
எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள தேவையற்ற பொருட்கள், உறவுகள் அல்லது சிந்தனைகளை தவிர்த்து எளிமையாக வாழ முயற்சிக்கவும்.
தேவையானவை மட்டும் வைத்திருங்கள் – உண்மையாகவே தேவையான பொருட்கள் மட்டுமே வைத்திருக்கலாம். மற்றவை இடத்தை மட்டுமல்ல, மனதைவும் குழப்பமாக்கும்.
நிதானமான வாழ்வை தேர்வு செய்யுங்கள் – வேகமாக ஓடும் வாழ்க்கைமுறை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவசியமில்லாத வேலைகளை குறைத்து, ஒவ்வொன்றையும் நிதானமாகச் செய்யுங்கள்.
ஒழுங்கான நாள் திட்டம் அமைக்கவும் – நாள் முழுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு எளிய திட்டம் அமையுங்கள். இது நேர மேலாண்மையை அதிகரிக்கும்.
சிறிய சந்தோஷங்களை அனுபவிக்கலாம் – ஒரு காபி, ஒரு புத்தகம், ஒரு வானிலை, குழந்தைகளோடு விளையாடுதல் பூந்தோட்டம், இதுபோன்ற சாதாரண விஷயங்களிலும் மகிழ்ச்சிகாண முயலுங்கள்.
கணினி/மொபைல் நேரத்தை கட்டுப்படுத்துங்கள் – டிஜிட்டல் வாழ்க்கையை கட்டுப் படுத்தினால் மன அமைதி அதிகரிக்கும். தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீளாய்வு செய்ய நேரம் எடுக்கவும் – தினமும் சில நிமிடங்கள் உங்கள் நாளைச் சிந்திக்கவும், எதை குறைக்கலாம், எதை மேம்படுத்தலாம் என்பதை ஆராயவும். என்னென்ன, எப்போது சாப்பிடலாம் என்பதையும் சிந்தனை செய்யலாம். அப்போது மனம் அமைதியான நிலையில் இருக்கும்.
உணவில் எளிமை – ஆரோக்கியமான, சிக்கலற்ற உணவுகள் மனம் மற்றும் உடலுக்கு நன்மை தரும். சமைக்காத பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிட்டோமானால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பதோடு சமையல் வேலைப்பளுவும் குறையும்.
கடமைகள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் – எல்லாவற்றையும் தனியாகச் செய்ய முயலவேண்டாம்; பிறரிடம் உதவி கேட்கவும் பகிரவும் தயங்க வேண்டாம்
ஆடைகள் மற்றும் ஆபரணங்களை குறைப்பது இது எளிமையான வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு படியாகும். இதை செயலில் கொண்டு வர வேண்டியவை
தினசரி, வேலை, விசேஷம் என அனைத்துக்கும் அடிப்படை தேவை உள்ள ஆடைகளை மட்டும் வைத்திருங்கள். எல்லா ஆடைகளும் ஒருவருக்கு இயற்கையான நிறங்களில் (neutral colors) இருப்பதால் ஒரு மேச்சு பிரச்னை இருக்காது.
“capsule wardrobe” என்ற முறை: குறைந்த எண்ணிக்கையிலான ஆடைகளையே வைத்து பல வகைகளில் பயன்படுத்தலாம். சில காட்டன் ஆடைகளை வைத்துக்கொண்டு மிகவும் நேர்த்தியாக அணிந்து மகிழலாம்.
ஆபரணங்களை எளிமைப்படுத்துங்கள்:
தினமும் அணியக்கூடிய சில நேர்த்தியான துண்டுகளை மட்டுமே வைத்திருங்கள் அதிகமானவை நம்மை குழப்பத்துக்கும், தேவையற்ற ஆசைக்கும் இட்டுச் செல்லும். பல வகைகள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் வைத்திருப்பவை நல்ல தரம் மற்றும் நீடித்துவைக்கும் வகையில் இருக்கட்டும்.
தானம் செய்யுங்கள்: நீங்கள் பயன்படுத்தாத ஆடைகள் மற்றும் ஆபரணங்களை தேவையுடையவர்களுக்கு கொடுப்பது உங்களுக்கும் மனநிறைவுதரும்.
புதியவை வாங்கும் முன் யோசியுங்கள்:“இது எனக்கு உண்மையாகவே தேவையா?”என்ற கேள்வி முன் கேளுங்கள். அப்போது தேவையற்றதாக மனதில் தோன்றினால் அதை நாம் அதிகமாக பயன்படுத்த மாட்டோம். அதை வாங்குவதை நிறுத்தி கொள்ளலாம்.
இவற்றை எல்லாம் தொடர்ச்சியாகச் செய்வதால், வாழ்க்கையில் எளிமை, நேரம், மன அமைதி, மகிழ்ச்சி, ஆகியவை இயல்பாகவும் நிலைத்ததாகவும் அமையும். மகிழ்ச்சிக்கு குறையேதும் இருக்காது.