

விஷயங்கள் தவறாக நடக்கும்பொழுது நம்மில் பலர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக மற்றவர்களை குறை கூறும் போக்கைக் கொண்டுள்ளோம். இது உறவுகளை சேதப்படுத்தும். தனிப்பட்ட வளர்ச்சியை தடுக்கும். அத்துடன் வாழ்வில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.
வெற்றி பெறும்பொழுதெல்லாம் நாம்தான் அதற்குக் காரணம் என்று மார்தட்டிக்கொள்ளும் நாம், தோல்வி ஏற்படும்பொழுது மட்டும் பழியை கூசாமல் பிறர் மீது போட்டு விடுவது வழக்கமாக உள்ளது. நாம் செய்யும் தொழிலில் லாபம் வந்தால் அதற்கு நம்முடைய உழைப்பும், முயற்சியும், நம்முடைய திறமையும் தான் என்று கூறிக் கொள்வோம். அதுவே நஷ்டம் ஏற்படும் பொழுது பிறரை கைகாட்டி விடுவோம். யார் மீதும் பழிபோட முடியவில்லை என்றால் துரதிர்ஷ்டம் என்று கூறி தப்பித்துக்கொள்வோம்.
மற்றவர்கள் மீது பழி போடுவது பெரும்பாலும் நம்முடைய சுய பிம்பத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்வதால் தான். நாம் ஒரு தவறு செய்து தோல்வியை எதிர்கொள்ளும்போது அதை ஒப்புக் கொள்வது கடினமாக இருக்கலாம். எனவே பழியை பிறர் மீது சுமத்தி விடுகிறோம். இது நம்மை சரியானவர்கள், திறமையானவர்கள் என்ற மாயையை தக்கவைத்துக் கொள்வதற்காக, நம் சுயமரியாதையை பாதுகாப்பதற்காக செய்யும் வேலை.
நாம் அடையும் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதற்கு நமக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் நிச்சயம் தேவை. தன்னம்பிக்கை உடையவர்கள் ஒரு பொழுதும் தாங்கள் அடையும் தோல்விக்கு, நஷ்டத்திற்கு பிறர் மீது பழி சொல்ல மாட்டார்கள். தவறுக்கு துணிந்து பொறுப்பேற்பார்கள்.
அத்துடன் தவற்றை திருத்திக்கொண்டு மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். மன தைரியமும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள்தான் பிறர் மீது குறை சொல்வதும், பழி போடுவதும், அவர்கள் இல்லாத பொழுது அவர்களை விமர்சிப்பதும் என்று இருப்பார்கள்.
தன் மீது இருக்கும் தவறை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் தங்கள் தவறுகளுக்கு வக்கீலாக இருந்து வாதாடுவார்கள். தாங்கள் செய்தது தவறு இல்லை என்று வாதாடுவதுடன் பிறர் மீது பழி போடவும் தயங்கமாட்டார்கள். ஆனால் அடுத்தவர்கள் தவறு செய்யும் பொழுது மட்டும் நீதிபதியாக இருந்து தீர்ப்பு தருவார்கள். இப்படி பிறர் மீது பழி போடும் குணத்தை வளர்த்துக்கொண்டால் அது ஒரு தொடர்கதை ஆகிவிடும்.
இப்படி பிறர் மீது பழி போடும் வேலையில் சுவை கண்டுவிட்டால், எப்பொழுது தோல்வி ஏற்பட்டாலும் அல்லது வாழ்வில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அதற்கு பிறர் மீது பழியை போட்டுவிட்டு தாம் குற்றமற்றவர் என்று காட்டிக்கொள்ளும் மனோபாவம் நிலைத்துவிடும்.
இது முற்றிலும் தவறான செயல். இதனால் தங்களைத் திருத்திக் கொண்டு முன்னேறும் வாய்ப்பையும் இழந்துவிடுவோம். பழியை பிறர் மீது சுமத்திடும் இந்த கெட்ட பழக்கம் ஒரு தொற்றுநோய் போல நம்மைச் சுற்றி இருக்கும் மக்களுக்கும் எளிதில் பரவிவிடும்.
குடும்பத்தில் கணவனிடமிருந்து மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் என இந்நோய் தொற்றிக்கொண்டால் குடும்பத்தின் நிலை என்ன ஆகும் தெரியுமா? எந்த தவறுக்கும் யாரும் பொறுப்பேற்காமல் பிறரை சுட்டிக்காட்டுவதே வழக்கமாகிவிடும். இதனால் குடும்பத்தில் அமைதி குலைந்துவிடும்.
இதற்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? பிறர் மீது பழி சுமத்தாமல் நம் செயல்களுக்கு நாம்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். செய்வோமா?