
பிரச்னைகளைக் கண்டு பயந்து பின் வாங்காமல் இருக்கப் பழக வேண்டும். காற்றை எதிர்த்துதான் பட்டங்கள் மேலே பறக்கின்றன என்பதை நினைவில் கொண்டால் போதும். தோல்விகள் ஏற்படும் பொழுது துவண்டுவிடாமல், எதிர்ப்படும் தோல்விகளால் அடிபட்டு நொறுங்கி விடாமல் உடனே விழித்தெழுந்து நின்று விடவேண்டும். இல்லையெனில் இந்த உலகம் நம்மை யார் என்ற சுவடே தெரியாமல் புதைத்துவிடும். காலம் நம்மை எவ்வளவு தான் சோதித்தாலும் சாதிப்பது நம் கையில்தான் உள்ளது.
வாழ்வில் வெற்றி தோல்வி என்று எதுவும் கிடையாது. போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்தான். தடைகள் பல வரலாம். நம் முன்னேற்றத்தை தடுக்க ஒரு பெரிய கூட்டமே சதி செய்யலாம். ஆனால் எதைக் கண்டும் அஞ்சாமல் துணிந்து முன்வைத்த காலை பின் வைக்காமல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், முயற்சியுமே வெற்றிக்கான படிக்கட்டுகள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வெற்றி பெறுவது என்பது நம்மை இந்த உலகிற்கு நாம் யார் என்பதை அறிமுகம் செய்யும். ஆனால் தோல்வி என்பதோ நம்மை நாமே அறிந்து கொள்ளவும், நம்முடைய பலவீனங்களை பற்றி தெரிந்துகொள்ளவும் உதவும்.
போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தோல்வி நம்மை துரத்தும் பொழுது சோர்வடையாமல் வெற்றியை நோக்கி தளராமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வெற்றியை சிரித்த முகத்துடன் சந்தோஷமாக எதிர்கொள்ள தெரிந்த நமக்கு தோல்வியை எதிர்கொள்ளத் தேவையான தைரியமும், துணிச்சலும் வேண்டும்.
வெற்றியின் வாசலை மிதிக்க வேண்டுமானால் தோல்வியை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அதைப் பற்றிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் தோல்வியிடம் வழி கேட்டு தான் வெற்றியின் வாசல் படிக்கு வந்து சேர முடியும். தோல்வியின் மூலம் தான் வெற்றியின் அருமை நமக்குப் புரியும். தோல்விகள் தான் நம்மை உருவாக்கும். எனவே நம்பிக்கையுடன் எடுக்கும் முயற்சியை கைவிடாது தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றிப் பாதை நம் கண்களுக்கு எளிதாக புலப்படும். தோல்வி ஏற்படும் பொழுது உண்டாகும் அனுபவம்தான் சிறந்தது. இது பல நூறு ஆசிரியர்களுக்கு சமமாக இருக்கும்.
தோல்வியையும் துயரத்தையும் மனதில் தூக்கி சுமக்க வேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் கொண்டு முன்னோக்கி சென்று கொண்டே இருக்கலாம். நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சியும், போராட்டங்களும். நாம் நினைத்ததை முடிக்கும் வரை அயராது உழைப்பதே உண்மையான முயற்சியாகும். தொடர்ந்து போராடி வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் தோற்பதும் வெற்றிக்கு சமமானதுதான்.ஒரு செயலில் தோல்வி அடைந்தாலும் அதற்காக வருத்தப்படாமல் அந்த செயலில் ஈடுபட்டதற்காக பெருமைப்பட வேண்டும்.
இது ஒரு வெற்றியின் அடையாளம் என்றெண்ணி முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடுவதுதான் முக்கியம். தோல்வியைப் பற்றி எதிர்மறையாக எண்ணாமல் நேர்மறையாக அணுகுவது அவசியம். வெற்றி பெறும் வரை முயற்சியை தொடர்வது நம்முடைய மனவலிமையை அதிகரிக்கும்.