரிந்து புரிந்துகொண்ட பிறகு அதற்கு குழப்பமோ, வெட்கமோ அடையத் தேவை இல்லை. திருந்த ஒரு வாய்ப்பாகக் கருதிட வேண்டும்.
தம்முடைய இலக்கு தமது காலடிச் சுவடுகளாலேயே அளந்து வைத்துச் சென்றடைய வேண்டும். இதற்கும் கூட்டணி கூடாது.
சில நேரங்களில் நாம் பழமைக்குள் ஊறிப்போனதாலேயே நிகழ்கால நிலைகளோடு ஒத்துப்போக மறுப்பதாலேயே சில தவறுகளைச் சந்தித்த பிறகும் திருத்திக் கொள்வதற்கு கூச்சப்படுகின்றோம்.
"உங்கள் தந்தையாரின் கூடாரங்களுக்குள் எத்தனை காலம் உறங்கிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள். விழித்தெழுந்திருங்கள். உலகம் முன்னேறிக் கொண்டிருக் கிறது. அதனுடன் கை கோர்த்துச் செல்லுங்கள்" என்றான் மாவீரன் மாஜினி.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலேயும் இலக்கு, லட்சியம், முக்கிய வாழ்வு இவற்றை தொய்வில்லா நெடும் பயணத்திற்கு ஊன்றுகோலாக வைத்துக்கொள்ள வேண்டும்.