
சுய சிந்தனையின் மூலமாக, நாம் யார்? நம் தகுதி என்ன? நமக்கு எப்படி பட்ட திறமைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் பற்றிய ஆழமான புரிதல்களை நாம் பெறலாம். சுய சிந்தனையால் பல வேறுவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
நாம் எல்லோருமே வெவ்வேறு வழிகளில் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். ஆனால் நாம் ஏன் அப்படி வேவ்வேறு விதத்தில் செயல்படுகிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? ஏனென்றால், ஒவ்வொருவரின் சிந்தனையும் ரசனையும் வேறுபட்டிருக்கும். நமக்குரிய திறமையை இயல்பை நாம் தமக்குத் தானே சுயபரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். சுயபரிசோதனை செய்யும்போதுதான், நீங்கள் உங்களை பற்றி புரிந்துகொள்ள முடியும். இந்தப் பயிற்சியானது உங்கள் உந்துதல்கள், மதிப்புகள் மற்றும் இலக்குகளைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்ளவும், தனிப்பட்ட வளர்ச்சியை வளர்க்கவும், மேம்பட்ட சுயவிழிப்புணர்வை வளர்க்கவும் உதவும். நீங்கள் உங்களுடைய பலங்களையும் பலவீனங்களையும் கண்டு கொள்ளலாம் மேலும் உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காணவும் உதவும். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
சுய சிந்தனையின் நன்மைகள்:
சுய விழிப்புணர்வு அதிகமானால்: சுய விழிப்பானது நம் உணர்ச்சிகளையும் நடத்தைகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. உள்நோக்கிச் சிந்திக்கும்போது நம்மை நாமே அறிந்துகொள்ளவும், நம்முடைய வளர்ச்சியிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது.
முடிவெடுக்கும் சக்தியை மேம்படுத்துகிறது: சுய அறிவின் அடிப்படையில் தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய இது உங்களுக்கு உதவுகிறது. உங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருந்தால், உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்களே அறிந்துகொள்ள எளிதாக இருக்கும், மேலும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடியும்.
உணர்ச்சி நுண்ணறிவை மேம்படுத்துகிறது: சுய சிந்தனை பச்சாதாபத்தை வளர்க்க உதவுகிறது மற்றும் நம்முடைய உள்ளுணர்ச்சிகளை சிறந்த முறையில் கையாள அனுமதிக்கிறது. ஒருவர் தன்னுடைய சொந்த நடத்தையை நன்கு புரிந்துகொள்ளும் போது அது அவருடைய உணர்ச்சிகளை சிறந்த முறையில் கையாள உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது: சுய விழிப்புணர்வு கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு என்ன காரணம் என்பதை நன்றாக அறிவார்கள். எனவே, அவர்களால் மன அழுத்தத்திற்கான காரணத்தை எளிதில் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.
தனிப்பட்ட வளர்ச்சி: அதிகரித்த சுய விழிப்புணர்வு தனிப்பட்ட வளர்ச்சிக்கான கதவைத் திறக்கிறது. இது தனிநபர்கள் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங் களிலிருந்து கற்றுக்கொள்ளவும் மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கவும் உதவுகிறது.
சிறந்த உறவுகளை உருவாக்கலாம்: தன்னை பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்த ஒருவரால், மற்றவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுடன் நிச்சயமாக இணைந்து ஆரோக்கியமான உறவுகளை பேண முடியும்.
சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது: சுயபரிசோதனையில் சிறந்து விளங்கும் ஒருவர் சவால்களை எளிதாக பகுப்பாய்வு செய்ய முடியும். அதன் காரணமாக அவரால் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிய முடியும்.
மேற்கொண்ட நன்மைகளை கருத்தில் கொண்டு நீங்கள் உங்களை தனக்குத் தானே சோதனை செய்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் தன்னை தானே மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அதற்கேற்ற செயல்களை செய்கிறோமா? எது தகுந்த வேலை? எப்படி இருந்தால் நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றெல்லாம் கேட்டு கொண்டு அடிக்கடி சிந்தனை செய்வதன் மூலமாக நமக்கு சில உண்மைகள் புரிய வரும். அதே சமயத்தில் மிக அதிகமாகவும் யோசிக்க கூடாது.
கூடிய வரையில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ முயற்சி செய்தாலே போதும். நம்முடைய உணர்ச்சிகளிலும் எண்ணங்களிலும் மாற்றம் தானாகவே வரும்.